கேரள கனமழை வெள்ள நிவாரண உதவி:
ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கியது தமிழக எஸ்.டி.பி.ஐ. கட்சி !!
வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு முதல்கட்டமாக சுமார் ஒன்றரைகோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை தமிழக எஸ்.டி.பி.ஐ. கட்சி வழங்கியுள்ளது.
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் எஸ்.டி.பி.ஐ. கட்சி பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். சுமார் பத்தாயிரத்துக்கும் அதிமான செயல்வீரர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது அங்கு வெள்ளத்தால் சிதிலமடைந்து கிடக்கும் பகுதிகளை சீர்படுத்தும் பணிகளிலும், தொற்றுநோய் பரவாத வகையில் கழிவுகளை அகற்றியும், தேங்கி நிற்கும் நீரை வெளியேற்றியும், கிருமி நாசினிகளை தெளித்தும் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் தங்களது உடைமைகளை இழந்து நிற்கும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை அறிந்து அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிப் பொருட்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து வழங்கும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது கேரள மாநில எஸ்.டி.பி.ஐ. கட்சி.
*கேரள மக்களின் இந்த துயரத்தில் பங்கெடுக்கும் பொருட்டும், அவர்களின் துயரங்களை துடைக்கும் பொருட்டும் தமிழ் மாநில எஸ்.டி.பி.ஐ. கட்சியும் கேரள மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளை அளிக்க தீர்மானித்து, கடந்த வாரம் அதற்கான பணிகளை முடுக்கிவிட்டது. பொது இடங்கள், வழிபாட்டுத் தலங்களில் மக்களிடமிருந்து நிவாரண நிதி மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களும் திரட்டப்பட்டன. முதற்கட்டமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் திரட்டப்பட்ட சுமார் ஒருகோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.
இந்நிலையில், இன்று (ஆக.27) கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எர்ணாகுளம்-ஆலுவா பகுதிகளையும், அங்கு நடைபெற்றுவரும் நிவாரணப் பணிகளையும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் தலைமையில், மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா, மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், மாநில பொருளாளர் அபுதாஹிர் ஆகியோர் அடங்கிய குழு பார்வையிட்டதோடு, வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வரும் கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் நஸூருதீன் எலமரம் அவர்களிடம் கேரள மழை வெள்ள நிவாரணப் பணிக்காக தமிழ் மாநில எஸ்.டி.பி.ஐ. கட்சி திரட்டிய ரூ.50 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை முதல்கட்டமாக ஒப்படைத்தனர். நிவாரண நிதியை பெற்றுக்கொண்ட நஸூருதீன் எலமரம் கேரள மக்களின் துயரை துடைக்கும் பொருட்டு பெரும் உதவிகளை செய்துவரும் தமிழக எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கும், தமிழக மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இதன்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இ.எம்.அப்துற்ரஹ்மான், கேரள மாநில எஸ்.டி.பி.ஐ. பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, எர்ணாகுளம் மாவட்ட தலைவர் சவுக்கத்தலி உள்ளிட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர்.*
*இதன்மூலம் தமிழக எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கேரள மக்களுக்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகள் முதல்கட்டமாக செய்யப்பட்டுள்ளன.