மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!!

தமிழகம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் சென்னை, தலைமை நிலையம், ‘தாயக’த்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

தீர்மானம் எண் : 1
மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தை எல்லா வகையிலும் வஞ்சித்து வருவது இன்னமும் தொடருகிறது. தமிழகத்தின் ஈராயிரம் ஆண்டுகால காவிரியின் மரபு உரிமையை தட்டிப் பறித்து, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் நீர்த்துப்போகச் செய்ய காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்காமல் அலட்சியப்படுத்தியது.
உச்சநீதிமன்ற தலையீட்டின் பேரில்தான் பெயரளவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தது.
கர்நாடகாகாவிரி ஆற்றின் குறுக்கே ஒப்பந்தங்களை மீறியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமலும், மேகதாட்டுவில் தடுப்பு அணை கட்டுவதற்கு தொடக்கத்திலிருந்தே மத்திய பா.ஜ.க. அரசு ஆதரவாக செயல்பட்டு வருவதை கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்து வருகிறார்.
மேகதாட்டுவில் தடுப்பணை கட்டுவதற்கு கர்நாடகம் அனுப்பிய செயல்திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத்துறை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அனுப்பி இருப்பது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.
காவிரி பாசனப் பகுதிகளை பாலைனமாக்கும் வகையில் மீத்தேன், ஹைட்ரோ ஹார்பன், ஷேல் எரிவாயு போன்ற நாசகாரத் திட்டங்களை செயல்படுத்த பா.ஜ.க. அரசு முனைந்துள்ளது. காவிரி விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், மேற்கண்ட திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் போட்டு, பணி ஆணையையும் மத்திய அரசு வழங்கி உள்ளது.

ஆளும் அ.தி.மு.க. அரசை மிரட்டிப் பணிய வைத்து நாகை, கடலூர் மாவட்டங்களை பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக அறிவித்து, சுமார் 57,500 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்த 2017 ஜூலை 19 ஆம் தேதி அறிவிக்கை வெளியிட ஏற்பாடு செய்தது.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக விவசாயிகளின் கோரிக்கையை அலட்சியப்படுத்திவிட்டு அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக சோழவள நாட்டை காவு கொடுக்க மோடி அரசு திட்டமிட்டுச் செயல்படுகிறது.
கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி கஜா புயலால் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பனிரெண்டு மாவட்டங்கள் பேரழிவுக்கு ஆளாகின. நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவிக்காததும், மீளவே முடியாத துயரத்தில் தள்ளப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறாததும், தமிழகத்தின் மீது அவருக்கு இருக்கின்ற வன்மத்தை வெளிக்காட்டுகிறது.

மருத்துவக் கல்விக்கு நீட் நுழைவுத் தேர்வு கொண்டுவந்து, சாதாரண ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மாணவர்களின் மருத்துவராகும் கனவை மோடி அரசு தகர்த்தது மட்டுமின்றி, சமூக நீதியையும் சவக்குழிக்கு அனுப்பிவிட்டது.
தூத்துக்குடி வட்டாரத்தையே அழித்து வரும் நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து மக்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தை எடப்பாடி அரசின் காவல்துறையை ஏவி ஒடுக்கியது மட்டுமின்றி, 13 அப்பாவி மக்களை சுட்டுக் கொன்ற கொடுமைக்கு பா.ஜ.க. அரசுதான் பின்னணியில் இருந்தது.
இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலை, தேனி பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தைச் செயல்படுத்தி, அந்தப் பகுதியின் சுற்றுச் சூழலுக்கும், ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணைக்கும் கேடு விளைவிக்க முனைந்துள்ளது.

நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒற்றைக் கலாச்சாரம் என்பதை நிலைநிறுத்த மதவெறி சனாதன சக்திகள் ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு ஆட்டம் போடுகின்றன.
திராவிட இயக்கம் சமத்துவ, சமதர்மக் கோட்பாட்டை விதைத்த மண்ணில், வட ஆரியப் பண்பாட்டு கலாச்சாரத்தைத் திணிக்கவும், மனுதர்ம சித்தாந்தத்தை செயல்படுத்தவும் மத்திய பா.ஜ.க. அரசு எல்லா வகையிலும் முயற்சிக்கிறது.
தமிழ்; தமிழ்நாடு; தமிழர் நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தமிழக மக்களின் கொந்தளிப்பைத் தெரிவிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எப்போது, எந்தத் தேதியில் தமிழகம் வந்தாலும் கருப்புக்கொடி அறப்போராட்டம் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நடத்தப்படும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. அறைகூவல் விடுக்கிறது.

