வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார் முதல்வர்
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் திரு.#எடப்பாடி_கே_பழனிசாமி அவர்கள் இன்று ஆய்வு செய்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சர் சென்னையில் இருந்து இன்று காலை 6.30 மணிக்கு விமானம் மூலம் கோவை சென்றார். அங்கிருந்து காரில் ஈரோடு மாவட்டம் பவானிக்குச் சென்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அதன்பின் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தொடந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார்.
பின்னர் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார். ஆய்வைத் தொடர்ந்து வெள்ள நிவாரண பணிகள் குறித்தும், வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்தும் ஈரோடு, நாமக்கல் மாவட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
முன்னதாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சருடன் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக புதியதலைமுறையிடம் பேசிய சத்யகோபால், தமிழகத்தில் வெள்ளம் பாதித்த 11 மாவட்டங்களில் 117 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவற்றில் 13 ஆயிரத்து 540 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஆற்றில் அதிக அளவு நீர் வந்தாலும் அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். கேரளாவிற்கு பணம் மட்டுமல்லாமல் உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கேரளாவிற்கு உதவ விரும்பும் மக்கள், அம்மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அந்தந்த ஆட்சியர்களை அணுக வலியுறுத்தியுள்ளார்.