ஆப்கானுடன் இன்று மோதல்: இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு ஒய்வு இன்று .!!

விளையாட்டு

ஆப்கானுடன் இன்று மோதல்: இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு ஒய்வு இன்று .!!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் சம்பிரதாய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இந்திய அணி சந்திக்கிறது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. இரண்டு லீக்கிலும் தோல்வி யடைந்த இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறிவிட்டன.

சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். அதன்படி சூப்பர்-4 சுற்று ஆட்டத்தில் பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகளை வென்று இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறிவிட்டது. இந்த போட்டி தொடரில் இந்திய அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோதுகிறது.

ஆப்கானிஸ்தான் அணி லீக் ஆட்டத்தில் இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து தனது பிரிவில் முதலிடம் பிடித்தது. ஆனால், ‘சூப்பர்-4’ சுற்றில் பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளிடம் போராடி தோல்வியடைந்து, இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்துவிட்டதால் இன்றை ய போட்டி சம்பிரதாய போட்டிதான். இதில் ஆறுதல் வெற்றி பெற ஆப்கான் அணி கடுமையாக போராடும். அந்த அணியில், ஹஷ்மத்துல்லா ஷஹிதி, முகமது ஷாசாத், முகமது நபி, ரஷித் கான், முஜிபுர் ரஹ்மான் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தும் நெருக்கடியை சமாளிக்கும் அனுபவம் இன்னும் இல்லை.

இந்திய அணியின் பேட்டிங்கில் தவான், கேப்டன் ரோகித் சர்மா, அம்பத்தி ராயுடு ஆகியோர் நன்றாக ரன் குவித்து வருகிறார்கள். மிடில் ஆர்டரில் தோனி, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பந்து வீச்சிலும் இந்திய அணி சிறப்பாகவே செயல்படுகிறது.

இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி விட்டதால் இன்றைய போட்டியில் தவான், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. அவர்களுக்கு பதிலாக கே.எல்.ராகுல், தீபக் சாஹர், சித்தார்த் கவுல், கலீல் அகமது ஆகியோரில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மாலை 5 மணிக்கு போட்டி தொடங்குகிறது. அபுதாபியில் நாளை நடைபெறும் ‘சூப்பர்-4’ சுற்று கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான்-பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டியில் இந்தியாவை சந்திக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *