சென்னை, ஆக.3:சிலை கடத்தல் வழக்குகள் சர்வதேச விவகாரம் என்பதால்தான் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றுவது குறித்த முடிவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞரிடம் தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழக அரசின் முடிவு குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிமன்றம், அரசின் முடிவு மற்றும் உத்தரவுகள் தொடர்பான விவரங்களை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் இயக்குநரின் பரிந்துரையை ஏற்று, சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் ஜெயகுமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிலை கடத்தல் வழக்குகள், மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் சர்வதேச தொடர்புள்ள விவகாரம் என்பதால்தான், சிபிஐ-க்கு மாற்றப்பட்டது என்றும், அதில் வேறு ஏதும் உள்நோக்கம் இல்லை என்றார். மேலும், சிபிஐ விசாரணைக்கு மாற்றவில்லை என்றால் ஏன் மாற்றவில்லை என்றும் மாற்றினால் ஏன் மாற்றினீர்கள் என்று கேள்வி எழுப்பப்படுவதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.