பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் கலைஞர் கருணாநிதிக்கு சிலையை திறந்து வைத்தார் மு.க ஸ்டாலின்.!!

தமிழகம்

பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலையினையும், புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் சிலையையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலையினையும், புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் சிலையையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கலைஞர் அவர்களுடைய திருவுருவச்சிலை திறப்புவிழா பொதுக்கூட்டத்தினுடைய தலைவர் மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் அவர்களே, வரவேற்று மகிழ்ந்திருக்கக்கூடிய சந்திரன் ஆறுமுகம் அவர்களே, முன்னிலை ஏற்றுள்ள மாவட்டக் கழக அவைத் தலைவர் சுகுமார் அவர்களே, செயற்குழு உறுப்பினர் சி.வி.எம்.ஏ சேகரன் அவர்களே, கழக மாணவரணியின் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அருமைத் தம்பி எழிலரசன் அவர்களே, துணைச் செயலாளர்கள் ஏழுமலை அவர்களே, தசரதன் அவர்களே, வசந்த மாலா அவர்களே, நிகழ்ச்சியிலே பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கும் கழகத்தின் முதன்மைச் செயலாளர் மத்திய முன்னாள் அமைச்சர் அருமை நண்பர் டி.ஆர்.பாலு அவர்களே, கழக அமைப்புச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி அவர்களே, சட்டப்பேரவை உறுப்பினர்கள் புகழேந்தி அவர்களே, டாக்டர் அரசு அவர்களே, கழகத்தினுடைய நிர்வாகிகள் நாதன் அவர்களே, விஸ்வநாதன் அவர்களே, அன்பழகன் அவர்களே, சுகுமாரன் அவர்களே, செங்குட்டுவன் அவர்களே, நிறைவாக நன்றி நல்கயிருக்கக்கூடிய வாலஜாபாத் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வம் அவர்களே, ஒன்றியக் கழக, நகரக் கழக செயலாளர்களே, தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்களே, பேரூர் கழக, கிளைக் கழக நிர்வாகிகளே, கழகத்தின் துணை அமைப்புகளாம், தொழிலாளர் அணி, தொண்டர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, இளைஞர் அணி, இலக்கிய அணி, விவசாய அணி, வழக்கறிஞர் அணி போன்ற பல்வேறு அமைப்புகளைக் கட்டிக்காத்து வருகின்ற கழகக் காவலர்களே, மேடையில் வீற்றிருக்கக்கூடிய முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான சட்டமன்ற உறுப்பினர் அன்பரசன் அவர்களே, தோழமைக் கட்சிகளைச் சார்ந்திருக்கக்கூடிய தோழர்களே, பெரும் திரளாக திரண்டிருக்கக்கூடிய பெரியோர்களே, தாய்மார்களே, ஈட்டி முனைகளாக மட்டுமல்ல இந்த நாட்டினுடைய திருப்பு முனைகளாகவும், காட்சியளித்துக் கொண்டிருக்கக்கூடிய இளைய சமுதாயத்தின் இனிய நண்பர்களே, என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களுடைய உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
இன்று அண்ணன் பிறந்த காஞ்சியில் அண்ணன் அவர்களால் நமக்காக உருவாக்கித் தரப்பட்ட, அறிஞர் அண்ணா அவர்களுடைய அன்புத்தம்பியாக உண்மைத் தம்பியாக விளங்கி மறைந்தும், மறையாமலும் நம்முடைய உள்ளத்தில் இன்றைக்கும் குடிகொண்டிருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய திருவுருவச்சிலை திறப்பு விழா. கலைஞருடைய சிலை திறப்பு விழா மட்டுமல்ல. ஏற்கனவே, மார்பளவு சிலையாக காட்சியளித்துக் கொண்டிருந்த அறிஞர் அண்ணா அவர்களுக்கும் முழு உருவச்சிலை என்ற நிலையில் மாற்றப்பட்டு, அறிஞர் அண்ணாவினுடைய முழு உருவச்சிலையையும் திறந்து வைத்திருக்கின்றோம். இந்த நிகழ்ச்சியையொட்டி காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் இருக்கக்கூடிய கழக முன்னோடிகளுக்கு, அவர்களை ஊக்கப்படுத்தக்கூடிய வகையில் உற்சாகப்படுத்தக்கூடிய நிலையில் அவர்களுக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் நல உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றது. இப்படி பல்வேறு நிகழ்ச்சிகளை இணைத்து ஒரு மாபெரும் விழாவாக, மாபெரும் விழா என்று சொல்வதா – மாபெரும் கூட்டம் என்று சொல்வதா – மாவட்ட அளவில் நடைபெறக்கூடிய ஒரு மாபெரும் மாநாடு என்று சொல்வதா? என்கின்ற அந்த உணர்வோடு உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கின்றேன். அறிஞர் அண்ணா அவர்களுடைய சிலையும், தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலையும் அமைந்திருக்கக்கூடிய இடம் திருக்கச்சிநம்பித் தெரு என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். அந்தத் திருக்கச்சிநம்பித் தெருவில் தான், அண்ணாவும், தலைவர் கலைஞர் அவர்களும் சிலை வடிவமாக அங்கே நின்று கொண்டிருக்கக்கூடிய அந்தக் கட்டிடத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் நடத்திய ‘திராவிட நாடு’ இதழ் அங்கிருந்து தான் வெளி வந்திருக்கின்றது. அறிஞர் அண்ணா அவர்களால் நடத்தப்பட்ட ‘திராவிட நாடு’ இதழில் பல்வேறு கட்டுரைகள், லட்சக்கணக்கான கடிதங்கள், ஏன் இந்த ’திராவிட நாடு’ இதழில் பல தலைவர்கள் உட்கார்ந்து கலந்து ஆலோசனைகள் நடத்திய அந்த நிகழ்வுகள், இன்னும் பெருமையோடு சொல்லவேண்டும் என்று சொன்னால், அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு கடிதங்கள் எழுதி இந்தக் கழகத்தையும், தமிழகத்தையும் கொள்கைக் குன்றாக விதையை விதைத்து இன்றைக்கு கம்பீரமாக இந்த இயக்கம் வளர்ந்து பீடு நடை போட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த ‘திராவிட நாடு’ இதழை நடத்திய அந்தக் கட்டிடத்தில் தான் நம்முடைய தலைவர் அவர்களுடைய சிலை அமைக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், ’திராவிட நாடு’ இதழ் நடைபெற்ற அந்தக் கட்டிடத்தில் 1998-ல் தலைவர் கலைஞர் பவளவிழா மாளிகை என்ற நிலையில் அது உருவாகி அந்தக் கட்டிடத்தின் முகப்பில் அறிஞர் அண்ணா சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பெருமை சேர்த்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் என்பது வரலாறு.
அப்படி நடைபெற்ற அந்த விழாவில் தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்தினுடைய முதல்வராக வந்து பங்கேற்றார். நான் அன்றைக்கு சென்னை மாநகரத்தின் மேயர் என்ற அந்த நிலையில் தலைவரோடு வருகை தந்து அதில் பங்கேற்றேன். அந்த நிகழ்வுகளைத் தான் இந்த மேடையில் நின்று கொண்டு நான் எண்ணிப்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
வாழ்வு மூன்று எழுத்து, வாழ்வுக்கு தேவையான பண்பு மூன்றெழுத்து, பண்பிலே பிறக்கும் அன்புக்கு மூன்றெழுத்து, அன்பிலே சுரக்கும் காதல் மூன்றெழுத்து, காதல் விளைவிக்கும் வீரம் மூன்றெழுத்து, வீரர் செல்லும் களம் மூன்றெழுத்து, களத்திலே பெறும் வெற்றி மூன்றெழுத்து, அந்த வெற்றிக்கு – நம்மை அழைத்துச் செல்லும் அண்ணா மூன்றெழுத்து, என்று பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி தலைவர் கலைஞர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முதலாவது மாநாட்டில் வரவேற்று பேசுகின்ற நேரத்தில் குறிப்பிட்டுச் சொன்னார். அப்படிப்பட்ட பெருமைக்குரிய அண்ணா பிறந்த இந்த மண்ணில் இன்று நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்கு சிலை எழுப்பப்பட்டிருக்கின்றது.
இந்த விழாவில் நானும் பங்கேற்று சிலையினை திறந்து வைத்து உங்களோடு பகிர்ந்து கொள்ளக்கூடிய உங்களிடத்தில் சில கருத்துக்களை எடுத்துச் சொல்லக்கூடிய அரியதொரு வாய்ப்பைப் பெற்றமைக்கு பெருமைப்படுகின்றேன், பூரிப்படைகின்றேன், புலங்காகித உணர்வோடு உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கின்றேன். இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தந்திருக்கக்கூடிய காஞ்சி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு குறிப்பாக ஒவ்வொருவருடைய பெயரையும் நான் தனித்தனியாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், ஒரு சில பெயர்கள் விடுபடக்கூடிய நிலை உருவாகும். அதேநேரத்தில், நேரத்தின் அருமை கருதி இந்த மாவட்டத்தை வழி நடத்திக் கொண்டிருக்ககூடிய மாவட்டச் செயலாளர் சுந்தர் அவர்களுக்கு நான் என்னுடைய இதய பூர்வமான நன்றியை என்னுடைய சார்பில் மட்டுமல்ல ஒட்டுமொத்த நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
என்னுடைய அரசியல் பயணத்திற்கு எத்தனையோ உந்து சக்திகள் இருக்கலாம். ஆனால், அனைத்திற்கும் சிகரம் வைத்தார் போல் இருந்த உந்து சக்தி எது என்று கேட்டால், இந்தக் காஞ்சி நகரம் தான் என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன். காரணம் முதன்முதலாக 12 அல்லது 13 வயதில் என்னை பொதுவாழ்வில் ஈடுபடுத்திக் கொண்ட நேரத்தில் கோபாலபுரம் பகுதியில் இளைஞர் திமுக என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் மூலமாக நான் பல நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தேன். அதையொட்டி 1971ம் ஆண்டு அறிஞர் அண்ணன் துயில் கொண்டிருக்கக்கூடிய அவருடைய கல்லறையில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்து, வணங்கி அங்கிருந்து கையில் ஒரு தீப்பந்தத்தை – ஜோதியை – அண்ணா ஜோதியை கையில் ஏந்தி தொடர் ஓட்டமாக நான் புறப்பட்டு நேராக அண்ணா சாலையில் இருக்கக்கூடிய அண்ணா சிலைக்கு சென்று மாலை அணிவித்து அதைத் தொடர்ந்து சென்னையிலிருந்து தொடர் ஓட்டமாக இந்த காஞ்சி நகரத்துக்கு வந்து அன்று காஞ்சிபுரத்தில் நடந்து கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாநாட்டு மேடையில் தலைவர் கலைஞர் கரத்தில் தொடர் ஓட்டமாக கொண்டு வந்து அண்ணா ஜோதியை நான் ஒப்படைத்தேன். அதை ஒப்படைத்த நேரத்தில், கலைஞருக்கு பக்கத்தில் இருந்தவர்கள் யார் யார் என்று கேட்டால். அன்றைக்கு பொதுச்செயலாளராக இருந்த நாவலர் அவர்கள், பொருளாளராக இருந்த மரியாதைக்குரிய எம்.ஜி.ஆர் அவர்கள். இப்படி கழக முன்னோடிகள் எல்லோரும் சூழ்ந்திருக்கக்கூடிய நேரத்தில் அந்த தீபத்தை அந்த ஜோதியை கலைஞரிடத்தில் ஒப்படைத்தேன்.
அறிஞர் அண்ணா அவர்களுடைய தீபத்தை பெற்ற தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைக்கு சிலையாக நிற்கின்றார். அண்ணா தீபத்தை ஒப்படைத்த நான் இன்றைக்கு இந்த மேடையில் இயக்கத்தினுடைய தலைவராக நின்று கொண்டிருக்கின்றேன். இதுதான் திராவிட இயக்கம். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட இயக்கத்தினுடைய பயணம் என்பது, முடிகின்ற ஓட்டம் அல்ல, அது தொடர்கின்ற ஓட்டம். தொடர்ந்துகொண்டே இருக்கக்கூடிய ஓட்டம். அந்தக் கொள்கை என்பது ஒரு அணையா தீபமாகும்.
இன்று தேதி பிப்ரவரி-14. உலகமே இன்று காதலர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. காதல் என்றால் அன்பு என்று பொருள். அன்பினுடைய இலக்கணமாக இருந்தவர்கள் தான் அறிஞர் அண்ணாவும் – தலைவர் கலைஞர் அவர்களும். அண்ணா என்ற காதலனை கலைஞர் என்ற காதலி எப்போது பார்த்தாரோ அன்றிலிருந்து அவர்களுக்குள்ளே அந்தக் காதல் வந்துவிட்டது, அன்பு வந்துவிட்டது. இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால் அண்ணாவின் மரணம் வரையில் அது மாறாமல் இருந்தது. ஏன் அவருடைய மரணத்திற்குப் பிறகும் தொடர்ந்தது.
“இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா நீ இருக்குமிடம் தேடி யான் வரும் வரையில் இரவலாக உன் இதயத்தை தந்திடு அண்ணா – நான் வரும் போது கையோடு கொணர்ந்து உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா” என்று 1969ல் அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த நேரத்தில் கண்ணீர் மல்க கவிதை அஞ்சலி செலுத்தினாரே தலைவர் கலைஞர் அவர்கள். நான் அதை எண்ணிப் பார்க்கின்றேன்.
50 ஆண்டுகள் கழித்து கலைஞர் இறந்த போது அவருடைய அரை நூற்றாண்டு காலக் கனவை அண்ணாவின் மீது அவர் வைத்திருந்த அழியாக் காதலை நிறைவேற்றுவதற்கு நாம் நடத்திய போராட்டம் சாதாரண போராட்டம் அல்ல, ஒரு மிகப்பெரிய சட்டப்போராட்டம் நடத்தி தலைவர் கலைஞருக்கு வங்கக் கடலோரத்தில் அண்ணனுக்கு பக்கத்தில் இடத்தை மீட்டுத் தந்திருக்கின்றோமே, அதுதான் நமக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை. எல்லோரும் சொல்லுவார்கள் எனக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய நண்பர்கள் எல்லாம் என்னை சுட்டிக்காட்டிச் சொல்லுகின்ற போது அதைப்பற்றி எடுத்துச் சொல்லுவார்கள். ஆனால், இது எனக்கு தனிப்பட்ட பெருமை அல்ல. ஒட்டுமொத்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கக்கூடிய பெருமை.
திருவாரூர் என்பது தலைவர் கலைஞர் பிறந்த ஊர். காஞ்சிபுரம் என்பது அவர் புகுந்த ஊர். அறிஞர் அண்ணா அவர்கள் கலைஞரைத் தவிர வேறு யார் மீதும் இவ்வளவு பாசம் வைத்திருக்க மாட்டார். அதேபோல், கலைஞர் அவர்களும் அண்ணாவைத் தவிர வேறு யார் மீதும் இவ்வளவு மரியாதை வைத்திருக்க மாட்டார். இந்த இரண்டு தலைவர்களைப் பற்றி அறியும் போதும், அவர்களைப் பற்றிப் படிக்கின்ற நேரத்தில் ஒரு காவிய நட்பு காவிய பாசம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றார்கள். கலைஞர் நடத்திய கையெழுத்து ஏடு, கையெழுத்து பத்திரிகை என்று கூட சொல்லக்கூடாது. கையெழுத்து பேப்பர், அதில் எத்தனையோ கட்டுரைகளை தீட்டியிருக்கின்றார். எத்தனையோ கடிதங்களை வரைந்திருக்கின்றார். அந்த நேரத்தில் அத்துனை கட்டுரைகளை அவர் எழுதியிருந்தாலும் முதன்முதலில் அறிஞர் அண்ணாவினுடைய திராவிட நாடு இதழுக்குத்தான் தான் எழுதிய கட்டுரையை முதன் முதலில் அனுப்பி வைப்பார்.
அப்போது திராவிட நாடு என்ற இதழ் வருவது செய்தி தெரியும். ஆனால், தலைவர் கலைஞர் அவர்களுக்கு முகவரி தெரியாது. முகவரி தெரியாவிட்டாலும் தனது கட்டுரையை அவர் எழுதி அதை தபாலில் அனுப்புகின்ற நேரத்தில் ‘திராவிட நாடு, காஞ்சிபுரம்’ என்று முகவரியிட்டு எழுதுகின்றார். அது அண்ணா கைகளுக்கு போய் சேருகின்றது. மறுவாரமே அந்தக் கட்டுரை திராவிட நாடு இதழில் வெளியிடப்படுகின்றது. தலைவர் கலைஞர் அவர்களுடைய எழுத்து முதன்முதலாக எந்த ஏட்டில் வந்ததென்று சொன்னால் அறிஞர் அண்ணாவால் நடத்தப்படக்கூடிய திராவிட நாடு இதழில் தான், அவருடைய எழுத்து முதன்முதலில் வெளியிடப்படுகின்றது.
அந்த இதழ், இந்த காஞ்சியில் இருந்துதான் வெளி வந்திருக்கின்றது. அதுமட்டுமல்ல, 1963ம் ஆண்டு கைது செய்யப்பட்டு தலைவர் கலைஞர் அவர்கள் நீண்ட காலம் திருச்சியில் இருக்கக்கூடிய மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். அப்போது அறிஞர் அண்ணா அவர்கள் வேலூரில் இருக்கக்கூடிய மத்திய சிறையில் அடைபட்டிருக்கின்றார். தலைவர் கலைஞர் அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிஞர் அண்ணா விடுதலை செய்யப்படுகின்றார். அறிஞர் அண்ணா விடுதலையானவுடன். திருச்சியில் இருந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு விடுதலையாகக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களை வரவேற்க திருச்சிக்கே செல்லுகின்றார்.
அதற்குப் பிறகு விடுதலையான தலைவர் கலைஞர் அவர்கள் நேராக சென்னைக்கு வரவில்லை. தான் பிறந்த திருவாரூக்குச் செல்லுகின்றார். சென்னைக்கு வராமலேயே திருவாரூக்குச் செல்லுகின்றார். காரணம், அங்கே வரவேற்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. சென்னைக்கு, வராமல் திருவாரூக்கு போய்விட்டார். அங்கிருந்து சென்னை செல்லலாம் என்று தலைவர் கலைஞர் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் தான், அண்ணா அவர்கள் கலைஞர் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘நீ நேராக காஞ்சிபுரத்திற்கு வா. நீ வந்ததற்குப் பிறகு நாம் இருவரும் சேர்ந்து சென்னைக்கு செல்லலாம்’ என்று நம்முடைய தலைவர் கலைஞருக்கு அண்ணா உத்தரவிடுகின்றார். தலைவர் கலைஞர் அவர்கள் காஞ்சிபுரம் வருகின்றார், அதற்குப்பிறகு அண்ணாவும், தலைவர் கலைஞர் அவர்களும் சேர்ந்து சென்னை வருகிறார்கள். மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்படுகின்றது. அதற்குப்பிறகு அண்ணாவும், தலைவரும் கோபாலாபுரம் இல்லத்திற்கு செல்கின்றார்கள். வாசலில் வழி மேல் விழி வைத்து கலைஞரை ஈன்றெடுத்த அவருடைய தாயார் அன்னை அஞ்சுகம் அம்மையார் அவர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்போது அண்ணாவைப் பார்த்து, அன்னை அஞ்சுகம் அம்மையார் அவர்கள் ஒரு வார்த்தை சொன்னார்கள். அது என்னவென்று கேட்டால், ‘உங்களை உங்கள் அம்மா ஒரே ஒரு நாள் பிரசவ வேதனையில் பெற்றிருப்பார்கள். அதனால் தான் நீங்கள் வேலூர் சிறையிலிருந்து நேராக காஞ்சிபுரம் சென்றீர்கள். ஆனால், என் பிள்ளையை பல நாள் இடுப்பு வலி பிரசவ வேதனைக்குப் பிறகு பெற்றெடுத்தேன். அதனால் தான் திருச்சியில் விடுதலையாகி திருவாருக்குச் சென்று மூன்று நாள் கழித்து என்னைப் பார்க்க என் பிள்ளை வந்திருக்கின்றது’ என்று அண்ணா அவர்களிடத்தில் உரிமையோடு தலைவர் கலைஞருடைய தாயார் சொல்லுகின்றார்.
அப்போது அண்ணா அவர்கள், அன்னை அஞ்சுகம் அம்மையாரைப் பார்த்து ஏன் நீங்களளே திருச்சிக்கே வந்திருக்கலாமே என்று சொல்லுகிறபோது, ‘நான் போனால் என்ன? நீங்கள் போனால் என்ன? இரண்டு பேரும் ஒன்றுதானே’ என்றார் அஞ்சுகம் அம்மையார் அவர்கள்.
அதாவது அண்ணா வேறு அஞ்சுகம் வேறு அல்ல. கலைஞரைப் பொருத்தவரையில் இரண்டு பேரும் ஒன்று தான் என்று தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய பொதுவாழ்வில் இருந்திருக்கின்றார். தன்னுடைய உயிரினும் மேலானவர்களுக்கு, தன்னுடைய உயிரினும் மேலான உடன்பிறப்புக்களாக இருக்ககூடிய உங்களைத்தான் நினைத்தார். அதேபோல், தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய தாயினும் மேலாக தாயாக அண்ணாவைத்தான் நினைத்தார். அதனால் தான் இன்றைக்கு அண்ணா பிறந்த இந்த மண்ணில் தலைவர் கலைஞருக்கு சிலை திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது.
தனக்குப் பின்னால் கலைஞர் தான் என்பதை மிக இளமைக் காலத்திலேயே அறிஞர் அண்ணா அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார். அதற்கு பல உதாராணங்கள் உண்டு. நான் சுருக்கமாக குறிப்பிட விரும்புகிறேன். திருச்சி திமுகவில் தோழர்களிடத்தில் சில பிரச்சனை, அப்பொழுது திருச்சிக்கு நான் போகமாட்டேன் என்று அண்ணா திட்டவட்டமாக சொல்லுகின்றார். திருச்சியைச் சேர்ந்த கழகத் தோழர்கள் அழைத்தார்கள் முடியாது வரமுடியாது. திருச்சியைச் சேர்ந்த மொத்த கழகத் தோழர்களும் வருகின்றார்கள் அண்ணாவை அழைக்க. இல்லை, இல்லை, வந்து தான் தீரவேண்டும் என்று சொல்லுகின்ற போது நான் முதலில் வரமாட்டேன், வேண்டுமானால் என் தம்பி கருணாநிதியை முதலில் அனுப்பி வைக்கின்றேன். அனுப்பி வைக்கின்ற நேரத்தில் திமுக என்பது அங்கு உயிரோடுயிருந்தால் நான் வருகின்றேன் என்று அவர்களை அனுப்பி வைத்தார்.
கல்லக்குடி போராட்டமா? கலைஞரைத்தான் தலைமை தாங்க உத்தரவிட்டார். சென்னை மாநகராட்சியை கைப்பற்றிய காரணத்தால் அறிஞர் அண்ணா அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை உச்சிமுகர்ந்து பாராட்டி, கைவிரலில் கணையாழி அணிவித்தாரே அந்தக் கணையாழியைக் கூட அவரே, கடைக்குச் சென்று அவரே போய் வாங்கி அந்தக் கணையாழியை தலைவர் கலைஞருக்கு அணிவிக்கின்ற நேரத்தில் சொன்னாரே, என்னுடைய மனைவிக்குக் கூட நகை வாங்க கடைக்குச் சென்று நகை வாங்கியது கிடையாது. உனக்காக நான் வாங்கியிருக்கின்றேன் என்று சொல்லி அதை அணிவித்து மகிழ்ந்தாரே பேரறிஞர் அண்ணா அவர்கள்.
இந்தக் கழகத்தில் பல தரப்பட்ட உணர்வுள்ளவர்கள், பல எண்ணங்கள் கொண்டவர்கள் யாராக இருந்தாலும், சிறப்பான பணியாற்றக்கூடியவர்கள் உண்டு. எதையும் நிதானமாக பணியாற்றக்கூடியவர்கள் உண்டு. அவர்களை எல்லாம் இன்னும் சிறப்பாக திறம்படச் செயல்பட வைக்க திறமைசாலிகள் வேண்டும். அத்தகைய சிறப்புகளை பெற்றவர் என் தம்பி கருணாநிதி தான் என்று பலமுறை தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி அண்ணா அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.
“ஒரு நாளைக்கு கருணாநிதி எத்தனை மணி நேரம் தூங்குகிறார் என்பதை அவருக்கு தெரியாமல் அதைக் கண்காணித்தால் தான் கண்டுபிடிக்க முடியும்”. இல்லை என்றால் கண்டுபிடிக்க முடியாது என்று அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டவர். என் தம்பிகள் நான் சொல்வதை செய்து முடிப்பார்கள். ஆனால், தம்பி கருணாநிதி மட்டும் நான் சொல்லாமலேயே செய்து முடிக்கக்கூடிய ஆற்றலை பெற்றிருந்தவர். இந்தளவுக்கு அறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டவர் கலைஞர் அவர்கள், அதனால் தான் தலைவர் கலைஞர் அவர்களும் தன்னுடைய இறுதி மூச்சு நிற்கின்ற வரையில், கடைசி மூச்சு நிற்கின்ற வரையில் அண்ணா – அண்ணா – அண்ணா என்று தான் சொல்லிக்கொண்டிருந்தார். நான் இன்னமும் சொல்லுகின்றேன், மருத்துவமனையில் அவர் கடுமையான நோய்க்கு ஆளாக்கப்பட்டு கடுமையான நோய் என்று சொல்லுகின்ற போது யாரும் தவறாக எண்ண வேண்டிய அவசியமில்லை. வயது மூப்பின் காரணமாக, பேசமுடியாத நிலையில் தொண்டையில் டியூப் போடப்பட்டு சைகை மூலமாக எங்களிடத்தில், வரக்கூடிய முன்னோடிகளிடத்தில் தன்னுடைய உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் மருத்துவர்கள் அவரைப் பேச வைப்பதற்காக, சில முயற்சிகள் சில பயிற்சிகள் நடந்தது. ஏன் கையில் ஒரு பேனாவைத் தந்து கையில் ஒரு வெள்ளைக் காகிதத்தைக் கொடுத்து எழுதுங்கள் என்று சொன்னால் அவர், எழுதிய முதல் எழுத்து எப்பொழுதும் அண்ணா – அண்ணா – அண்ணா என்று தான் தொடங்குவார். அதேபோல் பேச்சுப்பயிற்சி நடைபெறுகின்ற போது கூட நாங்கள் எல்லோரும் ஏதாவது பேசுங்கள் என்று கேட்கின்ற போது அண்ணா – அண்ணா – அண்ணா என்று தான் சொல்லுவார்.

நாடு முழுக்க
அண்ணா சிலைகள்
அண்ணா சாலைகள்
அண்ணா பாலங்கள்
அண்ணா நினைவகம்
அண்ணா பல்கலைக்கழகங்கள்
அண்ணா நூலகங்கள்
அண்ணா அறிவாலயம்
அண்ணா மறுமலர்ச்சி திட்டம் என கலைஞருக்கு எல்லாமே அண்ணா தான் – அண்ணா தான் – அண்ணா தான் என்ற நிலையிலே அவர் கடைசி நிமிடம் வரையில் அவர் வாழ்ந்திருக்கின்றார்.