தீர்மானம் எண் : 2

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் மதிக்காத கர்நாடக மாநிலம், காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்டும் முயற்சியைத் தீவிரப்படுத்தி வருகின்றது.

மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு 5,912 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, செயல்திட்ட வரைவு அறிக்கையை 2018 செப்டம்பரில் மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் கேட்டது. தமிழகத்திற்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் பா.ஜ.க. அரசு நவம்பர் 26, 2018-இல் ஒப்புதல் இதற்கு அளித்து இருக்கின்றது.
அதற்கு முன்பு, கர்நாடகம் புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 15.12.2014 மற்றும் 27.03.2015 ஆகிய தேதிகளில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது. இந்நிலையில், மீண்டும் டிசம்பர் 6, 2018-இல், கர்நாடகம் தடுப்பு அணை கட்ட மத்திய அரசு வழங்கி உள்ள ஆய்வு அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.
இதற்கு இடையே காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் இரண்டாவது கூட்டம் டெல்லியில் டிசம்பர் 3, 2018 அன்று நடைபெற்றது. தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளப் பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், ‘கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டினால் தமிழகத்தின் உரிமைகள் கடுமையாகப் பாதிக்கப்படும்’என்றுதமிழகம்கடும்எதிர்ப்புத்தெரிவித்தது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் பொருள் நிரலில் மேகேதாட்டு விவகாரம் பற்றி தகவலுக்காக மட்டும் தெரிவிக்கப்பட்டது என்று கூறி, அது தொடர்பான விவாதத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் எந்தத் திட்டத்தையும் செயற்படுத்த முடியாது என்று ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தெரிவித்தார்.
மத்திய அரசின் நீர்வள ஆணையத்தின் முழு நேரத் தலைவராக உள்ள மசூத் ஹூசைன், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் பொறுப்பையும் கூடுதலாக வகிக்கின்றார்.

காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகத்தின் திட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் நீர் வள ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் அனுமதி வழங்கிய மசூத் ஹூசைன், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் அணை கட்டுவதற்கு மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் பெற வேண்டும் எனவும் கூறுகின்றார்.
இந்நிலையில்தான், காவிரி ஆணையத்திற்கு முழு நேரத் தலைவரை நியமித்திட மத்திய அரசுக்கு உத்திரவிடக் கோரி, டிசம்பர் 8, 2018-இல் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையர் அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மற்றும் கர்நாடக மாநில அரசுக்கு எதிராக டிசம்பர் 5, 2018-இல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தாக்கல் செய்து இருக்கின்றது.

இந்தச் சூழலில், டிசம்பர் 27, 2018 அன்று கர்நாடக மாநில முதல் அமைச்சர் குமாரசாமி, டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரைச் சந்தித்து மேகேதாட்டு அணை தொடர்பாக விவாதித்தார். தமிழக-கர்நாடக மாநில முதல்வர்களின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டதாகவும், அதனை ஏற்றுக் கொண்ட மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இரு மாநில முதல்வர்களின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததாகவும் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்து உள்ளார்.
கர்நாடக மாநில அரசின் சூழ்ச்சி வலையில் சிக்காமல் தமிழக அரசு, காவிரியில் தடுப்பு அணை அமைக்கும் கர்நாடகத்தின் திட்டத்தைச் சட்டபூர்வமான முறையில் தடுத்து நிறுத்த வேண்டுமே தவிர, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கர்நாடக மாநில அரசுடன் மேகேதாட்டு அணை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இசைவு அளிக்கக் கூடாது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் : 3

இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையத்தைப் புதிதாக அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரைத்து உள்ளது. இதனை ஏற்றுக் கொண்டுள்ள மத்திய அரசு, இதற்கான சட்ட முன்வடிவு ஒன்றைக் கடந்த 2017 டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து இன்னும் நிறைவேறாத நிலையில், பா.ஜ.க. அரசு செப்டம்பர் 26, 2018-இல் தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவையில் முடிவு செய்தது. இந்த அவசர சட்டத்திற்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து இருக்கின்றார்.
1933-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் அமைக்கப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பிறகு, 1956-ஆம் ஆண்டு பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு, இதுவரை நடைமுறையில் இருக்கின்றது.

மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் ஊழல்; தனியார் மருத்துவக் கல்லூரிகள் பெருந்தொகையைப் பெற்றுக் கொண்டு தகுதியற்ற மாணவர்களை மருத்துவக் கல்லூரியில் சேர்த்து விடுகின்றன; இதனால் தகுதி, திறமை இல்லாத மருத்துவர்கள் உருவாகி வருகின்றனர். இதனைத் தடுப்பதற்கு, இந்திய மருத்துவக் கவுன்சில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; எனவே, தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படுகிறது என்று மத்திய அரசு கூறுகின்றது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகள் ஊழலை ஊக்குவிக்கும் வகையில்தான் இருக்கின்றன என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்து இருக்கின்றது.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் 60 விழுக்காடு இடங்களை அரசுக்கு அளித்து விட்டு, 40 விழுக்காடு இடங்களைத் தங்கள் விருப்பம் போல் கட்டணம் நிர்ணயம் செய்து நிரப்பிக் கொள்ளலாம் என்று புதிய விதிகள் அனுமதிக்கின்றது. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அரசே நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்து வருவதை மாற்றி, மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கே அந்த உரிமையை வழங்குவதால் ஊழலை ஒழிக்க முடியாது.
தற்போதுள்ள நடைமுறையின்படி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கல்வியில் இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்புப் படிப்பைத் தொடங்கவும், மாணவர்கள் சேர்க்கையைத் தீர்மானிக்கவும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதியைப் பெற வேண்டும். ஆனால், தற்போது தேசிய மருத்துவ ஆணையம், இத்தகைய அனுமதி பெறத் தேவை இல்லை; தனியார் கல்லூரிகள் தங்கள் விருப்பம் போல மருத்துவப் படிப்புக்கான இடங்களை உயர்த்திக் கொள்ளலாம்; புதிய பாடப் பிரிவுகளைத் தொடங்கிக் கொள்ளலாம் என வரையறுக்கின்றது.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்த மருத்துவக் கல்லூரிகள் மீதான உரிமையையும் தேசிய மருத்துவ ஆணையம் தட்டிப் பறித்து விட்டதால், மத்திய அரசின் ஏகபோக ஆதிக்கத்திற்கு மாநிலங்கள் அடிபணிந்திட வேண்டும் என்ற ஏதேச்சாதிகார முறையை பா.ஜ.க.அரசு ஏற்படுத்தி இருக்கின்றது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் அனைவரும் மத்திய அரசால் நியமனம் செய்யப்படுவர்; மாநிலங்களின் சார்பில் ஏதாவது ஐந்து மாநிலங்களின் சார்பில் மட்டும் உறுப்பினர்கள் இடம் பெறுவர். மற்ற மாநிலங்களுக்கு சுழற்சி முறையில்தான் உறுப்பினர் வாய்ப்பு இருக்கும்.

மேலும் இந்த ஆணையத்தில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பொருளாதார வல்லுநர்கள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., இந்திய அறிவியல் கழகம் போன்றவற்றின் இயக்குநர்கள், சமூக ஆர்வலர்கள் என மருத்துவம் சாராத பலரையும் மருத்துவ ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிப்பதற்கு பா.ஜ.க. அரசு வழிவகை செய்துள்ளது.
இதன்மூலம் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் தொடர்புடைய பலரும் தேசிய மருத்துவ ஆணையத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிலையை பா.ஜ.க. அரசு உருவாக்கி இருக்கின்றது.

