கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கருவறை மேற்கூரையில் திடீரென தீ விபத்து.!!!

தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கருவறை மேற்கூரையில் நேற்று காலை 7 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கருவறையில் ஏற்றி வைத்த விளக்கில் இருந்து தீ படர்ந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. தீ விபத்து குறித்து மண்டைக்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்டமாக கோயிலில் உள்ள 7 சி.சி.டி.வி.கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். தொடர்ந்து கோயில் மேல் சாந்தி மற்றும் குருக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் நேற்று மாலை கோயிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு வழக்கமான நித்திய பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் இன்று தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் மண்டைக்காடு கோயில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். இதில் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் நயினார் நாகேந்தின், எம்.ஆர்.காந்தி, பா.ஜ.க மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், குமரி மாவட்ட பா.ஜ.க தலைவர் தர்மராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கோயிலை பார்வையிட்ட பிறகு பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மேற்கூரை தீ பிடித்து எரிந்த சம்பவத்திற்கு கோயில் நிர்வாக அலட்சியமே காரணம். இதனால் இந்து மக்கள் மனம் புண்பட்டு உள்ளது. இந்த கோயில் கேரள மாநில ஆகம விதிகளுக்கு உட்பட்டது. நேற்று செய்த பரிகார பூஜை தவறானது. எனவே கேரள நம்பூதிரிகளைக்கொண்டு உடனே தேவ பிரசன்னம் பார்த்து பரிகார பூஜைகள் நடத்த வேண்டும்.க்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். தமிழக அரசு உடனே இதை நிறைவேற்ற வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற கோயில்கள் உள்ளது. அவைகளை அரசு பாதுகாக்க வேண்டும். இனிமேல் எந்த கோயில்களிலும் இது போன்ற தீ விபத்துக்கள் நடக்க கூடாது.

மசூதிகளை முஸ்லீம்கள் நிர்வகிக்கின்றனர். இந்து கோயில்களை இந்துக்களே நிர்வகிக்க வேண்டும். எனவே கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

மண்டைக்காடு கோயிலில் முன்னாள் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் பங்களிப்பில் உருவாக்கப்பட்டுள்ள தங்க தேர் பவனி முடங்கி உள்ளது. திருவிழாவின் போது பக்தர்கள் தங்க தேர் இழுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *