பெங்காலி படத்தின் மூலம் 2003-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் வித்யா பாலன். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் அவர் நடித்த ‘களரி விக்ரமன்’ படன் இன்றுவரை ரிலீஸாகவில்லை. இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ‘பரினீடா’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டாக, பாலிவுட்டில் அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கினார்.
அதன்பிறகு தென்னிந்திய மொழிகளில் வித்யா பாலனை நடிக்கவைக்க எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தில், ராதிகா ஆப்தே கேரக்டரில் நடிக்க முதலில் வித்யா பாலனிடம் தான் கேட்கப்பட்டது. ஆனால், அவர் மறுத்துவிட்டார். தென்னிந்திய மொழிகளில் இதுவரை ‘உருமி’ என்ற மலையாளப் படத்தில் மட்டுமே நடித்துள்ளார். 2011-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது.
இந்நிலையில், தெலுங்கில் முதன்முறையாக ஒரு படத்தில் நடிக்கிறார் வித்யா பாலன். ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படமாகிறது. பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா தந்தையின் வேடத்தில் நடிக்கிறார்.
‘என்.டி.ஆர். பயோபிக்’ என தற்போது பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ் இயக்கும் இந்தப் படத்தை, நந்தமுரி பாலகிருஷ்ணா, சாய் கோரப்பட்டி, விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.