உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன்

விளையாட்டு

21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் கடந்த ஒருமாத காலமாக நடைபெற்று வந்தது. 32 அணிகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – குரோஷியா அணிகள் மோதின. 80 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்த மாஸ்கோவில் உள்ள லுஸ்னிக்கி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 4-2-3-1 என்ற பார்மட்டில் களமிறங்கின. தொடக்க நிமிடங்களில் குரோஷியா அணி ஆதிக்கம் செலுத்தியது. 8-வது நிமிடத்தில் அந்த அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. லுகா மோட்ரிச் கார்னரில் இருந்து அடித்த பந்தை பாக்ஸ் பகுதிக்குள் வைத்து பிரான்ஸ் வீரர் ஆலிவர் கிரவுடு தலையால் முட்டி கிளியர் செய்தார். 11-வது நிமிடத்தில் குரோஷியா அணிக்கு கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை இவான் பெரிசிச் பயன்படுத்திக் கொள்ளத் தவறினார்.

பிரான்ஸ் கோல் எல்லைக்குள் இவான் ராக்கிடிச் அடித்த கிராஸை கோல்கம்பத்துக்கு மிக நெருக்கமான நிலையில் சரியாக கட்டுப்படுத்தத் தவறினார் இவான் பெரிசிச். 15-வது நிமிடத்தில் இடது புறத்தில் குரோஷியா அணி சிறப்பான ஒரு நகர்வை மேற்கொண்டது. பாக்ஸ் பகுதியின் மையப்பகுதியில் நின்ற அன்ட்டி ரெபிக்குக்கு இவான் பெரிசிச் பந்தை கிராஸ் செய்தார். ஆனால் அதை பிரான்ஸ் வீரர் சாமுவேல் உமிட்டி உள்ளே புகுந்து திசை திருப்பிவிட்டார். 18-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கிரீஸ்மேன் ஃப்ரீகிக் மூலம் பெனால்டி பகுதிக்குள் பந்தை தூக்கி அடித்தார். அப்போது பிரான்ஸ் வீரர்கள் இருவருக்கு ஊடாக துள்ளியவாறு குரோஷியா அணியின் மரியோ மண்ட்சூகிக் தலையால் முட்டி பந்தை தள்ளிவிட முயற்சி செய்தார்.

ஆனால் பந்து கோல் வலையை துளைத்தது. மண்ட்சூகிக்கின் இந்த ஓன் கோலால் பிரான்ஸ் அணி 1-0 என முன்னிலை வகித்தது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட முதல் ஓன் கோலாக இது அமைந்தது. 21-வது நிமிடத்தில் ஃப்ரீகிக்கில் இருந்து லுகா மோட்ரிச் அடித்த பந்தை கோல்கம்பத்துக்கு நெருக்கமாக நின்ற விடா தலையால் முட்டி கோலாக மாற்ற முயன்றார். ஆனால் பந்து கோல்கம்பத்துக்கு மேலாகச் சென்று ஏமாற்றம் அளித்தது. 28-வது நிமிடத்தில் குரோஷியா அணி பதிலடி கொடுத்தது.

லுகா மோட்ரிச் அடித்த ஷாட்டை பெற்ற மரியோ மண்ட்சூகிக் அதனை விடாவுக்கு வழங்க அவர் பெரிசிச்சுக்கு தட்டிவிட்டார். பெரிசிச், பாக்ஸின் விளம்பில் இருந்து வலுவாக அடித்த ஷாட் கோல்கம்பத்தின் வலது ஓரத்தை துளைத்தது. இதனால் ஆட்டம் 1-1 என்ற சமநிலையை அடைந்தது. 34-வது நிமிடத்தில் கீரீஸ்மான் அடித்த ஷாட், பெனால்டி பகுதியில் நின்ற குரோஷியா வீரர் இவான் பெரிசிச் கையில் பட்டது. இதனால் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி கிக் வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி கிரீஸ்மேன் கோல் அடிக்க பிரான்ஸ் அணி முதல் பாதியில் 2-1 என முன்னிலையில் இருந்தது. 48-வது நிமிடத்தில் கோல்கம்பத்துக்கு மிக நெருக்கமான நிலையில் இருந்து அன்ட்டி ரெபிக் அடித்த ஷாட்டை, பிரான்ஸ் கோல்கீப்பர் ஹியூகோ லொரிஸ் துள்ளியவாறு கோல்கம்பத்துக்கு மேலாக தட்டிவிட்டார். 52-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் பால் போக்பா, கிளியான் பாப்பேவுக்கு கோல் அடிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார். ஆனால் அவர் அடித்த ஷாட்டை டேனியல் சுபாசிச் தடுத்தார். 59-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி 3-வது கோலை அடிக்க குரோஷியா அணி அதிர்ச்சியில் உறைந்தது.

இந்த கோலை பால் போக்பா அடித்தார். முதலில் அவர், அடித்த ஷாட் தடுக்கப்பட்டது. ஆனால் மீண்டும் அவரிடம் பந்து திரும்பி வந்த நிலையில் அதை அற்புதமாக கோலாக மாற்றினார். அடுத்த 6-வது நிமிடத்தில் கிளியான் பாப்பே கோல் அடித்து மிரளச் செய்தார். லூகாஸ் ஹர்னாண்டஸ் பந்தை வேகமாக கடத்தியபடி குரோஷியா கோல் எல்லைக்குள் நுழைந்த நிலையில், வலது புறம் நின்ற பாப்பேவுக்கு தட்டி விட்டார். அவர் வலுவாக அடித்த ஷாட் கோல்கம்பத்தின் இடது ஓரத்தை துளைத்தது. இதன் மூலம் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோல் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார் பாப்பே. அவர் அடித்த கோலால் பிரான்ஸ் அணி 4-1 என்ற வலுவான முன்னிலையை பெற்றது.

69-வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல்கீப்பர் ஹியூகோ லொரிஸ் செய்த தவறை பயன்படுத்தி குரோஷியா வீரர் மரியோ மண்ட்சூகிக் கோல் அடித்தார். இதனால் கோல்விகிதத்தை குரோஷியா அணியால் 2-4 என குறைக்க மட்டுமே முடிந்தது. முடிவில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்வது இது 2-வது முறையாகும். அந்த அணி 1998-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் பட்டம் வென்றிருந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த அணி மீண்டும் மகுடம் சூடியுள்ளது. அதேவேளையில் முதன் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைக்கும் குரோஷியா அணியின் கனவு நிறைவேறாமல் போனது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *