கலைஞர் கருணாநிதி 2ஆம் ஆண்டு நினைவு நாளை உலகம் முழுவதும் நினைவு கூர்ந்திடும் வகையில் கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் எனும் ஓட்டத்தை தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் அண்ணா அறிவாலய வளாகத்தில் தொடங்கி வைத்தார்
அதன்படி, ஆக.7 முதல் 25 நாட்கள், அதாவது ஆகஸ்ட் 31 வரை மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே 5 கி.மீ, 10 கி.மீ, மற்றும் 21 கி.மீ. தூரத்திற்கான மாரத்தானில் பதிவு செய்து பங்கேற்றனர். தத்தமது வீட்டு மாடியில் தோட்டத்தில், ட்ரட்மில்லில், கொரோனா ஊரடங்கு விதிமுறைகளுக்கேற்ப ஓடி முடித்துள்ளனர்.
28 நாடுகள், இந்தியாவில் 12 மாநிலங்களைச் சேர்ந்த 8,541 பேர் மாரத்தானில் பங்கேற்றுள்ளனர். இதற்கு பதிவுக் கட்டணமாக தலா ரூ.300 பெறப்பட்டது.
பதிவுக்கட்டணமாக பெறப்பட்ட தொகையில் சேவை வரி நீங்கலாக பெறப்பட்ட ரூபாய் 23 இலட்சத்து 41 ஆயிரத்து 726 ரூபாய் 08, மாரத்தான் போட்டியின் துவக்கத்தில் அறிவித்ததுபோலவே கொரோனா பேரிடர் நிவாரண உதவித்தொகையாக தமிழக அரசுக்கு நாளை வழங்கப்பட உள்ளது.
உலக அளவில் பேரிடர் காலத்தில் இணையதளம் வாயிலாக நடத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய ‘கலைஞர் மெமோரியல் பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான்’ போட்டியில் அதிகமான அளவு பங்கேற்பாளர்கள் இடம்பெற்றதால்,அப்போட்டி ஆசிய சாதனையாகக் அங்கீகரிக்கப்பட்டு, ‘ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதற்கான சான்றிதழையும பதக்கத்தையும் ஆசியன் புக் ஆஃ ரெக்கார்டு குழு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினர்.
மேலும் இந்த கலைஞர் நினைவு சர்வதேச இணையவழி மாரத்தான் போட்டி சிறப்பாக நடைபெற செயல்பட்ட கழகத் தோழர்கள் 10 பேருக்கு கலைஞர் நினைவு பரிசினை வழங்கினார்.