(சாதிக்க விரும்புவோர்
குறிப்பாக, இளைஞர்கள்-இளம்பெண்கள்
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஓர் ஆளுமை
பயணச்சீட்டு வாங்காமல்
சென்னை வந்து,
மகத்தான சாதனை
படைத்த
வீ. கே. டி. பாலன்.!
————————————–
சிலர் சரித்திரம் படைப்பார்கள். சிலர் சரித்திரத்தில் இடம் பிடிப்பார்கள்.
சரித்திரத்தில் இடம் பிடித்த இவரது வாழ்க்கையில் ஒரு ருசிகர சரித்திரம் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.
வீ.கே.டி.பாலன், திருச்செந்தூரில் சமூக உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தார். கூலிக்கு வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும் மிஞ்சிய உணவும், பழைய உடையுமே அவருடைய பெற்றோருக்கு கிடைத்த கூலிகள்.
சமூகக்கொடுமைகளும், அடிமைத் தொழிலும் பாலனின் அடிமனதில் வெறுப்பை விதைத்தது.
ஒருநாள் பெற்றோரிடம் சொல்லாமல் கொள்ளாமல் பயணச் சீட்டு இல்லாமல் சென்னைக்கு ரெயிலில் பயணமானார், பாலன்.
வெறுங்கையுடன் புறப்பட்ட அவருக்கு நெஞ்சில் நிரம்ப நம்பிக்கை நிரம்பி வழிந்தது.
1981-ம் ஆண்டு சென்னை எழும்பூர் வந்திறங்கினார்.
வேலை கேட்டு அங்கும் இங்கும் அலைந்தார். எட்டாம் வகுப்பு படித்த அவருக்கு எந்த வேலையும் கிட்டவில்லை. அறிமுகம் இல்லாதவர்களை வேலைக்கும் சேர்க்கும் வழக்கம் இல்லை என்பதை அவர் அந்தப் பொழுதுகளில் அறிந்து கொண்டார்.
ரெயில் நிலையத்தையொட்டி உள்ள நடைபாதைகளே பிச்சைக்காரர்கள், ரிக்ஷாக்காரர்கள், வேலையற்றவர்களின் வசிப்பிடம்.
அங்குள்ள நடைபாதையிலேயே அவர் படுத்துறங்கினார்.
பல நாட்கள் பசி, கண்களில் சோகம், அழுக்கடைந்த ஆடைகள், சவரம் செய்யப்படாத முகம்-தெருவோர பிச்சைக்காரனுக்குரிய தோற்றம் தோன்றத் தொடங்கியது.
ஒருநாள் நள்ளிரவு. உறங்கிக் கொண்டிருந்த பாலனின் உடம்பில் அடி விழுந்தது. திடுக்கிட்டு விழித்துப் பார்த்தால் எதிரே ஒரு போலீஸ்காரர். கையில் லத்தியை ஓங்கியவாறு, “உன் பெயர் என்ன?” என்று விளிக்கிறார். “நான் என்ன தவறு செய்தேன்?” என்று பாலன் விழிக்கிறார். மீண்டும் கையை ஓங்கவே, “பாலன்” என்கிறார். “ஏண்டா! உன் பேரைக் கேட்டால் என் பெயரை சொல்றே” என்று ஒரு முறை முறைத்தார். அப்போதுதான், போலீஸ்காரர் சட்டையில் குத்தியிருந்த பேட்ஜிலும் பாலன் என்ற பெயரே இருந்தது.
அங்கே நாலைந்து பேர் நின்று கொண்டிருந்த கும்பலைக் காட்டி, “அவர்களோடு போய் நீயும் நில்” என்று அந்த போலீஸ்காரர் உத்தரவிட்டார்.
நம்மை ஏன் இந்தப் பாடு படுத்துகிறார்கள் என்பதே பாலனின் சந்தேகம். “சந்தேகத்துக்கிடமாகும் வகையில் நடமாடுபவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது வழக்கம்” என்று அருகில் இருந்த ஒருவர் விளக்கம் தர பாலனின் சந்தேகம் தீர்ந்தது.
