வெற்றிப்பட இயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்!!

தமிழகம்

தமிழ் திரையுலகத்தின் வெற்றிப்பட இயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்!!

விமர்சன ரீதியிலான வரவேற்பும், வர்த்தக ரீதியிலான வெற்றியும் எப்போதாவதுதான் ஒரு படத்தில் இணையும். விமர்சகர்களையும், வெகுஜன ரசிகர்களையும் திருப்திப்படுத்துவது என்பது ஒரு திரைப்படத்துக்கு கடினமான செயல்தான். வர்த்தகமும் வித்தகமும் ஒன்றிணைவது அவ்வளவு எளிதானதல்ல. வணிக ரீதியில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர் ஒருவரும், விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் ஒருவரும் முதல் முறையாக ஒன்றாக இணைகிறார்கள். ஆம்… தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றி மாறனும், வணிக ரீதியில் வெற்றிப் படங்களைக் கொடுக்கும் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரும் முதல் முறையாக ஒன்றிணைகிறார்கள்.
சமீபத்தில் வெளியாகி வணிக ரீதியிலும் விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்ற ‘அசுரன்’ படத்தை இயக்கிய வெற்றி மாறன், வர்த்தக ரீதியில் வெற்றி பெற்ற பல படங்களைத் தயாரித்த எல்ரெட் குமார் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார்.
இது குறித்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தெரிவித்ததாவது…
ஒரு தயாரிப்பாளர் என்பதற்கும் மேலாக சினிமா ரசிகன் என்ற முறையில் வெற்றி மாறன் போன்ற இயக்குநருடன் பணி புரிவது எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. காரணம், கலையம்சம் மிக்க படங்களுக்கும், வணிக ரீதியான படங்களுக்கும் உள்ள இடைவெளியை நிரப்பும் பாலமாக இருக்கும் அரிதான இயக்குநர்களில் வெற்றி மாறனும் ஒருவர்.
அவரது படங்களின் உள்ளடக்கம் தனித்தன்மை மிக்கதாக இருப்பதுடன், வணிக வெற்றிக்குத் தேவையன அம்சங்களைக் கொண்டதாகவும் இருப்பதால்தான், தமிழ் ரசிகர்களை மட்டுமின்றி மொழி எல்லைகளைத்தாண்டி அனைத்து ரசிகர்களையும் கவர்கிறது. இதற்கான சமீபத்திய சான்றாக அமைந்திருக்கும் அசுரன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது.
தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் அவரது குழுவுடன் இணைந்து மற்றுமொரு மிகச் சிறந்த படத்தைத் தருவதற்கு மகிழ்வுடன் தயாராகிக்கொண்டிருக்கிறேன். வெகு விரைவில் இந்தப் படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுடபக்கலைஞர்கள் ஆகியவற்றுடன் மேலதிக விவரங்களை அறிவிக்கிறோம்.
வழக்கமான பாணியிலான படங்களாக அல்லாமல் மாறுபட்ட கதைக்களன் கொண்ட படங்களைத் தரும் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் அடுத்த படைப்பு வெற்றி மாறன் முத்திரையுடன் வருவது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *