கேரள வெள்ளம் காரணமாக பம்பையில் வெள்ளப்பெருக்கு தொடர்கிறது ஓணம் வழிபாட்டுக்காக சபரிமலை செல்ல முடியாமல் பக்தர்கள் வருத்தம்!!

சென்னை

கேரள வெள்ளம் காரணமாக பம்பையில் வெள்ளப்பெருக்கு தொடர்கிறது: ஓணம் வழிபாட்டுக்காக சபரிமலை செல்ல முடியாமல் பக்தர்கள் வருத்தம்!!

திருவனந்தபுரம்: பம்பையில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலை தொடர்கிறது. இதனால் வழக்கமாக ஓணம் தினத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் சபரிமலை ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கேரளா மக்களுடைய முக்கிய திருவிழாவான ஓணம் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த 10 நாட்களில் முக்கிய திருநாளான திருவோணத்தன்று சபரிமலையில் இருக்கின்ற ஐயப்பனை தரிசிப்பது கேரளா மக்களுடைய வழக்கம். ஆனால் சமீபத்தில் பெய்த பெருவெள்ளம் கேரளாவை புரட்டிப்போட்டிருக்கிறது.  10 லட்சத்திற்கும் மேலான மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். 400 மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

சபரிமலையில் குறிப்பாக பம்பையில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதின் காரணமாக கடந்த 14ம் தேதி முதல் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம் என்று தேவசனம்போர்டு அறிவித்திருந்தது. திருவோணத்தை முன்னிட்டு கடந்த 23ம் தேதி நடை திறக்கப்பட்டது. 27ம் தேதி வரை இந்த நடை திறக்கப்பட்டிருக்கும். ஆனால் வழக்கமான பூஜைகள் ஆராதனைகள் ஐயப்பனுக்கு நடைபெற்றாலும் கூட பக்தர்கள் யாரும் அங்கு செல்ல முடியாத நிலையே தான் தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக கேரளாவின் உயர்நீதிமன்றம் பொதுமக்கள் அங்கு செல்வதற்கான பாதுகாப்பு இல்லை, தேவையான பாதுகாப்புகளை செய்த பின்பு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவினையும் பிறப்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சபரிமலைக்கு செல்லக்கூடிய குறிப்பாக பம்பையை கடந்து செல்லக்கூடிய பாதையில் முழுவதுமாக இன்னும் பம்பையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. தண்ணீர் சற்று குறைந்திருந்தாலும் கூட ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்பினை நாம் நேரடியாக காணமுடியும். இங்கிருக்கின்ற மரங்கள் குறிப்பாக பொதுமக்கள் வந்து தங்கி செல்லக்கூடிய அறைகள் அனைத்துமே இந்த பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கிறது. எனவே தற்போது பொதுமக்கள் பம்பையை கடந்து சென்று நேரடியாக சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க முடியாத நிலை இருக்கிறது.

வெள்ளம் குறைந்தால் மட்டுமே இங்கிருக்கும் பக்தர்கள் மேலே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பாக நிலக்கல்லில் இருந்து சபரிமலைக்கு வரக்கூடிய பாதைகளில் இன்றும் பல இடங்களில் மலைச்சரிவுகள் சேதங்கள் ஏற்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. இன்னும் சில மாதங்களில் மண்டல பூஜை, மகர ஜோதி ஆகிய நிகழ்வுகள் வர இருக்கின்ற நிலையில் இந்த சேதங்களை எல்லாம் உடனடியாக சீர்ப்படுத்த வேண்டிய நிலைக்கு கேரளா அரசும், திருவாங்கூர் தேவசனம் போர்டும் இருக்கிறது. திருவோணத்தன்று ஐயப்பனை வந்து தரிசிக்க முடியவில்லை என்கின்ற வருத்தம் கேரளா மக்களிடையே மட்டுமின்றி சுற்றியுள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *