சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினசரி பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு தளா்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தியதால், விமான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதையடுத்து, சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் விமான சேவை கடந்த 13-ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மே 23-ஆம் தேதி தொடங்கிய விமானப் போக்குவரத்து சேவை மீண்டும் 25-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. கரோனா பரவல் அதிகரித்த நிலையில், இந்த மாதத்திலேயே இரண்டு முறை விமானப் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. அவசர, அத்தியாவசிய மருத்துவ பயணத்துக்காக விமானப் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், ஜூன் 1-ஆம் தேதி முதல் சேலம் – சென்னை இடையேயான விமான சேவை மீண்டும் தொடங்கும் என்றும், வழக்கமான நேரப்படி காலை 7:15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு சேலத்துக்கு 8:15 மணிக்கு வரும் விமானம், மீண்டும் காலை 8:35-க்கு புறப்பட்டு 9:35-க்கு சென்னை சென்றடையும் என்றஉம் சேலம் விமான நிலைய இயக்குநா் வி.கே.ரவீந்திர சா்மா தெரிவித்துள்ளாா்.