கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் குறைவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கியிருப்பது சற்று ஆறுதலளிக்கிறது. ஆனால் கோவிட் தொற்று தாக்கியவர்களுக்கு ஏற்படும் கறுப்பு பூஞ்சைத் தொற்று பலரை கலக்கத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.
குறிப்பாக, தமிழகத்திலும் 400-க்கும் மேற்பட்டவர்களை இந்தத் தொற்று பாதித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கறுப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் உயிரிழக்கும் நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன.
தேவையான மருந்து உள்ளிட்ட விஷயங்களில் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், கறுப்பு பூஞ்சைத் தொற்றைத் தொடர்ந்து வெள்ளை, மஞ்சள் பூஞ்சைத் தொற்றுகள் பரவுவதாகவும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில், கறுப்பு உள்ளிட்ட பிற பூஞ்சைத் தொற்றுகள் பற்றிய பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்கவும், பயத்தைப் போக்கவும் அவள் விகடன் ஒரு முன்னெடுப்பை எடுத்துள்ளது. அவள் விகடன் மற்றும் காவேரி மருத்துவமனையும் இணைந்து `கறுப்பு பூஞ்சைத் தொற்று… பயம் தெளிவோம்!’ என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.
மருத்துவமனையின் மூத்த தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன், மூத்த சர்க்கரைநோய் மருத்துவர் கே.பரணிதரன், ENT- தலை மற்றும் கழுத்து அறுவைசிகிச்சை மருத்துவர் நிராஜ் குமார் ஜோஷி ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.