அப்படியென்றால் விடிந்தால் பாலனுக்கு ஜெயில். முடிந்தால் தப்பித்துப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தார், பாலன்.
அந்தப் போலீஸ்காரர் சற்று தூரத்தில் இன்னொருவனை அடித்து எழுப்பிக் கொண்டிருந்தார். இதுதான் சரியான சமயம் என்று ஓட்டம் பிடித்தார். போலீஸ்காரரும் அவரை விரட்டத் தொடங்கினார். ஓடினார். ஓடினார். விடியலில் புதிய வாழ்க்கை விடியப் போகிறது என்பதை அறியாமலேயே ஓடினார். கொஞ்ச நேரம் கழித்து திரும்பிப் பார்த்தபோது அந்த போலீஸ்காரரைக் காணவில்லை.
ஓடி களைத்துப் போன அவர், கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினார்.
அங்கே ஓரிடத்தில் சிலர் வரிசையாக அமர்ந்து கொண்டும், அவர்களில் சிலர் அங்கேயே தூங்கிக் கொண்டும் இருப்பதைக் கண்டார். இந்த இடமே பாதுகாப்பானதாக இருக்கும் என்று கருதி அங்கிருந்த வரிசையில் அவரும் அமர்ந்தார்.
சற்றுக் கண்ணயர்ந்தார்.
பொழுது விடிந்தது. அதிகாலை ஐந்து மணி. விழித்துப் பார்த்தால், அவருக்கு முன்னால் இருபது பேர். பின்னால் இருநூறு பேர்.
அப்போது பாலன் அருகே ஒருவர் வந்து, “இடம் தருவாயா? உனக்கு இரண்டு ரூபாய் தருகிறேன்” என்றார். பணத்தைப் பெற்றுக் கொண்டு இடத்தைக் கொடுத்தார். அப்போது முழுச் சாப்பாடு ஒன்றின் விலை இரண்டு ரூபாய்.
முதலில் அவருக்கு எதுவும் புரியவில்லை. அப்போது “அமெரிக்க தூதரகம்” என்ற பெயர் பலகை அவர் கண்ணில் பட்டது, அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, அமெரிக்க ‘விசா’ பெற இப்படி நிற்கிறார்கள். பெரும்பாலோர் இப்படி நிற்க விரும்பாமல், இடம் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு பணம் கொடுத்து வரிசையில் இடம் பிடித்துக் கொள்கிறார்கள் என்ற விவரம் தெரிந்தது.
வருங்காலங்களில் தூங்குவதற்கும், வருமானத்திற்கும் இனி கவலை இல்லை என்பதால் மனதில் மகிழ்ச்சி பிறந்தது.
தூதரகத்திற்கு வரும் பயணிகளிடமும், பயண முகவர்களிடமும் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இடம் பிடித்துக் கொடுக்கும் பயணிகளின் இதயத்தில் அவர் இடம் பிடித்தார். அவர்களுக்குப் பயணச் சீட்டு வாங்கிக் கொடுப்பது முதல் விமான நிலையத்திற்கு அவர்களது பெட்டிப் படுக்கைகளைச் சுமந்து சென்று வழியனுப்புவது வரையிலான பணிகள் அவரது அன்றாட வாழ்வின் அங்கமாகி விட்டது.
இதனால் இவரது வருமானம் உயர்ந்தது. அவரது நாணயம், நம்பிக்கை, உழைப்பு, பயண முகவர்களின் மனதைக் கவர்ந்தது. பாலனுக்கு உதவி செய்ய பயண முகவர்கள் முன் வந்தனர். சென்னை எழும்பூரில் ‘மதுரா டிராவல்ஸ்’ உதயமானது.
இதுதான் வெறுங்கையுடன் வந்த பாலனின் வெற்றிக் கதை.
* * *
வெள்ளை கதர் வேட்டி; அரைக்கை சட்டை. நெற்றியில் சந்தனம், குங்குமம். காலில் ரப்பர் செருப்பு. உலகில் எந்த நாட்டுக்குச் சென்றாலும் பாலனின் இந்தத் தோற்றத்தில் மாற்றமில்லை.
“எங்கள் தவறுகளை எங்களிடம் சொல்லுங்கள்; நாங்கள் திருத்திக் கொள்கிறோம்.”
“வரும்போது வாடிக்கையாளராக வரும் நீங்கள், திரும்பும்போது எங்கள் நிரந்தர நண்பர்கள்”- இதுவே இவரது அலுவலக வாயிலில் பொறிக்கப்பட்ட பொன்மொழிகள். ஒவ்வொரு நாளும் அலுவலகம் வரும்போது குனிந்து பூமியைத் தொட்டு முத்தமிட்டுக் கொள்வது இவரது வழக்கம்.
* * *
இவர் சத்தமில்லாமல் சாதித்த சாதனைகளை நான் இங்கே உரக்க பதிவு செய்ய விரும்புகிறேன்.
* 1987 முதல் 2002-ம் ஆண்டு வரை ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ்க் கலைஞர்களை கொண்ட கலைக் குழுவைக் கொண்டு இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இருநூறுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார். இதை ஒரு சாதனையாக ‘லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ பதிவு செய்துள்ளது.
*’தூர்தர்ஷன்’ பொதிகை அலைவரிசையில் ‘வெளிச்சத்தின் மறுபக்கம்’ என்ற நிகழ்ச்சியை வாரம்தோறும் இவர் நடத்தி வந்தார். இது பலருக்கு வாரம்தோறும் நம்பிக்கையூட்டிய உற்சாகமான உற்சவம். இந்த தொடரை ஆறு ஆண்டுகள் இயக்கி சாதனை புரிந்தார். இந்நிகழ்ச்சியை திரையில் தோன்றி தொகுத்தவரும் இவரே!
*தமிழ் மொழியை விஞ்ஞான தேரில் ஏற்றி உலகை வலம் வரச் செய்தவர், பாலன். 2001-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி இணையத்தில் ‘தமிழ்க் குரல்’ என்னும் வானொலியை உருவாக்கினார். உலகின் முதல் தமிழ் இணைய வானொலியை உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.
* விமான பயணத் தொடர்பாக ‘மதுரா இன்ஸ்டிடியூட்’ என்னும் பயிற்சிப் பள்ளியை நிறுவினார். இதில் உடல் ஊனமுற்றவர்களுக்கு கட்டணம் இல்லாமல் பயிற்சி அளிப்பதோடு, அவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
* தமிழகத்தில் முதன் முறையாக பயணச் சுற்றுலாத் துறையில் 365 நாட்களும், 24 மணி நேர சேவையை அறிமுகப்படுத்தியவர்.
*தமிழக அரசின் சுற்றுலாக் கழக ஆலோசனை குழுவின் உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டிருப்பது இவரது அனுபவத்திற்குக் கிடைத்த அங்கீகாரம்.
* தமிழக அரசின் பண்பாட்டுக்கலைப் பரப்புனருக்கான ‘கலைமாமணி’ விருதை, கவர்னர் பாத்திமா பீவி வழங்க, தமிழக முதல்-அமைச்சர் கலைஞர் பொன்னாடை போர்த்தி தங்கப் பதக்கம் வழங்கினார்.
*மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியாகும் ‘மதுரா வெல்கம்’ என்னும் தமிழ்நாடு சுற்றுலாக் கையேட்டின் ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் இருக்கிறார். இந்நூல், வெளிநாட்டுத் தூதரகங்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், பயண முகவர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள தம்முடைய மதுரா டிராவல்ஸ் அலுவலகத்தில், பம்பரம் போல் சுழன்று பணியாற்றிக் கொண்டிருந்தார் வி கே டி பாலன். அவரை சந்தித்தோம். அறுபது வயதைக் கடந்த நிலையிலும் உத்வேகத்துடன் உற்சாகமாக நீங்கள் செயல்படுவதற்கு என்ன காரணம் என்று கேட்டோம்.” எங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக மேற்கொள்ளும் ஓயாத உழைப்புதான்” என்றார் புன்முறுவலுடன்.!
* * *