தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் வாகனங்கள் மூலம் சுமார் 5 ஆயிரம் டன் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. காய்கறிகள், பழங்களை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு கொண்டு செல்ல விவசாயிகள் அனுமதி பெறுவதற்கான தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகமே 24 முதல் 31 வரை முழு ஊரடங்குஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் தடையின்றி கிடைக்க வாகனங்கள் மூலம்விற்பனை செய்யுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக ஆங்காங்கே விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை விவசாயிகள், விவசாய ஆர்வலர் குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலமாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய முடியும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளிலும் விவசாயிகளால் கொண்டு வரப்படும் காய்கறிகள், பழங்களை அதற்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் மூலம் நகரின் இதர பகுதிகளில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உற்பத்தியான காய்கறிகள், பழங்களை ஓரிடத்தில் இருந்து சந்தைகளுக்கு கொண்டு செல்லவும், ஆங்காங்கே எடுத்துச் செல்லவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.