தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையின் கருத்திற்கு வைகோ கடும் எதிர்ப்பு.!!

தமிழகம்

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் கருத்துக்கு வைகோ கடும் எதிர்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலை குறித்த வழக்கு, டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கோயல் தலைமையிலான அமர்வில் இன்று (20.08.2018) விசாரணைக்கு வந்தது.

அப்போது ஸ்டெர்லைட் ஆலை தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம், அரசியல் கட்சிகளின் தூண்டுதலால்தான் தூத்துக்குடியில் போராட்டம் நடந்தது. பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இங்கு வந்துள்ள வைகோ போன்ற அரசியல கட்சித் தலைவர்கள் தொடக்கத்திலிருந்து எதிர்த்து வருகின்றனர் என்று கூறினார்.

அதற்கு வைகோ, 22 ஆண்டுகளாக மக்கள் நலனுக்காக, சுற்றுச் சூழலைக் காப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வருகிறேன். நான் தொடுத்த ரிட் மனு மீது 2010 ஆண்டு ஆலை மூடப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் ஆலையைத் திறப்பதற்குத் தீர்ப்பளித்தாலும், நீதிபதிகள் என்னுடைய பொதுநல நோக்கத்தையும், பணியையும் அந்தத் தீர்ப்பில் பாராட்டினார்கள். சக்திவாய்ந்த பெரிய நிறுவனங்களை எதிர்த்துப் போராட ஒருசிலர்தான் வருவார்கள். அப்படி ஈடுபடுகிறவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றும் அத்தீர்ப்பில் குறிப்பிட்டார்கள் என்று கூறினார்.

2018 மே 22 இரத்தம் தோய்ந்த துக்க கரமான நாளாகும். பல்லாயிரக்கணக்கான மக்கள் தாங்களாகவே ஸ்டெர்லைட்டை எதிர்த்து அறப்போராட்டம் நடத்தினர். ஏராளமான பெண்களும், மாணவ – மாணவிகளும் கலந்துகொண்டனர்.

காவல்துறை திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், மாணவிகள் உள்ளிட்டோர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். வெளி மாநிலங்களிலிருந்து போராட்டத்தைத் தூண்ட எவரும் வரவில்லை. தூத்துக்குடியிலும், சுற்றுவட்டாரத்திலும் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஸ்டெர்லைட் ஆலை நச்சு வாயுவினால் புற்றுநோய், நுரையீரல் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என வைகோ கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலை குறித்த அனைத்து அம்சங்களையும் விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைக்க தீர்ப்பாயம் முடிவுசெய்தபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் நீதிபதிகளில் ஒருவரை நியமிக்கலாம் என்று நீதிபதி கோயல் அவர்கள் கூறியதற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த நீதிபதியையும் நியமிக்கக் கூடாது. அவர்கள் தமிழ்நாட்டு மக்களுடைய மனோநிலையை பிரதிபலிக்கும் நிலையை எண்ணிப் பயப்படுவார்கள். கேரளா, அல்லது கர்நாடகாவைச் சேர்ந்த நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார்.

அதற்கு வைகோ கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகள் நடுநிலை தவறாத நேர்மையாளர்கள். அவர்கள் நேர்மையைச் சந்தேகப்படும் விதத்தில் ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் கூறி இருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது; எங்கள் மனதை மிகவும் துன்புறுத்துகிறது. யாரை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் முடிவெடுக்கட்டும். ஆலை நிர்வாகம் சொல்லக்கூடாது என்று வைகோ கூறினார்.

முன்னாள் நீதிபதி ஒருவரின் தலைமையில் இரண்டு வாரத்திற்குள் குழு அமைக்கப்படும் என்றும், நான்கு வாரத்திற்குள் அந்தக் குழு தனது விசாரணை முடிவை தெரிவிக்கும் என்றும் தீர்ப்பாய நீதிபதி கோயல் கூறினார்.

தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் வைகோ அவர்களுடன் கழக சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ் அவர்களும், வழக்கறிஞர் ஆனந்தசெல்வமும் பங்கேற்றார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *