அரசியலில் அவருடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்தநிலையில், கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி ஒரு அதிரடி அறிவிப்பை சசிகலா வெளியிட்டார். அதில், ‘நான் என்றும் பதவிக்காகவோ பட்டத்திற்காகவோ அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. புரட்சித்தலைவியின் அன்புத் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். நான் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்’ என்று கூறினார்.
இந்த அறிவிப்பின் மூலம் அவர் அரசியலில் இருந்து விலகுவதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து ஓய்வு எடுப்பதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார். அதனைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில், அ.தி.மு.க. தோல்வியை சந்தித்து, ஆளும் கட்சி என்ற அந்தஸ்தை இழந்து, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது.
சசிகலா தொண்டர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோபால் என்ற தொண்டரிடம், சசிகலா பேசிய செல்போன் உரையாடல் நேற்று வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், ஒன்றும் கவலைப்படாதீங்க, கட்சியைக் கண்டிப்பா சரி பண்ணிடலாம், கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது, கொரோனா குறைந்த பிறகு எல்லோரையும் சந்திக்கிறேன் என்று கூறினார்.