ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா தீர்மானம் தமிழ் ஈழத்துக்கான விடுதலை வெளிச்சம் வைகோ அறிக்கை.!!

சென்னை தமிழகம்

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா தீர்மானம்
தமிழ் ஈழத்துக்கான விடுதலை வெளிச்சம்

வைகோ அறிக்கை

இனப்படுகொலையால் இருண்டு கிடக்கும் ஈழத் தமிழர்கள் வரலாற்றில் விடியலுக்கான வெளிச்சம் பரவத் தொடங்கி விட்டது என்பதற்கான பிரகடனமே ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா மாநகர சபை தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும் என்பதை எண்ணும்போதே நெஞ்சில் பேருவகை பெருவெள்ளமாகிறது.

பார்சிலோனா மாநகர சபைக்கும் அதன் உறுப்பினர்களுக்கும், பார்சிலோனா மக்களுக்கும் – இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட தமிழர் இயக்கத்துக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மகிழ்வுடன், நன்றியுடன் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல், இனவழிப்புக் குற்றங்கள், போர்க் குற்றங்களுக்கான சர்வதேச நீதி விசாரணை மற்றும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும், பார்சிலோனா மாநகர சபை தனது வருடாந்தர கூட்டத் தொடரில் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் மற்றும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போன்றவற்றை ஊக்குவிக்கும் நோக்குடன் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்குத் தாம் இத்தீர்மானத்தை அறிவிப்பதாக பார்சிலோனா மாநகர சபை தெரிவித்துள்ளது.

தீர்மானத்தின் நோக்கம்

தமிழர்கள் பாரம்பரியமாக 25 நூற்றாண்டுகளுக்கு மேல் இலங்கைத் தீவில் வாழ்ந்து வருகின்றபோதிலும், இலங்கை அரசாங்கத்தால் அவர்களின் சுயநிர்ணய உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் தமிழர்கள் பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து 1948-இல் சிங்கள காலனித்துவத்திற்கு உட்படுத்தப்பட்டனர். இச்சிங்கள காலனித்துவ ஆட்சியில் தமிழர்கள் மீது இன்றுவரை பல அடக்குமுறைச் சட்டங்கள் திணிக்கப்பட்டு, அவர்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.

இதன் எதிரொலியாகவே 1960-ஆம் ஆண்டுகளிலிருந்து தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராட ஆரம்பித்தனர். ஆனால், இலங்கை அரசோ, 1972-இல் தமிழர்களின் இந்நியாயமான போராட்டத்தை ஒடுக்கி அவர்களை இன அழிப்புச் செய்யும் நோக்குடன் குடியரசுச் சட்டம் அமல்படுத்தப்பட்டு தமிழர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இச்சர்வாதிகாரப் போக்கே தமிழர்களை ஆயுதவழியில் போராடத் தூண்டியது.

இவ்வாறாக தமிழின அழிப்பின் வரலாற்றை இன்றைய நாள் வரைக்கும் ஆய்வு ரீதியாக ஆதாரங்களுடன் வலியுறுத்தி நிற்கின்றது. இத்தீர்மானமானது இலங்கை அரசினால் ஈழத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வுகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்பதை வலியுறுத்திக் காட்டுகின்றது. ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கான நீதி விசாரணையை அனைத்துலக நீதிமன்றம் பொறுப்பேற்று ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வலியுறுத்துவதுடன், இது தொடர்பாக ஆய்வினை மேற்கொள்ள சிறப்புப் பிரதிநிதி ஒருவரை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நியமிக்க வேண்டும் என்பதையும் வேண்டியுள்ளது.

தீர்மானங்கள்

சர்வதேச சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் இலங்கையில் சமாதானத்தை மீட்டெடுத்தல்.

இலங்கையில் அரசியல் மற்றும் போர்க்கைதிகள் தாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழர் பிரதேசங்களின் இலங்கை இராணுவத்தின் 36 வருட ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

தமிழ் மக்களின் சுதந்திரமான இறையாண்மை மற்றும் சாத்தியமான அரசை அனுபவிக்கும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கான தீர்வு தமிழீழம் ஆகும்.

ஈழத் தமிழ் அகதிகள் அனைவரும் அவர்களின் பூர்வீகத் தாயகத்திற்குச் செல்வதற்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.

சர்வதேச உத்தரவாதங்களுடன் இருதரப்பு ஒப்பந்தம் மூலம் தமிழர் மற்றும் சிங்களவர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.

தமிழ்ப் பிரதேசங்களில் பயங்கரவாதத்தை நிலைநாட்டும் இலங்கை அரசாங்கம், இலங்கை இராணுவம் மற்றும் தமிழ் மக்களின் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அரச ஒட்டுக் குழுக்களின் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறாக, இத்தீர்மானம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரப்படுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் சபையிடம் வலியுறுத்தியுள்ளது.

இன அழிப்பு, சர்வதேச மனித உரிமை மீறல்கள் மற்றும் 2002 ஜூலை தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் அலுவலகம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இலங்கை அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஐ.ந.வின் சிறப்புத் தூதுவர் ஒருவரைப் பிரத்தியோகமாக நியமிக்க ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கும், ஆணையாளருக்கும் இத்தீர்மானம் வேண்டுகோள் விடுக்கிறது.

இத்தீர்மானத்தின் விளைவாக ஐரோப்பாவின் ஏனைய பல நகரசபைகள் தமிழர் இயக்கத்துடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ளது. தமிழீழ வடமாகாண சபை, தமிழ்நாடு சட்டமன்றம் போன்றவற்றைத் தொடர்ந்து மிகவும் வலுவான தீர்மானமாக வெளிவந்திருக்கும் இத்தீர்மானமானது ஈழத் தமிழர்களின் தொடர் தமிழின அழிப்பிற்கு எதிரான நீதிக்கான மற்றும் இறையாண்மைக்கான பயணத்திலும் ஒரு பெரிய முன்நகர்வாகும் என வைகோ இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *