மலேசியத் தமிழர்களின் இதயம் தமிழ்நேசன் சரிந்தது.!!

சென்னை

இமயம் சரிகிறது
இதயம் அழுகிறது
தமிழ் மலர் – 01.02.2019 – வெள்ளிக்கிழமை

தமிழ் நேசன் உலகத் தமிழர்களுக்கு ஓர் இமயம். மலேசியத் தமிழர்களுக்கு ஓர் இதயம். இமயத்தில் உச்சம் பார்த்த அந்த அழகிய ஜீவனின் நர்த்தன நாளங்கள் அடங்கிப் போகின்றன. அதைப் பார்க்கும் மலேசியத் தமிழர்களின் நெஞ்சங்கள் துடித்துப் போகின்றன. கசிந்து நசியும் வேதனையின் விம்மல்களில் கண்ணீர்த் துளிகளும் சன்னமாய் வழிந்தும் போகின்றன.

தமிழ் நேசன் எனும் ஒரு சகாப்தம் ஒரு முடிவிற்கு வருகிறது. அதைக் கேட்கும் போது நம் உணர்வுகள் அனைத்தும் உறைந்து போகின்றன.

உலகத் தமிழ் அரங்கில் சிம்மாசனம் போட்ட ஓர் அற்புதமான தமிழ் ஏடு. மலேசிய அரசியல் அரங்கில் அரியாசனம் பார்த்த ஓர் அழகிய தமிழ்ச் சுவடு. சிம்மக் குரலாய்க் கர்ஜனைகள் செய்து வரலாறு படைத்த ஒரு தமிழ்ப் பேரேடு. கரைந்து போகிறதே… ஏற்றுக் கொள்ள முடியவில்லையே.

மலேசிய மண்ணில் ஓங்கி ஒலித்த அந்தத் தமிழ் ஏடு அமைதி பெறுகிறது என்று செய்தி வந்த போது அது உண்மையாக இருக்கக் கூடாது என்று எத்தனையோ நெஞ்சங்கள் வேண்டிக் கொண்டன.

அந்தச் செய்தி பொய்யாகிவிட வேண்டும் என்றும் ஏங்கித் தவித்தன. ஓர் அரசியல்வாதியின் தனிப்பட்ட சொத்து என்று பார்க்காமல் மலேசியத் தமிழர்களின் குடும்பச் சொத்தாகப் பார்த்தார்கள்.

தமிழ் நேசன் எனும் சொல் எத்தனையோ இலட்சக் கணக்கான மலேசிய மனங்களில் மார்க்கண்டேயச் சொல்லாகப் பரிணமித்தப் பெயர் ஆயிற்றே. பாரிஜாத மலராய் மலர்ந்து மணம் பரப்பிய பிரம்ம கமலம் ஆயிற்றே. எதிரிகள்கூட கலங்கிப் போவார்கள்.

ஆனால் கடைசியில் அது உண்மையாகிப் போனது. பலருக்கு அது வேதனை. சிலருக்கு அது மகிழ்ச்சி. வேதனையில் சுகம் காண்பதும் ஒரு மனித உணர்ச்சி. மனநிறைவு கொள்வோம்.

தமிழ் நேசன் எனும் பெயரைக் கேள்விப் படாத தமிழர்கள் மலேசியாவில் எவரும் இருக்க முடியாது. அந்த அளவிற்குப் புகழ்பெற்ற ஒரு பத்திரிகை. அந்த அளவிற்கு மலேசியத் தமிழர்களின் வாழ்வியலில் ஐக்கியமாகிப் போன ஒரு பத்திரிகை. கம்பீரமாய் பீடு நடை போட்ட ஓர் ஆனந்த ராகம்.

மலேசியாவில் மட்டும் அல்ல. உலகளாவிய நிலையில் உலகத் தமிழர்கள் பெரும்பாலோருக்கு நன்கு அறிமுகமான ஒரு தமிழ்ப் பத்திரிகை. மலேசியத் தமிழர்களின் சாமான்ய வாழ்க்கையில் ஒரு நூற்றாண்டு காலம் தடம் பதித்துவிட்ட ஒரு தமிழ் இதழை அத்தனை எளிதில் தவிர்த்துவிட முடியுமா… முடியாதுங்க.

அப்போதும் சரி இப்போதும் சரி. மலேசியாவில் எங்கு போய் கேட்டாலும் தமிழ் நேசன் எனும் பெயரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. பெரும்பாலோர் அறிந்த பெயர். அந்த அளவிற்குப் ஒரு பெயர் வாகை சூடிய பத்திரிகை.

மலாய்க்காரர்கள், சீனர்கள் பெரும்பாலோருக்கும் அறிமுகமான பெயர். அந்த அளவிற்கு வேரூன்றிப் புகழ் நிலைத்த ஒரு பெயர்.

அந்தக் காலத்துத் தோட்டப் புறங்களை எடுத்துக் கொள்ளுங்கள். எங்கேயாவது எவருடைய வீட்டிலாவது தமிழ் நேசன் இருக்கும். தோட்டத்து மக்கள் இரவல் வாங்கிப் போய் கசக்கிக் கஞ்சியாக்கி விட்டுத்தான் கொண்டு வந்து கொடுப்பார்கள். பன்னிரண்டு பக்கப் பத்திரிகையை ஒரே சமயத்தில் பத்து பேர் படித்த நேரமும் காலமும் இருந்தன. அது ஒரு கனாக்காலம்.

அப்போதைக்கு தமிழ் நேசன்; தமிழ் முரசு என இரு தமிழ்ப் பத்திரிகைகள் தான் மலாயாவில் வெளிவந்து கொண்டு இருந்தன. தமிழ் முரசு இப்போது சிங்கப்பூரில் மட்டுமே சிங்கை அரசாங்கத்தின் ஆதரவில் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

தமிழ் நேசன் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அப்போது இருந்தே அதன் அளப்பரிய பங்குகள் நம்மை கலங்க வைக்கின்றன. நம் மனங்களைக் கசியவும் வைக்கின்றன.

தமிழ் நேசன்; தமிழ் முரசு; இந்த இரு நாளிதழ்களும் மலாயாத் தமிழர்களின் இரு கண்களாக விளங்கி வந்தன. தமிழ் நேசனுக்கு என்று ஒரு பெரிய வாசக ரசிகர்கள் கூட்டமே இருந்தது.

அதே போல தமிழ் முரசு நாளிதழுக்கும் மற்றொரு தரப்பு இருந்தது. இரு தரப்பினரும் இரு வேறு மாதிரியான சமூகக் கொள்கைகளில் பயணித்து வந்தனர். சிற்சில சலசலப்புகளும் இருக்கவே செய்தன.

மலேசியா, சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழர்களை மையமாகக் கொண்டு தமிழ் நேசன் ஊடகத் துறையில் கால் பதித்தது. 1990-ஆம் ஆண்டுகளில் ஏறக்குறைய 20000 பிரதிகளை வெளியிட்டது. ஆனால் அண்மைய 2010-ஆம் ஆண்டுகளில் அதன் விற்பனை 15000 பிரதிகளுக்குக் குறைந்து போனது.

இறுதியில் இந்த 2018-ஆம் ஆண்டில் 5000 பிரதிகளில் மிக மிகக் குறைந்து போனது. அது மட்டும் அல்ல. பல ஆண்டுகளாக நட்டத்திலும் ஓடிக் கொண்டு இருந்தது. 2024-ஆம் ஆண்டில் அதற்கு நூற்றாண்டு விழா. ஆனாலும் நிறைவேற முடியாமல் போனதே. மிக வேதனையாக இருக்கிறது.

ஒரு பத்திரிகையை நடத்துவது என்பது அப்படி ஒன்றும் சுலபமான காரியம் அல்ல. ஒரு குழந்தையைப் பெற்று எடுக்க ஒரு தாயார் எப்படி எல்லாம் கஷ்டப் படுகிறார். உயிர் போய் உயிர் வருகிற நிலைமை.

அது போலத்தான் ஒரு நாளிதழில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டி உள்ளது. பெற்று எடுத்த பின்னர் ஒவ்வொரு நாளும் ஏச்சு பேச்சுகளையும் வாங்க வேண்டி உள்ளது. பத்திரிகையை நடத்துபவர்களுக்கு அந்த வேதனை தெரியும்.

1924-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி கி. நரசிம்ம ஐயங்கார் என்பவரால் தமிழ் நேசன் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு வாரத்திற்கு மூன்று முறை வெளிவந்தது. 1920-ஆம் ஆண்டுகளில் இந்தியாவுடன் வணிகத் தொடர்பு கொண்டவர்களுக்கு உதவும் வகையில் வணிகத் தகவல்களைத் பிரசுரித்து வந்தது.

பின்னர் 1937 பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி தொடக்கம் நாளிதழாக மாறியது. 1937 ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி தமிழ் நேசனில் முதல் ஞாயிறு பதிப்பு வெளியானது.

மலாயா தமிழ்ப் பத்திரிகை உலகின் தந்தை என வர்ணிக்கப்படும் கி. நரசிம்ம ஐயங்கார் 1890-ஆம் ஆண்டு தமிழகத்தில் பிறந்தவர். 1921-இல் மலாயா வந்தார். இவருடைய சகோதரர் நிர்வாகம் செய்து வந்த இண்டஸ்டிரியல் அச்சகத்தில் உதவி நிர்வாகியாகப் பணிபுரிந்தார்.

அந்தக் காலக் கட்டத்தில் அதாவது 1923-ஆம் ஆண்டு தமிழகம் எனும் பத்திரிகையை நடத்தினார். பின்னர் 1924-ஆம் ஆண்டில் தமிழ் நேசன் தொடங்கப் பட்டது.

இந்தியாவுக்கான கப்பல் பயண அட்டவணைத் தகவல்கள்; சந்தையில் கச்சா பொருட்களின் விலை நிலவரங்கள்; மலாயா இந்திய வணிகர்களுக்கான தகவல்கள் போன்றவை தமிழ் நேசன் பத்திரிகையில் வெளிவந்தன.

அதே சமயத்தில் தமிழ் மொழியை வளர்ப்பதிலும் தமிழ் நேசன் அக்கறை காட்டி வந்தது. புதன், ஞாயிற்றுக் கிழமைகளில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற தமிழ் இலக்கியத் தொகுப்புகள் வெளியிடப் பட்டன.

அந்த வகையில் தமிழ் எழுத்தாளர்கள் நிறைய பேர் ஊக்குவிக்கப் பட்டனர். அதன் பலனாக 1950 – 1960-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் நிறைய தமிழ் எழுத்தாளர்கள் உருவானார்கள்.

1945-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் மலாயன் யூனியன் எனும் திட்டத்தை அறிமுகப் படுத்தினார்கள். அந்தத் திட்டத்தினால் இந்தியர்களுக்கு நன்மைகள் கிடைக்க வேண்டும் என்பதில் தமிழ் நேசன் தீவிரமாக இருந்தது. துடிப்புடன் செயல்பட்டது.

மலாயன் யூனியன் திட்டம் குறித்து தமிழ் நேசனில் அடிக்கடி தகவல்கள் வெளிவந்தன. ஆங்கிலேயர்களுக்கு எதிரான செயலாகவே அப்போது கருதப்பட்டது.

ம.இ.கா. எனும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் உருவாக்குவதற்கான திட்டத்தை ஜான் தீவி கொண்டு வந்தார். அவரை ஆதரித்து தமிழ் நேசன் குரல் கொடுத்தது.

மலாய இந்திய மக்களுக்கு ஓர் அரசியல் கட்சி தேவை என்பதைத் தமிழ் நேசன் வலியுறுத்தியது. ம.இ.கா. உருவாவதற்கு தமிழ் நேசன் பத்திரிகையும் ஒரு காரணம் என்று தாராளமாகச் சொல்லலாம்.

மலாயா விடுதலைப் போராளி மலாயா கணபதிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது அந்தப் பிரச்சினையை ஐக்கிய நாட்டு சபை வரை கொண்டு போனது இதே இந்தத் தமிழ் நேசன் தான்.

வீரசேனன் எனும் மற்றொரு போராளிச் சுட்டுக் கொல்லப்பட்ட போது கண்டனக் குரல் எழுப்பி ஆங்கிலேய ஆட்சி அதிகாரத்திற்கு எதிராகத் தலையங்கங்கள் எழுதியதும் இதே இந்தத் தமிழ் நேசன் தான். இந்த மாதிரி நிறைய விசயங்கள் உள்ளன.

1975-ஆம் ஆண்டில் மலாயாவில் இருந்த தமிழ்ப் பள்ளிகளை மூடவேண்டும் என்பது இந்திய மேல் தட்டு மக்களின் நேரடியான நெருக்குதல். அதை எதிர்த்து தமிழ்ப் பத்திரிகைகள் போராடின.

அப்போது தமிழ் பள்ளிகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று தமிழ் நேசன் ஒரு நிதி திரட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பல ஆயிரம் வெள்ளி சேகரித்து தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கியது. அதையும் நாம் நினைவில் கொள்வோம்.

நரசிம்ம ஐயங்காரின் மறைவுக்குப் பின்னர் சிறிது காலம் தமிழ் நேசன் சீனரிடம் கைமாறியது. பின்னர் 1947-ஆம் ஆண்டு முதல் மலையாண்டி செட்டியாரிடம் கைக்கு வந்தது.

இந்த நாட்டின் தமிழ் மொழி, தமிழர் இன வளர்ச்சியில் தமிழ் நேசனுக்கு நீண்ட ஒரு வரலாறு உண்டு. மலேசியத் தமிழ் எழுத்துலகில் புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திய புண்ணியமும் அதற்கு உண்டு.

சுப.நாராயணன் (கந்தசாமி வாத்தியார்), பைரோஜி நாராயணன் (வானம்பாடி) போன்ற எழுத்து ஜாம்பவான்கள் மூலமாக 1950-ஆம் ஆண்டுகளில் கதை வகுப்புகளை ஆறு மாதங்கள் வரை நடத்தி இருக்கிறது.

எழுத்துத் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்காக கதை வகுப்புகள் தொடங்கப் பட்டன. கதை வகுப்புக்கு வந்த எழுத்துப் படிவங்களை வெளியிட்டு, குறை நிறைகளைப் பத்திரிகையிலேயே சுட்டிக்காட்டி விமர்சனமும் செய்து வந்தார்கள்.

அந்த வகையில் தமிழ் உலகிற்கு அடியேனை அறிமுகம் செய்ததும் இதே இந்தத் தமிழ் நேசன் தான். கை எடுத்து கும்பிடுகிறேன். மலாக்கா முத்துக்கிருஷ்ணன் எனும் பெயரைச் சூட்டிய பெரியவர் அமரர் முருகு சுப்பிரமணியன் அவர்களின் திருஉருவப் பாதங்களைத் தொட்டு கண்ணீர் மல்க வணங்குகிறேன்.

சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் அடுத்த சில மாதங்களில் சிப்பாங் லொத்தியான் தமிழ்ப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கினேன். அப்போது ஒவ்வொரு சனிக்கிழமையும் ஜாலான் அம்பாங்கில் இருந்த தமிழ் நேசன் அலுவலகத்திற்குச் செல்வேன்.

பிலால் உணவகத்தின் பக்கத்து மேல்மாடியில் தமிழ் நேசன் அலுவலகம். அங்கேதான் ராய்ட்டர்ஸ்; யுனைடெட் பிரஸ் செய்தி நிறுவங்களினன் கரடு முரடான ஆங்கிலத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் திறமையை வளர்த்துக் கொண்டேன்.

மற்றவர்களின் முன்னிலையில் என்னுடைய ஆங்கிலத் திறமையை அதிகமாகப் புகழ்வார். தர்ம சங்கடமாக இருக்கும். அதனால் ஒருநாள் அவர் தனியாக இருக்கும் போது என் ஆதங்கத்தைச் சொன்னேன். என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு ‘உன்னிடம் திறமை இருக்கிறது. பாராட்டுகிறேன். தப்பு இல்லை. மற்றவர்கள் தெரிந்து கொள்ளட்டும்’ என்றார்.

அந்தச் சின்ன வயதிலேயே தமிழ் நேசன் நாளிதழின் கௌரவத் துணையாசிரியராகப் பதவி வழங்கிச் சிறப்பு செய்து இருக்கிறார். நன்றி தமிழ் நேசன். நன்றிங்க முருகு ஐயா. கண்ணீர் மல்கிறது.

இந்தச் சிறப்புக் கட்டுரையின் வழியாகத் தமிழ் நேசன் எனும் அந்தத் தமிழ்க் கலசத்திற்கு அடியேன் வழங்கும் மரியாதை. அதுவே அடிநெஞ்சத்தின் அன்பார்ந்த காணிக்கை.

1952-ஆம் ஆண்டு தமிழ் நேசன் பொறுப்பாசிரியராகப் பிரபல எழுத்தாளர் கு. அழகிரிசாமி பதவி ஏற்றார். 1957-ஆம் ஆண்டு வரை சேவை செய்தார். மாதத்திற்கு ஒரு முறை என பத்து இலக்கியச் சந்திப்புக் கூட்டங்களை எழுத்தாளர்களுக்காக நடத்தி இருக்கிறார். அப்போது அவர் முன்னெடுத்த தமிழ் இலக்கிய முயற்சிகள் காலத்தால் மறையாமல் வரலாற்றில் தடம் பதிக்கின்றன.

1962 முதல் 1975-ஆம் ஆண்டு வரை முருகு சுப்ரமணியம் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். தமிழ் நேசனில் ‘பவுன் பரிசு திட்டம்’ எனும் ஒரு திட்டத்தை உருவாக்கினார். மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கி வந்தார். நிறைய எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமையும் இவரைச் சார்கின்றது.

மலேசியாவின் பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களைப் பதிவு செய்த ஒரே நாளிதழ் என்ற பெருமையைக் கொண்டிருந்த தமிழ் நேசன் இனி வெளிவராது என்ற செய்தி வாசகர்களுக்கு வருத்தம் கலந்த வேதனை தான்.

1979-ஆம் ஆண்டில் திரு.ச.சாமிவேலு மலேசியாவின் ம.இ.கா. கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தமிழ் நேசனை வாங்கினார். அன்றில் இருந்து தமிழ் நேசன் திரு.சாமிவேலு குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது

தமிழ் நேசன் பத்திரிகையில் வேலை செய்த 46 பணியாளர்களுக்கும் வேலை நிறுத்தத்திற்கான உறுதி கடிதம் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கான ஊதியம் மூன்றாம் மாதம் வரை வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நேசன் மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்து வந்தது. பொருளாதாரப் பாதிப்பை எதிர்நோக்கியது. அதன் காரணமாகத் தான் தமிழ் நேசன் ஊடகத் துறையில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

உலகின் மிகப் பழமையான தமிழ் நாளிதழ்களில் ஒன்றான தமிழ் நேசன் நேற்றைய தினம் ஜனவரி 31-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அந்தச் செய்தி உலகத் தமிழர்களுக்குப் பெரும் அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தி உள்ளன.

துன் சாமிவேலு அவர்கள் ஓர் அரசியல்வாதி. அவரைப் பலருக்குப் பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது. அல்லது சிலருக்குப் பிடிக்கும். பலருக்குப் பிடிக்காது. எப்படி வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளுங்கள். பிரச்சினை இல்லை.

ஆனால் அரசியல் என்று வந்துவிட்டால் அங்கே காந்தியத்தையும் எதிர்பார்க்க முடியாது. பௌத்த பேருண்மைகளையும் எதிர்பார்க்க முடியாது.

ஆக அவர் நடத்திய பத்திரிகை என்று பார்க்காமல் அந்தப் பத்திரிகை மலேசியத் தமிழர்களுக்கு என்ன செய்தது என்பதை நேர்மறையாகச் சமூகப் பார்வையில் பார்ப்பதே நலம் பயக்கும்.

அவருடைய பத்திரிகை என்பதால் அவர் சார்ந்த அரசியல் செய்திகள் வெளிவந்தன. பாமாலைகளும் புகழ்மாலைகளும் சேர்ந்தே வந்தன.

ஆனால் அதையும் தாண்டிய நிலையில் தமிழ் நேசன் பத்திரிகை இந்த மண்ணில் தமிழ் மொழி வளர்வதற்கும் தமிழ் இலக்கியம் தழைப்பதற்கும் முன்னோடியாக இருந்து இருக்கிறதே அதைப் பெருமையாகப் பார்ப்போம்

மலேசியாவில் தமிழ் மொழி ஓங்கிட, தமிழ் இலக்கியம் செழித்திட, தமிழ்க் கலை வாழ்ந்திட தமிழ் நேசன் அளப்பரிய அர்ப்பணிப்புகளைச் செய்து உள்ளது. அந்தத் தமிழ்ச் செல்வத்தை மலேசியத் தமிழர்கள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள். கண்ணீர் மல்க பிரியாவிடை வழங்குகிறோம்.

போய் வா நேசனே போய் வா!

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *