பெரியார் சிலை அவமதிப்பு:
சமூக நீதிக்கு விடப்பட்ட சவால்
மதவெறிக் கும்பல் ஏவும் நஞ்சினும் கொடிய செயல்களை
முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்
வைகோ கண்டனம்
புத்துலகத்தின் தீர்க்க தரிசி; தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற சடங்கு சம்பிரதாயங்கள், பண்பாடற்ற செயல்கள் அனைத்துக்கும் பரம எதிரி என்று ஐ.நா. மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பால் புகழ்மிக்க பாராட்டைப் பெற்ற அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் சிலையின் மீது ஒரு கயவன் காலணி வீச முயன்றான் என்ற செய்தி கேட்ட மாத்திரத்தில் இரத்தம் கொதித்தது.
வர்ணாசிரமக் கொடுமையால் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சமஉரிமை பெற்று சமூக நீதியின் வெளிச்சத்தைக் காண வழிவகுத்தவர் ஈரோட்டுப் பகலவன். அவரது 140 ஆவது பிறந்த நாள் விழா நாளாகிய இன்று (2018 செப்டம்பர் 17) சென்னையில் சிம்சன் அருகில் நெடுஞ்சாலை மையத்தில் அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட சிலை மீது ஒரு காலிப் பயல் காலணி வீச முயன்றான். அந்த இடத்திலேயே சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களும், விடுதலை சிறுத்தைகளும் போர்க்குரல் எழுப்பினர். இந்தக் கேடுகெட்ட செயலில் ஈடுபட்ட நபர், பா.ஜ.க.வின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ஜெகதீசன் என்று அறிகிறோம்.
இந்த அக்கிரமத்தில் ஈடுபட்ட நபரை ஏன் இதுவரை பாரதிய ஜனதா கட்சி தங்கள் கட்சியிலிருந்து நீக்கி அறிவிக்கவில்லை? இத்தகைய செயல்களை ஊக்குவிப்பதே பாரதிய ஜனதாக கட்சிதான். மத்தியில் ஆளும் மதவாத பாசிச ஆட்சியின் எண்ணத்தைப் பிரதிபலித்தே பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தமிழ்நாட்டில் இருக்கும் நபர், பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசுவதும், தமிழ்நாட்டில் நிலவும் சமூக நல்லிணக்கத்தை நாசமாக்கிக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நீதித் துறையையும், காவல் துறையையும் கேவலமான இழிவான சொற்களால் வசை பாடுவதும் நாளும் நடக்கிறது. ஏன் இதுவரை அந்த மனிதன் கைது செய்யப்படவில்லை?
வழக்குப் போட்டிருக்கிறோம் என்று சொல்லி, தமிழக அரசு தன் கடமையிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறது. ஊடகத்தைச் சேர்ந்த ஒரு சகோதரியை இழிவுபடுத்திப் பேசிய பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நடிகரை கடைசிவரை கைது செய்யவில்லையே?
ஆனால் மனித உரிமைகளுக்குக் குரல் கொடுத்த மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, சுற்றுச் சூழலைப் பாதுகாக்கப் போராடும் முகிலன், ஜனநாயக உரிமையின்படி துண்டுப் பிரசுரம் வினியோகித்த மாணவி வளர்மதி, காவிரி தீரத்தில் போராடும் பேராசிரியர் ஜெயராமன், ஆகியோர் மீது தேசப் பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகிய கருப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி தமிழக அரசு சிறையில் அடைக்கிறது.
வேலூர் மாவட்டம் – திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை இல்லையே? இன்று திருப்பூர் மாவட்டம் – தாராபுரத்தில் பெரியார் சிலையை அவமதிக்கும் அராஜகம் நடந்துள்ளதே? திராவிட இயக்கத் தீரர்கள் இரத்தமும் கண்ணீரும் சிந்தி பாடுபட்டு தந்தை பெரியாரை, பேரறிஞர் அண்ணாவைப் போற்றுகின்ற திருவிடம்தான் இத்தமிழ்நாடு. நச்சுப் பாம்பைவிட ஆலகால விடம் தோய்ந்த, வெறிபிடித்த ஓநாயைவிட கொடூரம் மிக்க, செயல்களை தமிழகத்தில் ஏவ இந்துத்துவ மதவெறிக் கும்பல் துணிந்துவிட்டது. இந்தப் போக்கை முளையிலேயே கிள்ளி எறிய மான உணர்ச்சியுள்ள தமிழர்கள் பொங்கி எழவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.
தந்தை பெரியார் சிலையை அவமதித்த நபர் பிணையில் வெளிவர இயலா வகையில் கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிந்து சிறையில் அடைக்கப்பட வேண்டும். மத்தியில் ஆளும் பாசிச அரசின் எடுபிடியாகக் குற்றேவல் புரியும் தமிழக அரசு தன் கடமையில் தவறுமானால் தமிழக மக்கள் ஒருகாலும் மன்னிக்க மாட்டார்கள் என வைகோ கண்டன அறிக்கை விடுத்துள்ளார்.