பத்திரிகை செய்தி.சென்னையின் 13-வது வானவில்-சுயமரியாதை பேரணி கொடியேற்றத்துடன் தொடங்கியது.!!!

தமிழகம்

நவீன எல்ஜிபிடி இயக்கத்தின் திருப்புமுனையாகக் கருதப்படும் ஸ்டோன்வால் கலவரத்தின் நினைவாக ஜூன் மாதம் உலகம் முழுவதும் எல்ஜிபிடி பெருமை மாதமாக கொண்டாடப்படுகிறது.கடந்த 2009ஆம் ஆண்டு முதல் சென்னையில் வானவில் சுயமரியாதை பேரணி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாற்றுப்பாலின மற்றும் பாலீர்ப்பு மக்களின் பன்முகத்தன்மையை கொண்டாடும் வகையிலும் தங்களது கோரிக்கைகளை அரசுக்கும் பொது சமூகத்திற்கும் வெளிப்படுத்தும் நோக்கத்திலும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஊரடங்கு மற்றும் கொரோனா பெரும் தொற்றின் காரணமாக சுயமரியாதை பேரணி மற்றும் ஒன்று கூடல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் உள்ள பல குழுக்கள் இணைய வழியாக சிறுசிறு நிகழ்வுகளை நடத்துகின்றன.

தொடர்ச்சியான குழப்பங்கள் மற்றும் கவலைகளுக்கு உள்ளாகும் சமூக மக்களை உற்சாகமூட்டி நல்வழிப்படுத்தும் நோக்கில் ஜூன் மாதத்தின் முதல் நாள் நிகழ்வினை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்கும் வண்ணம் கொண்டாட சகோதரன் அமைப்பு முடிவு செய்தது.

அதன் தொடர்ச்சியாக இனிய பெருமை மாதத்தின் தொடக்க விழா நிகழ்வு இன்று (01/06/2021) சென்னை சகோதரன் அலுவலகத்தில் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

சகோதரன் பொதுமேலாளர் ஜெயா, தோழி அமைப்பின் நிறுவனர் சுதா, கட்டியக்காரி நாடகக்குழு நெறியாளர் ஸ்ரீஜித் சுந்தரம், தமிழ்நாடு LGBT இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வானவில் கொடியை ஏற்றி வைத்தனர்

முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடைபெற்ற இந்த நிகழ்வில் குறைந்த அளவிலான மக்கள் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியையும், அன்பையும், இனிப்புகளையும் பரிமாறிக் கொண்டனர்.

மேலும் பொதுமக்களுக்கு வண்ணவண்ண முகக் கவசங்கள் மற்றும் இனிப்புகளை சமூக மக்கள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கொரோனா தொற்றால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் சமூக ஆர்வலர்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்வு முன் களப்பணியாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வாகவே கருதப்படுகிறது.

மேலும் சமூக மக்கள் தங்களுடைய மனக் குழப்பங்களை அகற்றி மகிழ்ச்சியை தங்களுக்குள் ஏற்படுத்தி இனிமையான வாழ்வை வாழ வேண்டும் எனவும் இந்த கொரோனா பெருந்தொற்றிலிருந்து அனைவரும் மீண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிகழ்வில் தோழி அமைப்பின் சபிதா, பர்சானா, சகோதரன் அமைப்பின் தமக்கனா, தனுஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *