ஆசிய பங்கு சந்தைகளை கைப்பற்றும் டிராகன்

வணிகம்

பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளை வேறொரு நிறுவனமோ அல்லது தனிநபரோ வாங்கமுடியும் என்பது நாம் முன்னரே அறிந்த செய்திதான். ஆனால் ஒரு நாட்டின் பங்கு சந்தையையே வேறொரு நாட்டின் பங்கு சந்தை வாங்க முடியும் என்றால் நம்பத்தான் வேண்டும். இதனை டீமியூச்சுவலைசேஷன் என அழைக்கிறார்கள். நீண்டகாலமாக நடந்துவரும் இப்படியான வர்த்தகத்தில்தான் தற்போது சீனாவின் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது.

பங்குச் சந்தையில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை மாற்றியமைத்து, ஒரு நிறுவனம் குறிப்பிட்ட பங்கு சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இந்த செயல்பாடு நடைபெறும். பங்கு சந்தை ஒரு நிறுவனமாக மாற்றப்பட்டு, இயக்குநர்கள் நியமிக்கப்பட்டு, லாபமீட்டும் அமைப்பாக இதன்மூலம் உருவாக்கப்படுகிறது.

சமீபத்தில் இப்படி தனது பங்கு சந்தையின் கணிசமான பங்குகளை விற்பதாக அறிவித்திருந்தது வங்க தேசத்தின் டாக்கா பங்கு சந்தை (டிஎஸ்ஈ). இந்த பங்கு சந்தை பங்குகளைக் கைப்பற்றுவதற்காக இந்தியாவின் தேசிய பங்கு சந்தைக்கும், சீனா பங்கு சந்தைகளுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இந்தப் போட்டியில் கடைசியாக வென்றது சீனா. டாக்கா பங்கு சந்தையின் 25 சதவீத பங்குகளை 12.5 கோடி டாலருக்கு வாங்கியுள்ளது சீனாவின் ஷாங்காய் மற்றும் ஷென்சென் பங்கு சந்தைகள். டாக்கா பங்கு சந்தையின் தொழில்நுட்பத்தை முன்னேற்ற 3.7 கோடி டாலர் அளிக்கப்படும் எனவும் சீன பங்கு சந்தைகள் தெரிவித்துள்ளன. இந்தப் பங்குகளை கைப்பற்ற இந்தியாவின் தேசிய பங்கு சந்தை அளிப்பதாக சொன்ன தொகை சீனாவை விட 47 சதவீதம் குறைவு.

டாக்கா பங்கு சந்தையின் கணிசமான பங்குகளை கைப்பற்றியிருப்பதன் மூலம் இனிவரும் காலத்தில் தெற்காசியாவின் மூன்றாவது பெரிய பங்கு சந்தையில் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்தும். இது இந்தியாவின் பெரிய தோல்வியாக பார்க்கப்படுகிறது. டாக்கா பங்கு சந்தை மட்டுமல்லாது ஆசியாவில் உள்ள பல்வேறு பங்கு சந்தைகளிலும் குறிப்பிடத்தக்க அளவு பங்குகளை சீனா கைப்பற்றிவருகிறது. கராச்சியில் உள்ள பாகிஸ்தான் பங்கு சந்தையின் (பிசிஎக்ஸ்) 40 சதவீதப் பங்குகளை சீன நிறுவனங்களின் கூட்டமைப்பு கைப்பற்றி இருக்கிறது. ஷாங்காய் மற்றும் ஷென்சென் பங்கு சந்தைகள் மற்றும் சீனா பைனான்சியல் பியூச்சர் எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்கள் இணைந்து பிசிஎக்ஸில் 35 சதவீதப் பங்குகளையும், பாக்-சீனா இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி மற்றும் ஹபிப் வங்கி ஆகியவை தலா 5 சதவீதப் பங்குகளையும் கைப்பற்றியுள்ளன.

இதுதவிர நேபாளம் மற்றும் மியான்மர் பங்கு சந்தைகளிலும் சீனா பங்குகளை கைப்பற்றியுள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் பங்கு சந்தை (டிஏஎஸ்ஈ) , சவுதியின் தடாவுல் பங்கு சந்தைகளும் டீமியூச்சுவலைசேஷன் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் சீனா இவற்றையும் கைப்பற்ற முயற்சிக்கும் எனக் கூறப்படுகிறது. இவற்றின் மூலம் ஆசிய பங்கு சந்தைகளில் அசைக்கமுடியாத சக்தியாக சீனா உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பங்கு சந்தைகளை வாங்குவதில் சீனா தொடர்ந்து முன்னேறிவரும் நிலையில் இந்தியா பின்தங்குவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. சீனா ஒரு குறிப்பிட்ட பங்கு சந்தையைக் கைப்பற்றுவதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் சீன அதிகாரிகளே முன்னெடுப்பதாகவும், இதற்கு சீன அரசாங்கம் உதவி செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்திய அரசாங்கம் பிற நாட்டு பங்கு சந்தைகளை கைப்பற்றுவதற்கு எந்த மானியமும் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. சீன அதிகாரிகளைப் போல, இந்திய அதிகாரிகள் பிற நாடுகளுடன் பேசி எந்த ஏற்பாடும் செய்வதில்லை எனவும் கூறப்படுகிறது. ஆனால் சீனாவில் உள்ள பெரும்பான்மை நிறுவனங்கள் அரசுக்கு சொந்தமானவை என்பதால் அவற்றுக்கு உதவி செய்ய அரசு தயங்குவதில்லை , இந்தியாவில் நிலைமை அப்படியல்ல என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

சீனாவின் பங்கு சந்தைகள் அரசுக்கு சொந்தமானவையாக உள்ளன, ஆனால் இந்திய பங்கு சந்தைகள் அரசுக்கு சொந்தமானவை அல்ல போன்ற பிரச்சினைகளும் காணப்படுகின்றன. இவ்வாறான பல்வேறு சிக்கல்கள் இருப்பினும் இனிவரும் காலத்தில் பிற நாட்டு பங்கு சந்தைகளை கைப்பற்றுவதில் சீனாவின் ஆதிக்கத்தை இந்தியா முடிவுக்கு கொண்டுவராவிட்டால் பொருளாதார ரீதியிலான சிக்கல்கள் தவிர, அரசியல் ரீதியிலான சிக்கல்களும் எழும் வாய்ப்புகள் உள்ளன. வியட்நாம், கஜகஸ்தான் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தங்களது பங்கு சந்தையின் பங்குகளை விரைவில் விற்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்தியா இதுகுறித்து கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியமாகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *