மூத்த பத்திரிகையாளர் டி.கே.இரவீந்திரன மறைவு..!!

சென்னை

 

மூத்த பத்திரிகையாளர்
டி.கே.இரவீந்திரன மறைவு பத்திரிகையாளர்கள் இரங்கல்

மாலைமுரசு குழுமத்தில் நீண்ட காலம் பணியாற்றி
ஓய்வு பெற்ற மூத்த பத்திரிகையாளர்
டி.கே.இரவீந்திரன்(69) நேற்று இரவு (ஜூன்14- தேதி இரவு)மரணம் அடைந்தார். கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டு மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனையில் கடந்த 19 ந்தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்க வில்லை.

இவர் சிறந்த தமிழ் எழுத்தாளராக அருமையான பத்திரிகையாளராக திகழ்ந்தார். ஐயா பா .ராமச்சந்திர ஆதித்தனாரின் நம்பிக்கைக்குரிய பத்திரிகையாளராக மாலைமுரசு குழுமத்தில் நீண்ட காலம் பணியாற்றினார். மாலைமுரசு குழுமத்திலிருந்து “நவீனம்” என்ற மலையாள மாத இதழ் வெளிவந்தது. அதன் ஆசிரியராக பொறுப்பேற்று சிறந்த பங்களிப்பை கொடுத்தார்.

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி அமுலுக்கு வர கல்வியாளர் வசந்தி தேவி போன்றவர்களின் கருத்துகளை பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவந்தார். மாலைமுரசு, தேவி, பெண்மணி போன்ற பத்திரிகைகளில் சிந்தனையை தூண்டும் பல படைப்புகளை கொடுத்தவர். மாலை முரசில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தமிழ் இலக்கிய உலகிற்கு தொண்டாற்றும் படைப்பாளியாக விசுரூபம் எடுத்தார்.

“நந்திபுரத்து நாயகன்” “முகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்” “பகதூர் கான் திப்புசுல்தான்” “மாமன்னர் அக்பர்” “இருமுடி சோழன் உலா” போன்ற வரலாற்று படைப்புகளை உருவாக்கி தமிழ் அன்னையின் பாதங்களில் சமர்ப்பித்தார். இவை அனைத்தும் விகடன் பிரசுரத்தின் மூலம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.

சங்க காலத்திற்குப் பிறகு சுமார் மூன்று நூற்றாண்டுகள் களப்பிரர் காலமாக கருதப்படுகிறது. இவர்கள் யார? என்பது குறித்து வரலாற்று ஆய்வாளர்களிடையே இதுவரை ஒருமித்த கருத்து இதுவரை ஏற்படவில்லை. அது தொடர்பாகவும் தீவிர ஆய்வு செய்து “தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்” என்கிற ஒரு ஆய்வு நூலையும் படைத்துள்ளார்.

தமிழ், மலையாளம்,ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் ஆளுமை கொண்டிருந்தவர். வரலாற்று மூலநூல்கள் ஆய்வுக்கு இது பெரிதும் உதவியாக இருந்தது.

கேரளாவை பூர்வீகமாக கொண்டாலும தமிழ்நாட்டில் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழ் பத்திரிகை -இலக்கிய உலகிற்கு மகத்தான பங்களிப்பு செய்தவர். தொடர்ந்து பல்வேறு நூல்களை எழுதிக் கொண்டிருந்தார்.

2000 ஆண்டுகளை பின்நோக்கி சென்று வேநாடு (தென் சேரநாடு) வரலாறு குறித்து ஒரு விரிவான ஆய்வு நூலை வெளியிடுவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக கொச்சி கொடுங்கல்லூர், கொல்லம், ஊட்டி, நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி காமநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களுக்கு சென்று வந்து ஆய்வு மேற்கொண்டு வந்தார். திருப்பாப்பூர் சுவாமி அடியார் வகையறாவை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மேற்கொண்டுள்ள, இந்த வரலாற்று ஆய்வு பணிக்கு டி.கே.ரவீந்திரன் தலைமை பொறுப்பு ஏற்றிருந்தார்.

கொரோனா காலத்திலும் அதற்கான வாசிப்பு, எழுத்து, தேடல் என்று முழுவீச்சில் இயங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில்தான் அவர் கொரோனா கொடிய நோய் பிடியில் சிக்கினார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். சேவைச் செம்மல் மாலைமுரசு ராஜதுரை அவர்கள் உடனிருந்து தன்னால் முடிந்த உதவிகளை செய்து தந்தார்.

இத்தகைய சூழலில்தான் யாரும் எதிர்பாராத வகையில் மறைந்துவிட்டார். டி.கே.இரவீந்திரன் மனிதநேய பண்பாளர் ஆவார். அவருக்கு மனைவியும் 2 பெண்குழந்தைகளும் உள்ளனர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *