கொரோனா முதல்வர் நிவாரண நிதிக்கு மதுரையை சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒரு மாத குடும்ப ஓய்வூதியத்தை வழங்கினார். மதுரை, பார்க் டவுனை சேர்ந்த ஓய்வு எஸ்ஐ வில்லியம். இவர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் போலீஸ் பணியில் சேர்ந்து கடந்த 1956ல் ஓய்வு பெற்றார். மனைவி மெர்சி வில்லியம்ஸ்.
இவருக்கு தற்போது 100 வயது ஆகிறது. ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்த பின்பு மெர்சி வில்லியம்ஸ் குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ.14,376 பெற்று வருகிறார். இவர் தனது ஒரு மாத ஓய்வூதியத்தை கொரோனா நிதியாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ளார். இதுகுறித்து மெர்சி வில்லியம்ஸ் கூறுகையில், ‘‘எனது நூறு ஆண்டு வாழ்க்கையில் காலரா உள்ளிட்ட பல்வேறு கொடிய நோய்களின் பாதிப்பை நேரில் பார்த்துள்ளேன். தற்போது, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.
அவருடைய நடவடிக்கைக்கு என்னுடைய பங்கு சிறு துளியாவது இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இந்த தொகையை வழங்குகிறேன்’’ என்றார்.