அதனால் தான், அறிஞர் அண்ணா அடக்கம் செய்யப்பட்டிருக்கின்ற அந்த நினைவிடத்தின் பக்கத்திலே அவருக்கு இடம் கிடைத்திருக்கின்றது. அண்ணா அறிவாலயத்தில் கம்பீரமாக நிற்கக்கூடிய அறிஞர் அண்ணாவினுடைய திருவுருவச் சிலைக்கு அருகில் தான் கலைஞருடைய சிலை அமைந்திருக்கின்றது.. இதே, காஞ்சிபுரத்தில் இப்போது திறந்து வைத்திருக்கின்றோமே, இங்கேயும் இந்த சிலைக்கு அருகில் தானே அந்த வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இது ஒன்றே போதும் காதலில் தெய்வீகக் காதல் என்பார்கள். அண்ணாவுக்கும் கலைஞருக்குமான அன்பை சொல்லித்தான் நாம் சொல்லுகின்றோம். அண்ணாவுக்கும் கலைஞருக்கும் இருந்த காதல் தெய்வீகக் காதல் அல்ல, கொள்கைக் காதல்.
தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞர் அவர்கள் போற்றி வளர்த்த சமூக நீதி, மனித நேயம், மாநில சுயாட்சி ஆகிய கொள்கைகளுக்கு ஊறு ஏற்படுத்தக்கூடிய வகையில் மத்தியில் இருக்கக்கூடிய பாசிச பாரதிய ஜனதா கட்சி ஆட்சி மோடி தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி விளங்கிக் கொண்டிருக்கிறது. அதை வீழ்த்துவதற்கான போர்க்களம் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. நம்மை நோக்கி வரும் அந்த உணர்வை, அந்த சதியை, சுக்கு நூறாக்குவதற்கு நாங்கள் தயார் என்று உறுதியேற்கக்கூடிய நிலையில் தான் இந்தக் கூட்டத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சி இதழில் கடைசியாக எழுதிய கடிதத்தில் உயில் என்று சொல்லுவார்களே, எதைப் பற்றிக்குறிப்பிட்டார் மாநில சுயாட்சி பற்றித்தான் எழுதினார். அதைத்தான் தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய உள்ளத்தில் சுமந்துகொண்டு, நம்முடைய மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து முழக்கத்தை முழங்கினாரே மாநில சுயாட்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்தாரே. ஆனால், மத்தியில் உள்ள மோடி ஆட்சி இன்றைக்கு மாநில உரிமைகளை எல்லாம் குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கின்றது. அனைத்து மாநில முதல்வர்களையும் சமமாக கருதிடுவேன் என்றார். மதிக்கப்படுகின்றதா? மாநில கவுன்சில் அமைப்பேன் என்றார், காற்றோடு போய் விட்டது. நதிகளை இணைப்பேன் என்றார், இணைக்கவில்லை. அனைத்து மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளை கொண்டுவரப்போகின்றேன் என்று அறிவித்தார். 5 வருடம் முடியப்போகின்றது, இன்னும் எங்கும் கிடையாது. ஸ்மார்ட் சிட்டி எங்காவது உருவாக்கப்பட்டிருக்கின்றதா.? பொய்கள் தான் ஸ்மார்ட்டாக இருக்கின்றது. ஸ்மாட் சிட்டி உருவாகவில்லை. மோடிதான் ஸ்மார்ட்டாக போய்க் கொண்டிருக்கின்றார். டிரெஸ்ஸைப் போட்டுக்கொண்டு தொப்பியை அணிந்து கொண்டு இந்திய அரசியலில் இவ்வளவு பொய்யான வாக்குறுதிகளை சொன்ன ஒரு பிரதமரை இந்தியாவில் அல்ல உலகத்தில் எங்கும் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.
ஒரு பழமொழி சொல்வார்கள். பொய்யை சொன்னாலும், பொருத்தமாக சொல்லுங்களடா போக்கத்த பசங்களா என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல், பொய்யையே மூலதனமாக வைத்து இன்றைக்கு ஒரு பிரதமர் இருக்கின்றார் என்று சொன்னால் அது மோடி மட்டும் தான்.
நான் கேட்கின்றேன், பிரதமராக இருக்கக்கூடிய மோடி தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார். இப்போதல்ல அவர் மதுரைக்கு வருவதற்கு முன்பு நான் கேட்டேன். இப்போது அண்மையில் திருப்பூருக்கு வந்தாரே, அப்போது இரண்டு நாட்களுக்கு முன்பு நான் கேட்டேன். பதில் வந்ததா? நான் கேட்ட கேள்விக்கு ஏதேனும் பதில் சொல்லப்பட்டதா? புதிய கோரிக்கைகளை நான் கேட்கவில்லை. தேர்தலுக்கு முன்பு அவர் என்ன வாக்குறுதிகளை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொன்னாரோ, அதை செய்திருக்கிறாரா? நான் பல மாநாடுகளில், பல நிகழ்ச்சிகளில், குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றேன். நான் மட்டுமல்ல எல்லாத் தலைவர்களும் சொல்லுகின்றார்கள். நான் பிரதமராக வந்துவிட்டால், பி.ஜே.பி ஆட்சி மத்தியில் உருவாகிவிட்டால் வெளிநாட்டில் இருக்கக்கூடிய வங்கிகளில் இருக்கக்கூடிய கருப்புப்பணத்தை மீட்டெடுத்து வந்து இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் தலைக்கு 15 இலட்சம் வங்கியில் டெபாசிட் பண்ணுவேன். சொன்னாரா இல்லையா? நான் கேட்கின்றேன், ஒரு 15 ஆயிரம்? 15 ரூபாய்? இதைக் கேட்டால் அவருக்கு கீழே இருக்கக்கூடிய ஒரு அமைச்சர் நிதின் கட்கரி என்ன விளக்கம் சொல்கிறார். தேர்தலுக்காக சொன்னோம் அதை எல்லாம் கேட்கலாமா? நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று நினைக்கவில்லை அதனால் சொன்னோம் என்று பகிரங்கமாக பேட்டி தந்தாரா இல்லையா?
நான் கேட்கின்ற கேள்வி அவர் தந்த வாக்குறுதிகளில் ஏதேனும் ஒன்றாவது நிறைவேற்றப்பட்டிருக்கின்றதா? எதுவும் கிடையாது. அதைத்தாண்டி புதிது புதிதாக செய்திகளை சொல்ல ஆரம்பித்திருக்கின்றார். அதில் ஒன்று தான் டிபென்ஸ் காரிடார் அதாவது ராணுவ பாதுகாப்பு பெருவழித்தடம் என்று, அறிவிப்பு வெளிவந்திருக்கின்றது. தமிழ்நாட்டுக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால்? இதோ ராணுவ காரிடர் வந்துவிட்டது என்று ராணுவ அமைச்சராக இருக்கக்கூடிய நிர்மலா சீதாராமன் சொல்லுகின்றார்.
நான் கூட நினைத்தேன், ஒரு பெரிய திட்டம் போல் இருக்கின்றது, தமிழ்நாட்டுக்கு பல ஆயிரம் கோடியில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் வரப்போகிறது என்று நினைத்தேன். ஏற்கனவே, ஆவடியில் C.V.R.T.E எனப்படும் போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் இருக்கிறது. அதைப்போல அதே ஆவடியில் H.V.F – O.C.F இருக்கின்றது. திருச்சியில் O.F.D போல ராணுவ போர் கருவிகள் தளவாடங்கள் சீருடைகள் தயாரிக்க புதிய – புதிய தொழிற்சாலைகளை உருவாக்கப் போகிறார்கள் என்று நினைத்தோம். அதுவல்ல, ஒரு மிகப்பெரிய ஏமாற்றம் அதாவது இராணுவத்துக்கு தேவையான சில உபகரணங்களை தயாரிக்கும் வேலையை பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து தனியார் துறைக்கு சத்தம் இல்லாமல் தாரை வார்க்க போகிறார்கள். அதுதான் டிபென்ஸ் காரிடர்.
இராணுவத்துக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் பொறுப்பை தனியாருக்கு தரமாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்த மோடி. அதனை இன்று தனியாருக்கு தருவதற்கு முடிவு செய்திருக்கிறார் என்று சொன்னால் இதனால், ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறையை தனியார் வசம் ஒப்படைத்தால் இந்த நாட்டிற்கு ஆபத்து ஏற்படுமா? ஏற்படாதா? இது சாதாரண அரசியலையோ, பொருளாதாரத்தையோ அனைத்தையும் அறிந்தவர்கள் தான் தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆகவே, ராணுவ மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்ட போது அவர் சொல்லுகின்றார். ஏன் வரக்கூடாது தாரளமாக வரலாம் என்று சொல்லுகிறார்.
இந்திய ராணுவத்துக்கு தேவையான உபகரணங்கள் தயாரிக்கும் பொறுப்பை வெளிநாட்டு நிறுவனத்துக்கு ஒப்படைக்கலாமா? இதுதான் என்னுடைய கேள்வி. இதுவரை பொதுத்துறை நிறுவங்களின் மூலமாக ராணுவக் கருவிகள் தயாரித்து வந்ததை தனியாரிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். இதைத்தான் ராகுல் காந்தி தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார். பாருங்கள் ரபேல் ஊழல் 41% அதிக விலை கொடுத்து தனியாரிடம் வாங்கியிருக்கின்றார்கள்.
ஊழல் இல்லாத ஆட்சி என்றால் நான் கேட்கின்றேன், 5 ஆண்டுகாலமாக லோக்பால் அமைப்பை ஏன் அமைக்கவில்லை? என்ன அச்சம்? மோடிக்கு பயம். 2013ம் ஆண்டு லோக்பால் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இன்று வரை லோக்பால் தலைவர் யார்? என்று தெரியவில்லை. உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை.
இதுவரை தேர்வு நடைபெறவில்லை, 2017 வரை இழுத்தடித்தார்கள், இன்னும் சொல்லப்போனால் உச்ச நீதிமன்றம் இதுகுறித்து கண்டனம் தெரிவித்திருக்கின்றது. அதன்பிறகு கமிட்டி உருவாக்கியிருக்கின்றார்களே தவிர, இன்னும் அந்தக் கமிட்டிக்கு தலைவரை நியமனம் செய்யவில்லை. ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியும் பிரதமர் மோடிக்கு கிடையாது. காரணம் இது, கார்ப்பரேட்டுக்களுக்காக கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் கார்ப்பரேட் ஆட்சி.
வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்ற நரேந்திர மோடியின் ஆட்சியில் வளர்ச்சியில்லை எங்கு பார்த்தாலும் தளர்ச்சி தளர்ச்சி தளர்ச்சி தான் இன்றைக்கு உருவாகியிருக்கின்றது.
மோடி – வளர்ச்சியின் நாயகன் அல்ல. மோடி தளர்ச்சியின் நாயகனாக இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கின்றார். இது மக்கள் ஆட்சி அல்ல, இது ஒரு மன்னர் ஆட்சி.
மத்தியில் மன்னர் ஆட்சி மாநிலத்தில், கொத்தடிமை ஆட்சி எடுபுடி ஆட்சி. நன்றாக கவனிக்க வேண்டும். ஜெயலலிதாவின் காலில் விழுந்து அமைச்சராகி சசிகலாவின் காலை நோக்கி தவழ்ந்து முதலமைச்சராகி மோடியின் கையை காலாக நினைத்து இன்னமும் அந்தப் பதவியில் ஒட்டிக்கொண்டு இன்றைக்கு ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் இருக்கிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி. எடப்பாடி ஏதோ தன்னை ஜெயலலிதா போல நினைத்துக் கொள்கிறார். ஜெயலலிதாவிற்குக் கூட இவ்வளவு பாதுகாப்பு கிடையாது.
ஜெயலலிதா எவ்வளவு சர்வாதிகாரியாக இருந்தாலும், நாட்டை குட்டிச்சுவராக்கி இருந்தாலும் அவரிடத்தில் ஒரு மாஸ் இருந்தது. நான் இல்லை என்று மறுக்கவில்லை. இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி சொல்கின்றார், அதுதான் வேடிக்கையாக இருக்கின்றது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் கிராமத்தை பார்க்கப் போகின்றார். இதுவரை, கிராமத்தை பார்க்காதவர் என்கிறார்.
யாரு நானா? கலைஞர் அவர்கள், இதே தமிழ்நாட்டில் போகாத நகரம், போகாத கிராமம், போகாத மாநகராட்சி, போகாத பேரூராட்சிகளே கிடையாது. போகின்ற இடங்களில் எல்லாம், இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகக் கொடிகள் பறந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால், 100க்கு 90 சதவிகித கொடிகளை ஏற்றி வைத்தப் பெருமை தலைவர் கலைஞருக்குத் தான். அடுத்து யாருக்கு என்று கேட்டீர்கள் என்றால் கலைஞரின் மகன் இந்த அடியேனுக்குத் தான். ஒன்றும் வேண்டாம், ஒரே ஒரு டெஸ்ட், யார் துணையும் இல்லாமல், எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் எந்த நண்பர்கள் புடைசூழ இல்லாமல், தன்னந்தனியாக ஒரு கிராமத்திற்கு வருகின்றேன். கலைஞர் மகன் இவன் தான் ஸ்டாலின் தான் என்பார்கள். எடப்பாடி பழனிசாமி அவர்களே, நீங்கள் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் ஒரு கிராமத்திற்கு வாருங்கள் உங்களை யாராவது அடையாளம் சொல்லட்டும் சவாலா? தயாரா? கிராமத்துப்பக்கமே வரவில்லை என்று சொல்லுகின்றீர்களே.