ஓமியோபதி மற்றும் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி போன்ற முறைகளில் மருத்துவம் பயின்றவர்களுக்கு 6 மாத பயிற்சி அளித்து அவர்களை நவீன மருத்துவம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும், ‘பிரிஜ் கோர்ஸ்’ எனப்படும் பயிற்சி தரப்படும் என்று புதிய விதிகள் கூறுவதை மருத்துவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’தேர்வுகொண்டுவந்துஏழைஎளியமாணவர்களின்கல்வி உரிமையைப் பறித்த பா.ஜ.க. அரசு, தற்போது ஒட்டுமொத்த மருத்துவக் கல்வியை வணிகம் ஆக்குவதற்கும், மத்திய அரசின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கவும், மாநில உரிமைகளை நசுக்குவதற்கும் கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவ ஆணைய அவசரச் சட்டத்தையும், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவையும் திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் : 4

தமிழ்நாட்டில் 43 ஆயிரத்து 200 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன; இதன்மூலம் 50 இலட்சம் ஏழை மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
ஒவ்வொரு சத்துணவு மையத்திலும் அமைப்பாளர், உதவியாளர் என இரு ஊழியர்கள் வீதம் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் 25 மாணவர்களுக்கும் குறைவாக செயல்படும் 8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடி விட தமிழக அரசு முயற்சித்து வருகின்றது. மூடப்பட உள்ள மையங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு வேறு மையங்களில் இருந்து உணவு சமைத்து, தேவைக்கு ஏற்ப அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கின்றது.

ஏழை மாணவர்களின் வருகையை ஊக்கப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட சத்துணவுத் திட்டத்திற்கு அ.இ.அ.தி.மு.க. அரசு மூடுவிழா நடத்த முனைவது திராவிடப் பெருந்தலைவர் சர்.பிட்டி.தியாகராயர், பெருந்தலைவர் காமராஜர், எம்.ஜி.ஆர்., டாக்டர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் நோக்கத்தையே சீர்குலைக்கும் நடவடிக்கை ஆகும்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் தேவையான வழிவகைகளையும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல், மாணவர் எண்ணிக்கையைக் காரணமாக காட்டி சத்துணவு மையங்களை மூடக்கூடாது என்று மறுமலர்ச்சி தி.மு.க., வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் : 5

தூத்துக்குடி மாநகரத்தைச் சேர்ந்த மக்களுக்கும், அதன் சுற்று வட்டார மக்களுக்கும் பெரும் கேடாக அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தொடர்ந்து 22 ஆண்டுகளாக மக்கள் மன்றத்திலும், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் போராடி வருகின்றார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்து வாதாடினார். செப்டம்பர் 28, 2010-இல் மாண்பமை நீதிபதிகள் எலிபி தருமராஜ், நீதிபதி பால் வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குத் தீர்ப்பு அளித்தது.
பின்னர், உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு மேல் முறையீட்டுக்குப் போனபோதும், கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அடுக்கடுக்கான வாதங்களை முன் வைத்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாண்புமிகு ஜே.பி. பட்நாயக், கோகலே ஆகியோரைக் கொண்ட அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு 2013, ஏப்ரல் 2-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பில், கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சுற்றுச்சூழலைக் காக்கப் போராடுவதற்கு நீதிபதிகள் பாராட்டுரை வழங்கினர்.

இந்நிலையில்தான், 2018 மே 22-இல் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மக்கள் திரள் பேரணி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றபோது, தமிழக அரசு காவல்துறையை ஏவி, காக்கை குருவிகளைச் சுடுவதைப் போன்று 13 பேரை ஈவு இரக்கம் இன்றிச் சுட்டுக் கொன்றது. மக்கள் கொந்தளிப்பைக் கண்ட அ.இ.அ.தி.மு.க., அரசு மே 28, 2018-இல் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மின்சார வாரியம் மூலம் ஆணைகளைப் பிறப்பித்தது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தொடர்ந்த வழக்கு 2018, ஜூன் 22-ஆம் தேதி மாண்பமை நீதிபதிகள் சி.பி. செல்வம், பஷீர் அகமது ஆகியோரைக் கொண்ட அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தபோது, “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உரிய ஆணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்,” என்று வைகோ அவர்கள் கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் “தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி ஆலையை மூடுவதற்குரிய காரணங்களைத் தெளிவுபடுத்தி அரசின் சார்பில் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்,” என்று உத்தரவிட்டனர்.

அதன் பின்னர் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வில் ஆலையைத் திறக்க முறையீடு செய்தது. இது தொடர்பாக ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பு ஆயம் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு தனது அறிக்கையை நவம்பர் 26-ஆம் தேதி தாக்கல் செய்தது. இந்த அறிக்கை மீதான வாதங்களை முன்வைக்க தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் அனுமதி கேட்டபோது, தீர்ப்பு ஆயத்தின் தலைவர் ஏ.கே. கோயல், பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு அனுமதி அளிக்காமல் தீர்ப்பு ஆயத்திலேயே அவமரியாதை செய்தார்.

இருந்தபோதிலும், மக்களுக்காகப் போராடும் இலட்சியத்தில் உறுதி வாய்ந்த பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் டிசம்பர் 10-ஆம் தேதி, டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கடந்த 22 ஆண்டுகளாகத் தாம் போராடி வருவதை எடுத்துக்காட்டி தன் தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி தர வேண்டும் என்று கடுமையாகப் போராடினார்.

ஒரு கட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தன் கருத்தைத் தெரிவிக்க அனுமதி அளிக்காவிடில் இந்தத் தீர்ப்பு ஆயத்தில் எதுவும் நடைபெறாது என்று வெளிப்படையாக தீர்ப்பு ஆயத்தின் நீதிபதியைப் பார்த்து குரல் எழுப்பினார். அதன் பின்னர் வைகோ அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டியதன் அவசியத்தைப் பட்டியலிட்டு குறித்த நேரத்தில் தன் வாதங்களை முடித்தார்.

தமிழக மக்கள் நல்வாழ்வுக்காக நீதிமன்றங்களில் தொடர்ச்சியாகப் போராடி வரும் தலைவர் வைகோ அவர்கள் ஸ்டெர்லைட் வழக்கில் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் போராடி வாதங்களை முன்வைத்ததற்கு மறுமலர்ச்சி தி.மு.கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றது.
வைகோ அவர்கள் கூறியவாறே டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைவர் ஏ.கே. கோயல் தலைமையிலான முதன்மை அமர்வு, கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி அளித்து தீர்ப்பு அளித்துள்ளது. அத்தீர்ப்பில், “ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசு ஆணை வலுவற்றதும் நியாயமற்றதும் ஆகும்; எனவே, வேதாந்தா குழுமத்தின் மேல்முறையீட்டை ஏற்று தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்படுகின்றது; ஆலையின் உரிமத்தைப் புதுப்பிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிதாக உத்திரவு பிறப்பிக்க வேண்டும்; ஆலை இயங்க மின் இணைப்பை மீண்டும் வழங்க வேண்டும்,” என்று தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் விரும்பியவாறு தீர்ப்பு வழங்கி விட்டது.
மக்கள் கண்காணிப்பகத்தின் சார்பில் மனித உரிமைப் போராளி வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள், 2018 டிசம்பர் 21 அன்று ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கின் நிலையை எடுத்துக் கூறியதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் மாண்பமை நீதிபதிகள் சதாசிவம், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது என்றும், ஜனவரி 21-ஆம் தேதி மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும் உத்திரவிட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய பா.ஜ.க. அரசின் அழுத்தத்திற்குப் பணிந்து கபட நாடகம் நடத்தி வரும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை இருப்பின், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க., வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் : 6

மத்திய பா.ஜ.க. அரசு சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமலும், கருத்து ஒற்றுமை ஏற்படுத்தாமலும் “முத்தலாக்”தடைச்சட்டமுன்வடிவைடிசம்பர்27-ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றியது. இரண்டாவது முறையாக மக்கள் அவையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டமுன்வடிவை மாநிலங்களவையிலும் நிறைவேற்ற பா.ஜ.க., அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன.
பாலின சமத்துவம், பாலின நீதி குறித்து பா.ஜ.க. அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. “முத்தலாக்”தடையைஅரசியல்ஆதாயத்துக்காகவே மத்திய பா.ஜ.க., அரசு பயன்படுத்துகின்றது. எனவே, “முத்தலாக்”தடைசட்டமுன்வடிவைஆய்வுசெய்திடநாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு மத்திய அரசு அனுப்பிட வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க., வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் : 7

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், என்.எல்.சி., இந்தியா லிமிடெட், மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக விருத்தாசலம், புவனகிரி வட்டாரங்களைச் சேர்ந்த 26 கிராமங்களில் உள்ள 12,125 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்த மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவனமும் முனைந்து இருக்கின்றன. இதற்காக கடலூர் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், என்.எல்.சி., நிர்வாகமும் இணைந்து பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தைப் பெயரளவுக்கு ஏற்பாடு செய்து இருந்தன. அதில் மூன்றாவது சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டால் வாழ்வாதாரம், வீடு, மனைகளை இழப்போம் என்று 26 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ‘ஒரு பிடி மண்ணைக் கூட தர மாட்டோம்’என்றுஉறுதிபடக்கூறிஇருக்கின்றனர்.

என்.எல்.சி., நிறுவனத்தின் சுரங்கம் ஐ, சுரங்கம் ஐஐ மற்றும் சுரங்கம் ஐ-ஏ (விரிவாக்கம்) ஆகிய மூன்று நிலக்கரிச் சுரங்கங்களுக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இன்னும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தை என்.எல்.சி., நிர்வாகம் பயன்படுத்தாமல் வைத்துள்ளது.
இதுவரை என்.எல்.சி., நிறுவனத்திற்கு நிலம், வீடு கொடுத்தவர்களுக்கு நிர்வாகம் உரிய வேலைவாய்ப்புகளை வழங்கவில்லை; என்.எல்.சி., நிர்வாகம் அளித்த மாற்று மனை மற்றும் நிலத்துக்கு இதுவரை பட்டா வழங்கவும் இல்லை. ஒரு ஏக்கர் நிலத்தில் 127 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி கனிம வளம் இருக்கின்றது. ஆனால், என்.எல்.சி., நிர்வாகம் மிகக் குறைவான தொகையையே இழப்பீடாக வழங்கி உள்ளது. என்.எல்.சி., நிர்வாகம் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் இல்லை.
என்.எல்.சி., இந்தியா லிமிடெட் நிறுவனத்தால் வீடு, நிலங்களை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அந்நிறுவனம் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்காமல் ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களாக ஆக்கி, சொற்ப ஊதியத்தையே அளித்து வருகின்றது.
தற்போது என்.எல்.சி. நிறுவனம் வெளி மாநிலங்களில் இருந்து நிரந்தரத் தொழிலாளர்களையும், ஒப்பந்தத் தொழிலாளர்களையும் வேலைக்கு அமர்த்தி வருகின்றது.

இந்நிலையில், மூன்றாவது சுரங்கம் அமைத்து 11.50 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க 12,125 ஏக்கர் விளைநிலங்களைப் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள என்.எல்.சி., நிறுவனத்துக்குத் தமிழக அரசு துணை போகக் கூடாது. 26 கிராம மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி விளைநிலங்களையும், குடியிருப்புகளையும் கைப்பற்றும் முயற்சியை என்.எல்.சி., நிர்வாகம் கைவிட வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க., வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் : 8

கடந்த நவம்பர் 16-ஆம் தேதி ‘கஜா’புயலில்சிக்கியநாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பேரரழிவுக்கு உள்ளாயின.
குறிப்பாக வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு போன்ற பகுதிகள் வரலாறு காணாத பேரிழப்பைச் சந்தித்து இருக்கின்றன; நூற்றுக்கு மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.

இலட்சக்கணக்கான வீடுகள், குடிசைகள் சேதமுற்றன. விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த காவிரி டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் முழுமையாக அழிந்து விட்டன. நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் சேதம் 30 விழுக்காடு. ஆனால், இலட்சக்கணக்கான மரங்கள் அடியோடு முறிந்து சாய்ந்து போனதால் மக்கள் தங்களது வாழ்க்கையும் தூக்கி நிறுத்த முடியாத அளவுக்கு வீழ்ந்து விட்ட துயரம் நேர்ந்துள்ளது. குறிப்பாக இலட்சக்கணக்கான தென்னை மரங்கள் ஒடிந்து விழுந்ததால் அதனை நம்பி இருந்த விவசாயக் குடும்பங்கள் நொறுங்கி விட்டன.
மீனவ மக்கள் சந்தித்துள்ள பாதிப்புகள் அவர்களது வாழ்வாதாரங்களைப் பறித்து நிர்க்கதியாக்கி இருக்கின்றன. ‘கஜா’புயலால்வாழ்விழந்துபோனமக்களுக்குமறுவாழ்வுதந்து, தன்னம்பிக்கையுடன வாழ்க்கைப் பயணத்தை நடத்தத் தேவையான நிரந்தர ஏற்பாடுகளையும் உதவிகளையும் செய்வதுதான் தமிழக அரசின் முழுமுதல் கடமை என்பதை இக்கூட்டம் வலியுறுத்துகின்றது. ‘கஜா’புயல்சீரமைப்புப்பணிகளுக்கு15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கக் கோரி பிரதமரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தினார். ஆனால், மத்திய அரசு வெறும் 1,146 கோடி ரூபாய் மட்டுமே வழங்க முன்வந்துள்ளது.

காவிரி டெல்டா மக்களைக் காப்பாற்ற மத்திய பா.ஜ.க. அரசு 25 ஆயிரம் கோடி ரூபாய் உதவித்தொகை அளிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க., வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் : 9

மத்திய அரசின் பவர்கிரீட் நிறுவனம், தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்பாக்கத்தில் தற்போது இரண்டு அணுஉலைகள் உள்ளன. கூடுதலாக நான்கு அணுஉலைகள் கட்டுவதற்கான பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. இதே போல கூடங்குளத்தில் தற்போது இரண்டு அணுஉலைகள் மின் உற்பத்தியைத் தொடங்கி உள்ளன. மேலும் கூடுதலாக அணுஉலைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி, நாகப்பட்டினம், உடன்குடி, செய்யாறு, நெய்வேலி, எண்ணுhர் மணலி ஆகிய இடங்களில் அமைய உள்ள அனல் மின் நிலையங்கள் மற்றும் சூரிய ஒளி மின்சக்தி நிலையங்களிலிருந்து இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும், அண்டை நாடுகளான நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கும் மின்சாரம் கொண்டுசெல்லப்பட இருக்கிறது. நமது தொப்பூள்கொடி உறவான ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கைக்கும் கடல் வழியாக மின்சாரம் கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.

கரூர் மாவட்டம் புகளூர் முதல் ராய்கர், திருவலம், மைவாடி, அரசூர், இடையார்பாளையம், திருச்சூர் ஆகிய இடங்களுக்கு பவர் கிரீட் நிறுவனத்தின் மூலமாக உயர் அழுத்த மின் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதே போல தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் அரசூர் முதல் ஈங்கூர் வரை, மைவாடி இணைப்புத் திட்டம், இராசிபாளையம் முதல் பாலவாடி வரை என பல்வேறு உயர் அழுத்த மின்பாதைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
உயர் மின் கோபுரங்களை விளை நிலங்களில் அமைப்பதால் கொங்கு மண்டலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உயர் அழுத்த மின் கம்பிகளால் பந்தல் அமைக்கப்பட்டது போன்று இருக்கும்
உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க விளைநிலங்களில் 40 முதல் 90 மீட்டர் அகலத்திற்கான நிலங்கள் பயன்பாட்டுக்கு எடுக்கப்படுவதால் அந்த இடங்களில் விவசாயம் செய்யவோ, கட்டுமானங்கள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கவோ கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதனால் வேளாண் விளைநிலங்களின் மதிப்பு பெரிதும் குறைவது மட்டும் அன்றி, வேளாண் உற்பத்தியும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.
கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படுவது இல்லை; அதில் வெளிப்படைத் தன்மையும் இல்லை.
தமிழகத்திலிருந்து கேரள மாநிலம் திருச்சூர் வரை நேஷனல் பவர் கீரிட் நிறுவனம் தமிழகத்தில் உயர் மின்கோபுரங்கள் வழிகாவும், கேரள மாநிலத்தில் புதைவடக் கம்பிகள் வழியாகவும் மின்சாரம் கொண்டு செல்கிறது. ஆனால், தமிழகத்தில் விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதால், மூன்று இலட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. தமிழக அரசு இந்தியாவிலேயே அதிக நீளம் கொண்ட 400 கிலோ வாட் உயர் மின் அழுத்த பாதைத் திட்டத்தை சாலை ஓரமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது.

இந்நிலையில், விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதைக் கைவிட்டு, சாலை ஓரமாகவோ அல்லது கேரள மாநிலத்தில் உள்ளதைப் போல் பூமிக்கு அடியில் புதைவடக் கம்பி வழியாகக் கொண்டு செல்ல வேண்டும். வேளாண் விளைநிலங்களைச் சீரழிக்கக் கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் : 10

மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்தும், தொழிலாளர் நலச் சட்டங்களைப் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகத் திருத்தும் முயற்சியைக் கைவிடக் கோரியும், அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ. 18 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம், 58 வயதான அனைவருக்கும் ரூ. 6 ஆயிரம் மாத ஓய்வூதியம், அயல்பணி ஒப்படைப்பு, ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஒழிப்பு, பணிக்கொடையை அதிகரித்தல், பொதுத்துறைகளைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதைக் கைவிடுதல், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 2019 ஜனவரி 8, 9 ஆகிய இரண்டு நாட்கள் பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ள அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் அறைகூவல் விடுத்துள்ளன.
இந்தப் பொது வேலைநிறுத்தத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிக்கின்றது. மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட, தொழிலாளர் வர்க்கம் பிரகடனம் செய்துள்ள பொது வேலைநிறுத்தம் தொடக்கமாக அமைய வேண்டும். எனவே, 2019 ஜனவரி 8, 9 பொது வேலைநிறுத்தத்தை அனைத்துத் தொழிலாளர்களும் வெற்றி பெறச் செய்யுமாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வேண்டுகோள் விடுக்கின்றது.

தீர்மானம் எண் : 11

மத்திய பா.ஜ.க. அரசு மின்சார சட்டம் 2003 இல் திருத்தம் கொண்டுவர, ‘மின்சார சட்ட முன்வடிவு 2018’ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கிறது. இப்புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், மின்விநியோகம் முழுவதும் தனியார் கைகளுக்குச் சென்றுவிடும். ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள மின்வாரியத்தின் கட்டமைப்பைப் பயன்படுத்திக்கொண்டு மின்சாரத்தைக் கொண்டுசெல்லவும், பகிர்மானம் செய்யவும், முதலீடு எதுவும் இன்றி தனியார் நிறுவனங்கள் பயன்பெறும் நிலை உருவாகும். மின்சாரக் கட்டணம் பலமடங்கு உயரும்.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் நிறுத்தப்படும். கைத்தறி, விசைத்தறித் தொழில்களுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிடும்.
மின் உற்பத்தி, மின் விநியோகம் முழுமையாக தனியார் துறையின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் பேராபத்து உருவாகும். இதனால் மாநிலங்களின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கும் நிலை ஏற்படும்.

மத்திய, மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் உள்ள மின்சாரத்துறை புதிய சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு மத்திய அரசின் அதிகாரத்திற்கு மாற்றப்பட்டுவிடும். இதனால் மாநில உரிமை நசுக்கப்படும் நிலைமை ஏற்படும்.
எனவே மின்சார சட்ட திருத்த முன்வடிவு 2018ஐ திரும்பப்பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் : 12

மத்திய அரசு கேபிள் டி.வி.க்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதமாக நிர்ணயித்து இருக்கிறது. மேலும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மக்களே சேனல்களைத் தேர்வு செய்து பார்க்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதன்படி அடிப்படைக் கட்டணம் 155 ரூபாய் எனவும், கட்டணச் சேனல்களை மக்களே தேர்வு செய்து அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது. இந்தப் புதிய முறையால், கேபிள் டி.வி. கட்டணம் 500 ரூபாய் வரை உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்தப் புதிய முறையை திரும்பப்பெற வேண்டும். கேபிள் டி.வி.க்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியையும் முழுமையாக இரத்து செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் : 13

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 27 ஆவது பொதுக்குழு மார்ச் 6, 2019 அன்று காலை 9 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் : 14

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம், 2019 பிப்ரவரி 3 ஆம் தேதி காலை 9 மணிக்கும், மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக் குழு, ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் காலை 10 மணிக்கும் தாயகத்தில் நடைபெறும்.
2019 பிப்ரவரி 3 ஆம் தேதி மாலை 4 மணிக்கு பேரறிஞர் அண்ணா நினைவுநாள் அமைதி ஊர்வலம் மற்றும் அவரது நினைவு இடத்தில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வை நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானம் எடுத்துள்ளது.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *