நட்சத்திர ஓட்டலில் மது போதையில் நண்பர்களுடன் ரகளையில் ஈடுபட்ட நடிகர் பாபி சிம்ஹாவை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
சூதுகவ்வும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பாபி சிம்ஹா. கார்த்திக் சுப்புராஜின் ஜிகா்தண்டா படத்தில் சேது எனும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான அவர், கோ 2, உறுமீன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்த பாபி சிம்ஹாவுக்கு, பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர் தற்போது தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த நடிகராக வளர்ந்து வருகிறார். இந்நிலையில், சென்னை கிண்டி அருகே உள்ள நட்சத்திர விடுதிக்கு பாபி சிம்ஹாவும், அவரது நண்பா் கருணா என்பவரும் நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளனர். இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர். அப்போது கதையை தேர்வு செய்தல், நடிப்பு பற்றி குறை கூறுதல் என இருவருக்குள் தொடங்கிய விவாதம், ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறும் சூழல் ஏற்பட்டது. அவர்களை ஓட்டல் ஊழியர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த பாபி சிம்ஹா ஓட்டல் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து, ஓட்டல் ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட பாபி சிம்ஹாவும், அவரது நண்பரும், போலீசை பார்த்ததும் கப்சிப் என அடங்கிவிட்டனர். ஓட்டல் நிர்வாகத்திடமும், ஊழியர்களிடமும் வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இருவரையும் போலீசார் எச்சரித்து ஓட்டுனர்கள் உதவியுடன் காரில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.