பெயரில் இருப்பதால் தன்னை சாமியாகவே நினைத்துக்கொள்கிறார். இந்த ஓராண்டு காலத்தில் எத்தனை முறை சென்னைக்கும் சேலத்துக்கும் விமானத்தில் சென்று வருகிறார். இதனால் யாருக்கு இலாபம் என்றால், விமான நிலையத்திற்கு அதிகம் லாபம் கிடைத்திருக்கும். மக்களுக்கு எந்த துளி லாபமும் இல்லை.
சிரிக்காமல் பொய் சொல்கின்றவரை பார்த்திருக்கின்றீர்களா நீங்கள். அந்நிய முதலீட்டாளர் மாநாடு இரண்டாவது முறையாக நடத்தினார்கள். ஏற்கனவே, அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த நேரத்தில் முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார்கள். அப்படி நடத்திய நேரத்தில் அவர்கள் அறிவித்தது என்ன தெரியுமா? 2.4 இலட்சம் கோடி ரூபாய் நாங்கள் முதலீட்டை ஈர்த்திருக்கின்றோம் என்று சொன்னார்கள். ஆனால், ஒரு முன்னேற்றமும் இல்லை.
டெல்லி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அந்திய முதலீடு இன்றைக்கு அதிகமாகிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் குறைந்துள்ளது என்றால் என்ன அர்த்தம்? யார் தொழில் தொடங்க வந்தாலும் அவர்களது முதலீட்டில் பாதியை கமிஷனாக கேட்கும் ஆட்சி இது. அதனால்தான், நான் சொன்னேன். அண்ணா நமக்கு மூன்று தாரக மந்திரத்தை கற்றுக் கொடுத்தார். கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு. இவர்களின் தாரக மந்திரம் என்ன தெரியுமா? கரப்ஷன் – கமிஷன் – கலெக்ஷன். இதுவும் க.க.க. தான்.
மேகதாதுவில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதனைத் தட்டிக் கேட்க துப்பில்லை. தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் செய்தாலும் அதை கேட்கும் தைரியம் அ.தி.மு.க அரசுக்கு கிடையாது. நீட்தேர்வில் விதிவிலக்கு கேட்டு தீர்மானம் போட்டும் அதை கேட்டு பெற முடியவில்லை. இதனால் அடித்தட்டு மக்கள் வீட்டில் பிறந்த குழந்தைகள் மருத்துவக் கல்வி பயில முடியாத ஒரு நிலை. மீனவர் மீதான தாக்குதலை தடுக்கவில்லை. இந்தி திணிப்பை, சமஸ்கிருத திணிப்பை தடுக்க இந்த அரசு முன் வரவில்லை.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் எவ்வளவு பாதித்தது என்பது உங்களுக்குத் தெரியும். நிதி வரவில்லை, மீட்புப் பணிகள் சரவர நடக்கவில்லை. அது ஒருபுறம். ஆனால், ஒரு பெயருக்காவது நாட்டின் பிரதமர் வந்து பார்த்தாரா? நடந்து வர வேண்டாம், ஹெலிகாப்டரில் வந்து பார்க்கலாமே. ஆனால், எடப்பாடி பார்த்தார். அவர் ஹெலிகாப்டருக்கு கீழிருந்து வணக்கம் போட்டவர். அவரும் மேலே பறந்து கிளைமேட் சரியில்லை என கீழிறங்கி விட்டார்.
இதே வேறு மாநிலத்தில் ஏதாவது ஒரு சம்பவம் என்றால் பறந்து போயிருப்பார். சரி வரக்கூட வேண்டாம், ஒரு அனுதாப செய்தி? இதைக்கூட தட்டிக் கேட்க வக்கற்ற வகையற்ற நிலையில் அதிமுக ஆட்சி இருக்கிறது.
இன்றைக்கு கூட நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் முடித்து விட்டு தான் நான் இங்கு வந்திருக்கிறேன். சில நாட்களுக்கு முன்னால் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். நிதிநிலை அறிக்கையில் நிதியும் இல்லை, இந்த நாட்டு மக்களுக்கு நீதியும் இல்லை. இந்த அரசாங்கத்தின் மீதான ஊழல் பட்டியல் தயாரித்தால் அதில் நிச்சயம் நிதி இருக்கும். அந்தளவு கொள்ளை அடித்துவிட்டார்கள். இந்த அரசாங்கத்தின் கடன் தொகை 4 லட்சம் கோடி ஆகிவிட்டது. இது ஒன்று தான் எடப்பாடியின் சாதனை.
ஜி.எஸ்.டி வரி மூலமாக வசூலான தொகையில் 5 ஆயிரத்து 454 கோடி ரூபாய் பணம் மத்திய அரசு தமிழ்நாட்டுக்குத் தர வேண்டும். தரவில்லை என்று நிதி நிலை அறிக்கையில் கண்ணீர் வடிக்கிறார்களே தவிர, அதனை வாங்குவதற்கு மத்திய அரசிடம் வாதாடினார்களா? போராடினார்களா? என்றால் இல்லை.
வெறும் கண்ணீர் வடித்தால் நிதி கிடைத்துவிடுமா? அதைக்கூட துணிச்சலாக மத்திய அரசிடம் கேட்ட எடப்பாடி அரசுக்கு தைரியம் இல்லாதது ஏன்?
நாங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சிகளில் ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்தி வருகிறோம். வருகிற 17ம் தேதிக்கும் மீதியிருக்கின்ற பணிகளை முடிக்க இருக்கிறோம். இந்தியாவிலே நாம் தான் முதல் முறையாக மக்களை இதுபோன்று மக்களை நேரடியாகச் சந்தித்து குறைகளை கேட்டு வருகிறோம். ஆனால், இன்றைக்கு உள்ளாட்சிகளில் என்ன நிலைமை? உள்ளாட்சித் தேர்தலை கூட நடத்த முடியாத ஒரு நிலை. கேட்டால், திமுக சார்பில் ஆலந்தூர் பாரதி வழக்கு போட்டு நிறுத்தி வைத்திருக்கிறார் என ஒரு அபாண்டமான பொய் சொல்கிறார்கள். எதற்காக நாம் வழக்கு போட்டோம்? தேர்தலை நிறுத்த வேண்டுமென்பதற்காகவா? இல்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி முறைப்படி தேர்தலை நடத்த வேண்டுமென்பதற்காக தான் நாம் வழக்கு தொடர்ந்தோம். அவர்களுக்கு பயம். எங்கே தேர்தல் நடத்தினால் ஆளுங்கட்சி படு தோல்வியை சந்திக்குமோ என்ற பயம். அதனால் தான் இன்னும் தேர்தலை நடத்தாமல் இருக்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலும் வரவிருக்கிறது. அதில் மத்தியில் புதிய ஆட்சி வரவிருக்கிறது. அது நாம் சொல்லுகிற ஆட்சி. நம்முடைய ஆட்சி. நாம் கை காட்டுகிறவர் பிரதமராக அமரப்போகிற ஆட்சி. அப்படி நடைபெறுகிற நேரத்தில் தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் அநாதைகளாக இருக்கும் 21 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்திட வேண்டும். இப்போது இருக்கின்ற சூழலில் 21 தொகுதிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் தேர்தல் நடத்தி இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மாட்டீர்களா? என்பது தான் நம் தமிழ்நாட்டு மக்களின் மனநிலை. நாம் எங்கு சென்றாலும் நம்மிடம் கேட்பது, இந்த ஆட்சியை ஏன் விட்டு வைக்கிறீர்கள் என்பது தான். இந்த நிலையில் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.
