ராஜராஜனை விமர்சிப்பது ஏற்புடையதுதானா? மூத்த பத்திரிக்கையாளர் ராஜதுரை கட்டுரை.!!

தமிழகம்

ராஜராஜனை
விமர்சிப்பது
ஏற்புடையதுதானா? மூத்த பத்திரிக்கையாளர் ராஜதுரை கட்டுரை.!!

 


———————————–
தமிழர்களின் பொற்காலமான சங்க காலத்திற்குப் பிறகு (கி. மு. 5ம் நூற்றாண்டு முதல் கி. பி 3ம் நூற்றாண்டு வரை), பிற்காலச் சோழர்கள் கிபி 9 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் வரை சுமார் 600 ஆண்டுகள் களப்பிரர்கள், பல்லவர்கள் போன்ற அந்நியர்களே தமிழ்மண்ணை ஆண்டனர். தமிழகத்தை தம் அதிகாரத்தில் வைத்திருந்தனர்.

அந்நியர்கள் ஒரு மண்ணை ஆளும் போது எத்தகைய வழிகளில் எல்லாம் பிரிவினையையும் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் பிற்போக்குத்தனங்களையும் உண்டு பண்ணுவார்கள் என்பது யாவரும்
அறிந்ததே.!

இத்தனை நீண்ட அந்நியர் ஆட்சிக்குப் பிறகுதான் பிற்கால சோழர்கள் ஆட்சிக்கு வந்தனர். இவர்களில் ஒருவரான பேரரசன் ராஜராஜன் அக்கால சூழலுக்கு ஏற்ப மிக சிறப்பானதொரு ஆட்சியை தந்தான்.குறிப்பாக அவன் பின்பற்றிய மத நல்லிணக்கம் போற்றுதலுக்குரியது.அவன் வந்த பிறகுதான் தமிழுக்கு மீண்டும் ஏற்றம் கிடைத்தது. பல துறைகளில் முத்திரை பதித்து முன்னுதாரணம் கற்பித்தான்.அவன் காலத்திலும் மகன் ராஜேந்திரன் காலத்திலும் தெற்காசியாவின் ஆளுமை சக்தி கொண்டவர்களாக தமிழர்கள் திகழ்ந்தனர்.

ராஜராஜன் ஆட்சி நடைபெற்ற 10,11 நூற்றாண்டுகளில்
உலகம் எப்படி இருந்தது என்பதை பார்க்க வேண்டும்.
இக்கால கண்ணோட்டம் கொண்டு ராஜராஜன் ஆட்சியை பார்த்தால் குறைகள் தெரிவது இயல்பே. . அப்படிப் பார்ப்பது அறிவுடைமை ஆகாது.

திருக்குறளை விமர்சனம் செய்த தந்தை பெரியார் பின்னர் தன் முடிவை மாற்றிக் கொண்டு திருக்குறள் மாநாடு நடத்தினார். ஏன் தம் முடிவை மாற்றினார் என்பதை வரலாற்றுப் புரிதலோடு பார்ப்பவர்களுக்கு விடை தெரியும்.

தமிழ்ச்சமூகம் உணர்வு பூர்வ சமூகம், இது அறிவுபூர்வ சமூகமாக மாற வேண்டும் அப்போதுதான் உலகத்தோடு போட்டி போடும் சமூகமாக திகழும் என்று தமிழறிஞர் க. ப. அறவாணன் கூறுவார். அக்கருத்து இந்நிகழ்வு க்கும் பொருந்தும். பா. ரஞ்சித் ஒரு திரைத்துறை வித்தகர்.ஆனால், வரலாற்று நிபுணர் அல்ல. எனவே அவருடைய விமர்சனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை. வரலாற்றுத் துறையில் உள்ள அவருடைய நண்பர்கள்’ ரஞ்சித் சொல்லிவிட்டாரே என்று அவர் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல், அவருக்கு யதார்த்த நிலவரத்தைப்புரிய வைக்க வேண்டும்.

‘பிறப்பிக்கும் எல்லா உயிருக்கும்’ என்ற வள்ளுவன் கூற்றுப்படி,
தமிழர்களுக்கு சாதி கிடையாது. வெளியில் இருந்து வந்தவர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள உருவாக்கிய சதி தான் சாதி.

சாதியற்ற சமுதாயம் படைக்க வேண்டியது தமிழர்களின் தலையாய கடமை. உள்ளார்ந்த சுத்தியுடன் நீண்ட பயணத்துக்குப் பிறகுதான் அது சாத்தியப்படும். அந்த இலக்கு நோக்கி பயணிப்போம்.

  • ஐரோப்பாவில் அறிவியல் யுகம் தோன்றுவதற்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே,
    தற்கால நவீன உலகமே வியக்கும் வகையிலானதும் பொறியியல் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுவதுமான பெரிய கோயிலை தஞ்சையில் எழுப்பி, தமிழினத்தின் உன்னத அடையாளமாகத் திகழும் பேரரசன் ராஜ ராஜனின் புகழுக்கு சிறு களங்கமும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள இன்றியமையாத கடமையாகும்.
    – ம. வி. ராஜதுரை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *