ஓபிஎஸ் மகனுடன் துரைமுருகன் அரைமணி நேரம் சந்திப்பு தேனியில் பரபரப்பு.!!

தமிழகம்

ஓபிஎஸ் மகனுடன் துரைமுருகன் அரைமணி நேரம் சந்திப்பு
தேனியில் பரபரப்பு.!!

முன்னாள் முதல்வர் ஜெ. இருந்தபோது கட்சிப் பொறுப்பாளர்கள், எதிர்க்கட்சிகளுடன் பேசினாலோ அல்லது அவர்களுடைய குடும்ப விசேஷங்களில் கலந்து கொண்டாலோ உடனடியாக கட்சியின் அடிமட்ட உறுப்பினரிலிருந்தே தூக்கி விடுவார். அந்த அளவுக்கு அதிமுகவினர் எதிர்க்கட்சிகளிடம் பேசவும், பழகவும் அஞ்சி வந்தனர்.

ஆனால் தற்பொழுது ஜெ. இல்லாததால் அதிமுக வில் உள்ள பொறுப்பாளர்கள் சர்வ சாதாரணமாகவே எதிர்க்கட்சிகளிடம் பேசுவதும், குடும்ப விஷயங்களுக்கு போய் வருவதும் நடைமுறையாகி விட்டது.

அதுபோல் அதிமுக எம்எல்ஏக்கள் முதல் அமைச்சர்கள் வரை திமுக உள்பட எதிர்க்கட்சி எம்எல்ஏக்களிடம் பழகுவதும், அரசு விழாக்கள் வரும்போது பேசுவதுமாக இருந்தும்
வருகிறார்கள். துணை முதல்வர் ஓபிஎஸ் கூட கடந்த மாதம் தேனியில் நடந்த அரசு விழாவில் திமுக எம்எல்ஏ க்களான ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவண குமாருடன் அருகே உட்கார்ந்து கொண்டு சிரித்து பேசி இருக்கிறார்.

இந்த நிலையில் தான் தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை ஆய்வுக்குழு ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்து வருகிறது. அதுபோல் தேனி மாவட்டத்திற்கு துரைமுருகன் தலைமையிலான சட்டமன்ற ஆய்வு குழு வந்தது. இந்த விஷயம் துணை முதல்வர் ஓபிஎஸ் மகனான எம்பி ரவீந்திரநாத் குமாருக்கு தெரியவரவே, சட்டமன்ற குழு தேனி கலெக்டர் அலுவலகத்தில் நுழையும் போது தானும் வந்து இணைந்து கொண்டு, அந்த குழு தலைவர் துரைமுருகன் உள்பட எம்எல்ஏக்களை வரவேற்றார்.

அதன்பின் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள டிஆர்ஓ மீட்டிங் அறையில், துரைமுருகன் தலைமையிலான எம்எல்ஏக்கள் சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர். அப்பொழுது ரவீந்திரநாத் குமார் துரைமுருகனுக்கு சால்வை போட்டு வாழ்த்து தெரிவித்து விட்டு அருகே உட்கார்ந்து அரை மணி நேரத்துக்கு மேல் தொகுதி பிரச்சனைகளையும், அரசியலைப் பற்றியும் ஜாலியாக பேசினார். பின்னர், மதிய விருந்துக்கு வீட்டுக்கு வருமாறு துரைமுருகனை ரவீந்திரநாத் குமார் அழைத்த போது, பரவாயில்லை என்று கூறி இருக்கிறார்.

அதன்பின் நடந்த ஆய்வு கூட்டத்தின் போது மத்திய அரசு திட்டங்கள் மூலம் எவ்வளவு நிதி வருகிறது. அதன் மூலம் என்னென்ன பணிகள் செய்யப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு 6000 உதவித்தொகை முழுமையாக சேருகிறதா? என்ற விவரங்களை எனக்கு தர வேண்டுமென்று ரவீந்திரநாத் குமார் கேட்டார்.

அப்பொழுது துரைமுருகன் அந்த விவரங்களை நானும், மாவட்ட கலெக்டரும் உங்களுக்கு தர தேவையில்லை. உங்க அப்பா தானே நிதி அமைச்சராக இருக்கிறார். அவரிடம் சொன்னாலே கொடுத்து விடப் போகிறார் என்று வழக்கம் போல் தனது பாணியில், ரவீந்திரநாத்குமாரை பார்த்து கிண்டலாக பதில் அளித்தார்.

அதன்பின் இந்த ஆய்வுக்குழு ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையை ஆய்வு செய்தது . அப்போது உடன் வந்த அதிகாரிகள் அணையை தூர் வாருவது குறித்து குழு தலைவர் துரைமுருகனிடம் ஆலோசனை செய்தனர். அப்பொழுது நான் 17 ஆண்டுகள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்திருக்கிறேன். ஒரு அணையை தூர் வாருவது என்பது லேசான காரியம் இல்லை. நான் படித்த வரையில் எந்த ஒரு நாட்டிலும் அணையை தூர் வாரியது இல்லை. அதற்காகத் தான் அணை கட்டும் போது, தண்ணீர் போவதற்கு ஒரு வழியும், மணல் போவதற்கும் ஒரு பாதையும் வைத்திருப்பார்கள்.

அதில் தான் மணல் வெளியேறும் சில நேரங்களில், சேர் சகதி தேங்கி இருக்கும். அணை நீரை எடுக்க முடியாது. நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவரை எந்த ஒரு அணையும் தூர் வாரியது இல்லை. வைகை அணையை தூர் வாருவது குறித்து எனக்கு தெரியாது, முடிந்தால் தெர்மாகோல் வைத்து வைகை அணையை மூடுங்கள் என உடன் வந்த அதிகாரிகளிடம் கிண்டல் அடித்து விட்டு புறப்பட்டார்.

ஆனால் தேனிக்கு வந்த சட்டமன்ற ஆய்வு குழு தலைவர் துரைமுருகனிடம் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் நெருக்கமாக உட்கார்ந்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *