தமிழகம் முழுவதும் மூன்று வாரங்களாக ஊரடங்கு அமலில் இருந்துள்ளது. ஆனால் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக சீரான தொற்று பாதிப்பு குறையவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கை தளர்த்துவது என்பது கடினமானது என்று நிபுணர் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு காலத்தில் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர் குழுவினர் சுட்டிக்காட்டி உள்ளனர்.
அவர்கள் கூறும்போது, ‘சென்னை மண்டலத்தில் பாதிப்புகள் வெகுவாக குறைந்துவிட்டாலும் மேற்கு மண்டலத்தில் சில பகுதிகளில் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மண்டலத்துக்குள்ளே ஈரோட்டில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் கோவையில் தொற்று பாதிப்பு குறையத்தொடங்கி இருக்கிறது.
குறைந்த தொற்று விகிதம் மற்றும் காலியான மருத்துவமனை வார்டுகளை கொண்ட ஒரு மண்டலத்தில் ஊரடங்கை நீட்டிப்பதில் அர்த்தமில்லை. சுகாதார கொள்கைகள் பொருளாதார உணர்வையும் ஏற்படுத்த வேண்டும். மாவட்ட அளவிலான தொற்று நோய் காரணிகளின் அடிப்படையில் தடைகளை நீட்டிப்பது அல்லது குறைப்பது பற்றி முடிவு செய்ய வேண்டும்.