தி.மு.க. பொதுக்குழுவில் இன்று கட்சித் தலைவராக அதிகாரப்பூர்வமாக . மு.க.ஸ்டாலின் பேராசிரியர் அன்பழகனால் அறிவிக்கபட்டார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 7ம் தேதி காலமானார். அதனைத் தொடர்ந்து, திமுகவின் தலைவர் பதவி காலியானதால், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று நடைபெறும் என்றும் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்திருந்தார். இந்த கூட்டத்தில் தணிக்கை குழு அறிக்கை, திமுக தலைவர் பதவி மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர். திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின், பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இதனால் தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். இன்று நடைபெறும் பொதுக்குழுவில் இவர்கள் தேர்வானது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வானதை தமிழகம் முழுவதும் கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.