ஜம்மு காஷ்மீர் தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் நேரலையில் பேசிக்கொண்டு இருந்த பிரபல எழுத்தாளர் திடீர் மரணம்…!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில கலை, கலாச்சார மற்றும் மொழிகள் துறை முன்னாள் செயலாளரும், எழுத்தாளருமான ரீட்டா ஜிதேந்திரா தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோதே உயிர் இழந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநில கலை, கலாச்சார மற்றும் மொழிகள் துறை முன்னாள் செயலாளர் டாக்டர் ரீட்டா ஜிதேந்திரா. அவர் ஸ்ரீநகரில் உள்ள தூர்தர்ஷன் கேந்திரா நிலையத்திற்கு நேற்று காலை சென்றார். தூர்தர்ஷனின் நேரடி ஒளிபரப்பான குட் மார்னிங் ஜம்மு காஷ்மீர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
குட் மார்னிங் ஜம்மு காஷ்மீர் நிகழ்ச்சியில் நன்றாக பேசிக் கொண்டிருந்த ரீட்டா திடீர் என்று இருக்கையின் பின்னால் சாய்ந்து மேலே பார்த்தபடி மூச்சுவிடத் திணறினார். மூச்சு திணறல் ஏற்பட்ட வேகத்தில் அவர் மூச்சு பேச்சு இல்லாமல் ஆகிவிட்டார். இந்த சம்பவம் காலை 8.30 மணி அளவில் நடந்தது. இதை பார்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பதட்டம் அடைந்தனர்.
மரணம் :-
ரீட்டா மூச்சு பேச்சு இல்லாமல் இருந்ததை பார்த்த டிவி நிலையத்தார் அவரை காப்பாற்ற முயன்றனர். பின்னர் அவரை எஸ்.எம்.ஹெச்.எஸ். மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட தூர்தர்ஷன் ஆட்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
எஸ்.எம்.ஹெச்.எஸ். மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் சலீம் தக் கூறியதாவது, ரீட்டா திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் உயிர் இழந்தார். இதயத்துடிப்பு திடீர் என்று தாறுமாறாக மாறி மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றார். ரீட்டாவின் உடல் அவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நன்றாக சென்ற ரீட்டா பிணமாக திரும்பி வந்ததை பார்த்த அவரின் குடும்பத்தார் கதறி அழுதனர்.
டிடி தூர்தர்ஷன் வரலாற்றில் முதல் முறையாக நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் விருந்தினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் எங்களுக்கு எல்லாம் பேரதிர்ச்சியை அளித்துள்ளது என்று குட் மார்னிங் ஜம்மு காஷ்மீர் நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான தன்வீர் மிர் தெரிவித்துள்ளார்.