மேட்டூர் அணை நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி முதல்வர் மேட்டூர் அணையை இன்று திறந்து வைத்தார்.!!

தமிழகம்

கர்நாடகாவில் பெய்த  கனமழை காரணமாக  நிரம்பிய  மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் பழனிசாமி. முதல்கட்டமாக நொடிக்கு 3000 கன அடி தண்ணீர் விடப்படுகிறது. கர்நாடகத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதி மற்றும் கேரளத்தின் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பி வருகின்றன. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி நொடிக்கு 3 லட்சம் கனஅடி  நீர் காவிரி ஆற்றில்  வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரானது திங்கள்கிழமை காலை  நிலவரப்படி  2.10 லட்சம் கன அடியாக  தமிழக – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு  வழியாக  ஒகேனக்கல்லுக்கு வந்தது.  இதையடுத்து,  காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும்  நிலையில்,  திங்கள்கிழமை காலை 11 மணி நிலவரப்படி நொடிக்கு 2.45 லட்சம் கன அடியாகவும், மாலை 4 மணி நிலவரப்படி நொடிக்கு 2.65 லட்சம் கன அடியாகவும், மாலை  5 மணி நிலவரப்படி நொடிக்கு 2.85 லட்சம் கன அடி நீரும் ஒகேனக்கல்லுக்கு  வந்து கொண்டிருந்தது. மாலை 6 மணியளவில் நீர் வரத்து நொடிக்கு 3 லட்சம் கனஅடியைத் தாண்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதை, மாமரத்துக்கடவு பரிசல் துறை, பிரதான அருவி,  சினி அருவி,  ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகள் மூழ்கியுள்ளன. காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. நீர்வரத்து அதிகரிப்பால், கடந்த 9-ஆம் தேதி 54.50 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்,  திங்கள்கிழமை மாலை 92.55 அடியைத் தாண்டியது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் அணையின் நீர்மட்டம்  35. 50 அடி உயர்ந்தது. அணையிலிருந்து நொடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 52. 65 டி.எம்.சி. யாக இருந்தது. நீர்மட்டம் 92.55 அடியைத் தாண்டியது. இதையடுத்து மேட்டூர் அணையின் நீர் மட்டம் 92.55 அடியைத் தாண்டியுள்ளதாலும், கணிசமான அளவில் நீர் வரத்து இருப்பதாலும் விவசாயிகள் நலன் கருதி பாசனத்துக்காக மேட்டூர் அணை இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 13) திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திங்கள்கிழமை அறிவித்திருந்தார். இந்நிலையில், சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி,  காவிரியாற்றில் மலர்தூவினார். முதல்கட்டமாக நொடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்திவிடப்படுகிறது. நீரின் அளவு படிப்படியாக தேவைக்கு ஏற்ப நொடிக்கு 28 ஆயிரம் கன அடி வரை அதிகரிக்கப்படும்.இன்று செவ்வாய்க்கிழமை திறக்கப்படும் நீர்,  ஜனவரி 28-ஆம் தேதி வரை பாசனத்துக்குத் திறந்து விடப்படும். அதன்பிறகு விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று அணையின் நீர் இருப்பைப் பொருத்து தண்ணீர் திறப்பு 15 நாள்களுக்கு நீட்டிக்கப்படும்.மேட்டூர் அணை திறப்பு மூலம் காவிரி மற்றும் காவிரி படுகையில் உள்ள ஏறக்குறைய 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். கால்வாய் பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். 700 ஏரி, குளங்களில் நீர் நிரப்பப்பட்டு, அதன் மூலமாக பாசனத்துக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், நிலத்தடி நீர் உயர்வடைந்து, குடிநீர்த் தேவைக்கும் பயன்படுத்த முடியும். விவசாயிகள் நீரினை அனைத்து கால்வாய்கள், தடுப்பணைகள் வாயிலாகப் பெற்று நீர் மேலாண்மை செய்து பாசனத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *