புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மே 10ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
இதன்படி, வழக்கம் போல் காலை 5 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இயங்கிய காய்கறி, மளிகை, பால், மருந்துப் பொருட்கள் அடங்கிய அத்தியவசிய கடைகள் செவ்வாய்க்கிழமை முதல் மாலை 5 மணி வரை இயங்குவதற்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளன.
பிற அனைத்து வித கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. வழக்கம்போல் அத்தியவசிய பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
தேனீர் கடைகள், உணவகங்களும் திறக்கப்பட்டு பார்சல் மட்டும் வழங்கப்படுகிறது. இவைகள் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படும்.
ஏற்கனவே மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வித சில்லரை மதுக்கடைகளும் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டதால், காலை 9 மணி முதல் மதுக்கடைகள் திறந்து இயங்குகிறது.