சித்ரா பௌர்ணமியன்று விழா நடக்காத ஊரோ, மாவட்டமோ எனக்குத் தெரிந்து இல்லை. எமனின் சபையில் பாவ, புண்ணிய கணக்குகளைப் பதிவு செய்து பராமரிக்கும் சித்திர குப்தனின் பிறந்த நாளும் அன்றுதான். கையில் ஏடும் எழுத்தாணியுமாக காட்சி தரும் இவருக்கு தமிழ்நாட்டில் மொத்தமே நான்கைந்து ஊர்களில்தான் கோயிலும், சிலையும் இருக்கின்றன. ஆனால், அவரது அவதார நாளான சித்ரா பௌர்ணமியன்று கிராமக்கோயில்களில் பரவலாக விழா நடக்கிறது. முதியவர்கள் இருக்கிற இல்லங்களில் வீட்டு விழாவாகவும் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
விரதத்தின் நோக்கம் ஒன்றுதான். செய்த பாவங்களைக் குறைத்து, புண்ணியங்களை அதிகரித்துக் கொள்வது. இவர், இந்த இடத்தில், இத்தனை மணிக்கு இறப்பார் என்று சீட்டைத் தேடியெடுத்து எமனிடம் கொடுப்பது சித்திர புத்திரர் தானே?
நயினார் நோன்பு
இவரது பிறந்த நாளான இன்று (ஏப்ரல் 29) தென்மாவட்ட கிராமங்களில் ‘நயினார் நோன்பாக’ கடைபிடிக்கப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைப் பொருத்தவரையில் மற்ற கோயில் விழாக்களைப் போலவே, நயினார் நோன்புக்கு ஒரு வாரத்துக்கு முன்பே ஊரில் காப்பு கட்டியதற்கு அடையாளமாக ஆங்காங்கே வேப்பிலைத் தோரணங்கள் கட்டப்படுகின்றன. எனவே, அன்று முதல் யாருடைய வீடுகளில் அசைவம் சமைக்கப்படுவதில்லை.
ஊர் அம்மன் கோயிலிலோ, பிள்ளையார் கோயிலியோ கதை படிக்கத் தெரிந்த பெரியவர் ஒருவர் புதிய பாய் அல்லது சமுக்காளம் விரித்து உட்கார்ந்து சித்திர புத்திர நாயனார் கதையை படிப்பார். அங்கே நிறைநாழி நெல், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், சந்தனம், குங்குமம் போன்றவை படைக்கப்பட்டிருக்கும். ஏடும், எழுத்தாணியும் அவசியம். இப்போது அது அரிய பொருளாகிவிட்டதால், நோட்டும் பேனாவும் வைக்கிறார்கள். பூரணகும்பம் தான் சாமி. சில ஊர்களில் மட்டும் சித்திர புத்திரரின் உருவப்படத்தை வைத்து வழிபடுகிறார்கள். (தேனி மாவட்டம் போடி அருகே தீர்த்தத்தொட்டி என்ற இடத்திலும், காஞ்சிபுரத்திலும் சித்திர புத்திர நாயனாருக்குத் தனிக்கோயிலே இருக்கிறது. எனவே, அங்கு சிலை வழிபாடு நடைபெறுகிறது. அதைப் பற்றி பின்னால் பார்க்கலாம்.)
இவ்வாறு கதைப்பாடல் படிக்கிற இடத்துக்கு கிராமத்தவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு விளைபொருளையோ, தங்கள் வீட்டில் தயாரித்த உணவையோ கொண்டுவந்து படைக்கிறார்கள். தென்னங்குழை, நொங்குக்குழை, ஈச்சங்குழை, வாழைக்குழை போன்றவை கட்டாயமிருக்கும். நெல், மிளகாய் வற்றல், உப்பு, மஞ்சள் போன்றவையும் படைக்கப்பட்டன. இந்த நாளில் தானம் செய்தால் புண்ணியக்கணக்கு ஏறும் என்பதால், தான தர்மங்களும் களை கட்டின.
கதைப்பாடல்:
இன்று பாடப்பட்ட, ‘சித்திர புத்திர நாயனார் கதை’யானது மனப்பாடம் செய்ய ஏதுவாக பாடல் வடிவில் எழுதப்பட்டது. இப்பாடல் ஒவ்வொரு ஊர் கோயிலிலும் ஓலைச்சுவடியாகவோ, பெரிய எழுத்துப் புத்தகமாகவோ பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனைப் படிப்பதெற்கென்று ஓதுவார்கள் யாரும் அழைக்கப்படுவதில்லை. அந்தந்த ஊரில் யாருக்கு கதை படிக்கத் தெரியுமோ அவர்களே படிக்கிறார்கள். எனவே, இது அனைத்து சாதியினரும் கடைபிடிக்கிற நோன்பாக இருக்கிறது. சில ஊர்களில் அழகாக ராகம் போட்டுப் படிக்கிறார்கள். சில ஊர்களில் உரைநடை போல வாசிக்கிறார்கள். அதற்கேற்ப தற்போது பாடல், உரைநடை என்று இரு வடிவிலும் பெரிய எழுத்துப் புத்தகங்கள் கிடைக்கின்றன. சில ஊர்களில் மூன்று நான்கு பேர் உட்கார்ந்து தங்களுக்குள் உரையாடுவது போல மாற்றி மாற்றி வாசிப்பார்கள்.
நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள சோலைசேரி கிராமத்தில் ராமர் கோயில், இலங்காமணி அய்யனார் கோயில், மொட்டையசுவாமி கோயில், வடக்குத்தி அம்மன் கோயில் ஆகியவற்றில் இன்று சித்திர புத்திர நாயனார் கதை பாடப்பட்டது. இதேபோல, ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடம் பிள்ளையார் கோயிலிலும் கதை பாடப்பட்டது. (அந்த ஊர்களில் எடுத்த படங்கள்தான் இங்கே நீங்கள் பார்ப்பது.)