சிதம்பரம்: தமிழகத்துக்கு போதுமான கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், தடுப்பூசிகளை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் மாநில வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டினார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர்.
கூட்டத்தில் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகரிக்கவும், கூடுதலாக செவிலியர்களை நியமிக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மருத்துவமனை நிர்வாகிகளிடம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டறிந்தார்.
மேலும், இந்த மருத்துவமனையில் புதிதாக 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தொட்டி ஓரிரு நாள்களில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதால், கூடுதலாக 250 ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள் கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது:
சிதம்பரம் நகராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தேன். ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை முறையை தீவிரப்படுத்தவும், இறப்பு சதவீதத்தை குறைக்கவும் அறிவுறுத்தினேன்.
கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை 462 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு நாளொன்றுக்கு 800-க்கும் மேற்பட்டோர் வரை இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், முழு பொது முடக்கம் காரணமாக, தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இது மேலும் குறைய வாய்ப்புள்ளது.எனவே, விரைவில் பல்கலைக்கழக மருத்துவமனையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெறும் என்றார் அவர்.