தமிழக முதல்வராக மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பிறகு சில சலுகைகளை அறிவித்து வருவது
பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு சங்களின்
கோரிக்கைகளுடன்,தேசிய அளவில் செயல்படும் இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கமும்
கோரியுள்ள கோரிக்கைகளை அரசு கனிவுடன் நிறைவேற்றும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.
கொரோனா காலத்தில் பத்திரிகையாளர்களை முன்கள பணியாளராக அறிவித்து அவர்களுக்கு
ஊக்க தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் என்று அறிவித்தது மட்டும் அல்லாமல் உடனடியாக
அதற்கு செயல் வடிவம் கொடுத்து வழங்கிய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றியை
தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் பத்திரிகையாளர்களையும் வருமான வரம்பின்றி முதல்வரின் மருத்துவ காப்பீடு
திட்டத்தில் அரசு சேர்க்க வேண்டும் என்று முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகத்தில் கொரோனாவினால் மரணம் அடைந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு
நிவாரண நிதியாக வழங்கப்படும் தொகை ரூ.5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தப்படும்
என்று அறிவித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய ஊடக
பத்திரிகையாளர்கள் சங்கம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
அதே போல் முன்கள பணியாளர்கள் இறந்தால் ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என்ற நிலையில்,
பத்திரிகையாளர்கள் முன்கள பணியாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டதனால் மரணம் அடைந்த
பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கான நிவாரண நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்த
வேண்டும் என்றும், மேலும் அவர்கள் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் ஓய்வூதியம்
வழங்க பல்வேறு அமைப்புகளும் கோரியுள்ளதை கனிவுடன் பரிசீலனை செய்து பெருந்தொற்று
நோயால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பத்திரிகையாளர்கள் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம்
அளித்து, அவர்களின் குடும்பத்தினருக்கு ஒளி கொடுத்திட வேண்டுமென இந்திய ஊடக
பத்திரிகையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.