நிதிநிலை அறிக்கை குறித்து நான் விமர்சித்தபோது உதவாக்கரை என்றேன். இன்றைக்கு துணை முதலமைச்சர் அதற்கு கிண்டலாக பதில் சொல்கிறேன் என்கிற பெயரில் ஒரு பதில் தந்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் உதவாக்கரை என்று சொல்கிறார் என சொல்லியிருக்கிறார். நேற்றைக்கு நான் சொன்னபோது, அந்த வார்த்தையை சபாநாயகர் நீக்கி விட்டார். ஆனால், துணை முதலமைச்சரே அதனைச் சொல்லி இன்றைக்கு அவைக்குறிப்பில் ஏற்றி விட்டார். எங்களுக்கு அதில் ஒரு சந்தேகம். இந்தக் கூட்டத்தைக் கூட பார்த்து விட்டு நாளை அதனை எடுத்தாலும் எடுத்து விடுவார்கள். இதைச் சொல்லிவிட்டு சொல்கிறார், ஸ்டாலின் அடிக்கடி கருப்புக் கண்ணாடி போட்டுப் பார்த்திருக்கிறேன். ஆனால் வெறுப்புக் கண்ணாடியோடு பார்த்திருக்கிறார் என்று சொன்னார். நாங்களாவது, கருப்புக் கண்ணாடி போடுவோம். நீங்கள் கறுப்பு உள்ளத்தை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இன்றைக்கு ஒரு வேடிக்கை நடந்தது. மக்களுக்கு இனாமாக கொடுக்கப்படும் தொகையில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கைக்கும், துணை நிதி நிலை அறிக்கைக்கும் நல்ல வித்தியாசம். நாங்கள் எல்லாம் கூட இதனை முதலில் கவனிக்கவில்லை. எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் அவர்கள் எழுந்து ஒரு விளக்கம் கேட்டார்கள். அதெல்லாம் முடியாது என உட்கார வைத்து விட்டார்கள். அதோடு விட்டிருக்கலாம். ஆனால், நாம் மாறி மாறி பேசுகிறோம் எனச் சொன்னார்கள். உடனே நான் எழுந்து, மாறி மாறி வருவதைப் பற்றி அவர் பேசுகிறார். நீங்கள் எப்படி மாறி மாறி அரசியல் நடத்துகிறீர்களோ அதைப்போலத் தான் என்றேன். உடனே அவர் சொல்கிறார், லட்சிய உணர்வோடு நாங்கள் இருக்கிறோம் என்றார். ஆமாம், லட்சிய உணர்வோடு தான் இருக்கிறீர்கள்; எடப்பாடி பழனிசாமி ஆட்க்கு வரக்கூடாது என்று எதிர்த்து ஓட்டுப் போட்டவர்கள் நீங்கள் என்றேன். உடனே உட்கார்ந்து விட்டார். அதற்குப் பிறகு படிக்கவே அச்சப்பட ஆரம்பித்து விட்டார்.
இதை எதற்காகச் சொல்லுகிறேன் எனச் சொன்னால், மக்கள் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்படாமல் பட்டவர்த்தனமாக மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார்கள். சின்ன சின்ன கட்சிக் கூட பி.ஜே.பி யை கூட்டணி சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள். இவர்களை மிரட்டி கூட்டணிக்கு அடிபணிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் அறிவிப்பு வர இருக்கிறது. நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள். ஊழல் செய்தவர்களும், ஊழல் செய்தவர்களுக்கு துணை போகக்கூடிய வகையில் இந்த அ.தி.மு.க அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. ஊழல் மட்டுமா? கொள்ளை மட்டுமா? கொலையும் செய்திருக்கிறார்கள். அது இந்த நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
அதுமட்டுமா, அவர்களுடைய கட்சியின் தலைவரின் மரணத்தையே மர்ம மரணமாக மாற்றி விட்டார்களே. அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நடந்த சம்பவங்கள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். தலைவர் கலைஞர் அவர்களும் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை குறித்த தகவல்களும், புகைப்படங்களையும் நாம் வெளியிட்டுக் கொண்டு தானே இருந்தோம். ஏன், பேரறிஞர் அண்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறைந்த போதும், எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறைந்தபோதும் தொடர்ந்து செய்திகள் வந்ததே. ஆனால், முதலமைச்சராக இருந்து அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து என்ன தகவல் வந்தது? ஜூஸ் குடித்தார். ஒரு கோடிக்கு இட்லி சாப்பிட்டார் என்று தானே சொன்னார்கள்.
அவரின் மர்ம மரணத்தில் இன்றைக்கும் விசாரணைக் கமிஷன் மூலம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. நான் எல்லா மேடைகளிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். விரைவில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் அமையவிருக்கிற நேரத்தில், முதலமைச்சராக இருந்து மறைந்த அம்மையார் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் அனைவரையும் சிறைக்குள் தள்ளுவோம். நம் தோழர்களை திருப்திபடுத்துகிறோமோ இல்லையோ, அதிமுக தொண்டர்களை திருபது படுத்துகிற முதல் வேலை தான் நமக்கு காத்திருக்கிறது. அதுதான் நம் முதல் வேலை.

எவ்வளவு அக்கிரமங்கள் இந்த ஆட்சியில், அந்த அம்மையார் மறைந்த உடனே அங்கிருக்கின்ற ஆவணங்களை பென் டிரைவ்களை எடுக்க கேரளாவில் இருந்து கூலிப்படை அனுப்பி வைத்திருக்கிறார்களே. இதனை நாங்கள் சொல்லவில்லை. அந்தக் கூலிப்படையை சேர்ந்தவர்களே சொல்லியிருக்கிறார்கள். அதனை தடுத்தவரை கொலை செய்திருக்கிறார்கள். அதனை மறைக்கு 4 கொலை. மொத்தம் 5 கொலை. 5 கொலை எடப்பாடி பழனிசாமி. விரைவில் இவரும் ஜெயிலுக்கு செல்லவிருக்கிறார். இது அவருக்கு வெட்கமா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், தமிழ்நாடு மக்களாகிய நமக்கு வெட்கமாக இருக்கிறது. இந்த நிலையில் இருக்கக்கூடிய தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கு, அறிஞர் அண்ணாவின் உருவாக்கித் தந்த வழியில், தலைவர் கலைஞர் அவர்கள் பாடுபட்ட முறையில் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உருவாகுவதற்கு சபதமேற்போம்.

நன்றி வணக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *