கேரளாவில் கனமழை ஏராளமான மக்கள் வீடுகள் இழப்பு !!

சென்னை

திருவனந்தபுரம்  ஆக.11 கேரளாவில்  50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் மழை வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. மிகவும் உயரமான இடுக்கி அணை உள்ளிட்ட மாநிலத்தின் 24 அணைகளும் திறந்துவிடப்பட்டு இருப்பதால் கேரளாவில் மத்திய பகுதி முழுவதும் வெள்ளமாக காட்சியளிக்கிறது. இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர்.

பிரதமர் மோடி முதலமைச்சர் பினராயி விஜயனை தொடர்புகொண்டு மத்திய அரசு எல்லா உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்துள்ளார். முப்படை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழைக்காலம் முடியும் தருவாயில் கடந்த சில நாட்களாக வயநாடு, பாலக்காடு, கண்ணனூர், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்தது. இதனால் ஆசியாவிலேயே மிக உயரமான அணையான இடுக்கி அணையின் நீர்மட்டம் 2403 அடியை தொட்டது. இதேபோல் செருதோனி அணை, மலம்புழா அணை, உள்ளிட்ட 24 அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. புதன்பனல் என்ற இடத்தில் வீட்டின் மீது பாறை சரிந்து விழுந்ததில் ஹசன் குட்டி என்பவரின் 5 பேர் கொண்ட குடும்பமே பலியானது. மாவட்டம் முழுவதும் மழை வெள்ளத்திற்கு 26 பேர் பலியாகியுள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். உருக்கன்சேரி என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்தன. இப்பகுதியில் சிலரை காணவில்லை என கூறப்படுகிறது.

வயநாடு பகுதியில் தண்டவாளம் மற்றும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த மாவட்டமே தகவல் தொடர்பின்றி கிடப்பதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி நேற்றிரவு கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தொடர்புகொண்டு மத்திய அரசு எல்லா உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார். கேரளாவை சேர்ந்த மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் கூறுகையில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் மழைபெய்துள்ளது என்றார்.

எல்லா நதிகளிலும் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் ஓடுவதால் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சுமார் 1 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு 150 நிவாரண முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ளனர். கடந்த 26 ஆண்டுகளில் இடுக்கி அணை நிரம்பி திறந்து விடபட்டிருப்பது இதுவே முதல்முறை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

கோழிக்கோடு, வயநாடு, பாலக்காடு, இடுக்கி, மலப்புரம், கொல்லம் ஆகிய மாவட்டங்களில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் கனத்த மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கொச்சி விமான நிலையத்தில் ஒடுபாதையில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

அனைத்து மாவட்டங்களிலும் மீட்பு பணிக்காக ராணுவம் கடற்படை, விமான படை அனுப்பபட்டுள்ளது. கப்பல் மற்றும் படகுகளும் மீட்பு பணிக்காக விரைந்துள்ளன.இன்று காலை முதல்வர் பினராயி விஜயன் மாநில அமைச்சரவை கூட்டத்தை அவசரமாக கூட்டி நிவாரண பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மழைவெள்ளம் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *