கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்போது மாத விடாயை காரணம் காட்டி 10 முதல் 50 வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சம உரிமையை உறுதி செய்யும் அரசியல் சட்டத்தின் 14ஆம் பிரிவை மீறுவதாக உள்ளதென தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று, வெள்ளிக்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிபதி தீபக் மிஸ்ரா நீதிபதி ரோஹின்டன் நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் இந்த அமர்வில் அங்கம் வகித்தனர். பழக்க வழக்கங்களும் நடைமுறையும் பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமான வழிபாட்டு உரிமையை வழங்க வேண்டுமென தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சந்திரசூட் மற்றும் கன்வில்கர் ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனர். சபரிமலை கோயில் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் சொந்தமான கோயில் இல்லை என்பதால் பழைய வழங்கங்களையே பின்பற்ற முடியாது என்று நீதிபதி நாரிமன் தன் தீர்ப்பில் கூறியுள்ளார். பிறப்பின் அடிப்படையில் வழிபாட்டு உரிமையை மறுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்கு தாங்கள் ஆதரவாக உள்ளதாகவே கேரள மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே கூறியிருந்தது. பெண்களுக்கோ பொது மக்களுக்கோ எதிரான பாரபட்சத்தை எந்த வகையிலும் ஆதரிக்கவில்லை என்றும் கேரள அரசு தெரிவித்திருந்தது. திருமணமான ஓர் ஆண் திருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது கிரிமினல் குற்றம் அல்ல அனைவருக்கும் சமமான வழிபாட்டு உரிமையை அரசியலைப்புச் சட்டம் வழங்குவதாகவும், பெண்களின் ஒரு பகுதியினரை மட்டும் அனுமதிக்காமல் இருப்பதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் மத வழக்கங்களும், நடைமுறைகளும் கடந்த 50 ஆண்டுகளில் மாறியுள்ளதால், அதற்கேற்ப அரசியலமைப்பும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாரபட்சமின்றி சம உரிமைகளை வழங்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கேரளா தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25 மற்றும் 26 ஆகியவற்றுக்கு எதிராக இந்தத் தடை உள்ளது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது. பெண்கள் கோயிலுக்குள் நுழைய எதிராக வாதிட்டவர்கள் இது நீண்ட காலமாக உள்ள நடைமுறை என்பதால், காலம் காலமாக தொடரும் மத நம்பிக்கை எனும் அடிப்படியில் அரசியலைப்பின் பிரிவு 25(1)இன் கீழ் மற்ற முடியாது என்று கூறியிருந்தனர்..