திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை.!!

சென்னை

“சென்னை தினம்”

*தலைவர் கலைஞர் அவர்களை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம்!*

*கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை*

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ஆம் நாளை சென்னை தினமாக (Madras Day) கடைப்பிடிக்கிறார்கள். பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனி , சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடம் தொடர்பாக 1639 ஆகஸ்ட் 22ல் ஒப்பந்தம் செய்து கொண்டதன் நினைவாக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சென்னை என்பது பிரிட்டிஷார் இங்கு வருவதற்கு முன்பே சிறந்து விளங்கிய நெய்தல் நிலம். மீனவர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களுக்கு வாழ்வுரிமை அளித்த மண். இத்தகைய பெருமை மிகுந்த சென்னையை தலைநகராக்கினார்கள் ஆங்கிலேயர்கள். 1920ஆம் ஆண்டில் நீதிக்கட்சி ஆட்சியிலேயே சென்னையின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் தீட்டப்பட்டு, கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. தியாகராய நகர் என்கிற புதிய பகுதி நீதிக் கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்டது. ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் இலவச மதிய உணவுத் திட்டம் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியிலும் ,மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டின் பகுதியாக சென்னை மீட்கப்பட்டு, தலைநகராக நீடிக்கச் செய்தனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சென்னை மாகாணம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்பதை “தமிழ்நாடு” என்று மாற்றிப் பெயர் சூட்டிப் பெருமை சேர்த்தார் , தி.மு.கழகத்தின் முதல் முதல்வரான பேரறிஞர் அண்ணா அவர்கள். தலைநகர் சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி, மெரினா கடற்கரையில் தமிழ்ச் சான்றோர்களுக்கு சிலை அமைத்து தமிழ்-தமிழர்களின் பெருமையை சென்னை வாயிலாக உலகம் முழுவதும் அறியச் செய்தார் அண்ணா.அண்ணா அவர்களைத் தொடர்ந்து,முதல்வர் பொறுப்பை ஏற்று, தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராகி அதிக காலமான 19 ஆண்டுகள் ஆட்சி செய்தவரான தலைவர் கலைஞர் அவர்கள், சென்னை என தமிழிலும் ,மெட்ராஸ் என ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் அழைக்கப்பட்டு வந்த நிலையை மாற்றி, “சென்னை” என அனைத்து மொழிகளும் ஏற்றுப் பயன்படுத்திடும் வகையில்,பெயர் மாற்றம் செய்து வரலாறு படைத்தார்.

திராவிட இயக்க வரலாற்றில் சென்னை மாநகரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. திராவிடர் சங்கம், நீதிக்கட்சி ஆகியவை தொடங்கப்பட்ட மாநகரம் இது.முதல் இந்தி எதிர்ப்புப் போரில் (1938) சென்னையில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நடராசன், தாளமுத்து ஆகியோர் சிறைப்பட்டு உயிரிழந்தது சென்னையில்தான்! பேரறிஞர் அண்ணா அவர்கள் முதன்முதலில சிறை கண்டதும் சென்னையில்தான்! திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.கழகத்தை அவர் தொடங்கியதும் இதே சென்னையில்தான்.

அவர் வழியில் வந்த தலைவர் கலைஞர் அவர்களால் அண்ணா நகர், அண்ணா சதுக்கம், வள்ளுவர் கோட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அண்ணா மேம்பாலம், டைடல் பூங்கா, செம்மொழிப் பூங்கா, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என காலத்திற்கேற்ற நவீனமான வளர்ச்சியுடன் கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்கள் உருவாக்கப்பட்டன.

தலைவர் கலைஞர் அவர்களால் சென்னை மாநகர மேயர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்ற நான், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் என்ற பெயரினைப் பெறும் நல்வாய்ப்பு அமைந்தது. அந்த நல்வாய்ப்பில்தான் சென்னையின் புதுயுக அடையாளங்களாக விளங்கும் மேம்பாலங்கள், கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. மாநகராட்சிப் பள்ளிகளில் கணினி வசதிகள் கொண்டு வரப்பட்டன. சென்னையின் முகமும் முகவரியும் புதுமையான வலிவும் பொலிவும் பெற்றன. வரலாற்றின் அந்தப் பொன்னேடுகளை நினைவுகூர்ந்து, சென்னை தினத்தைக் கடைப்பிடிப்போம். “மெட்ராஸ் டே “ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான். அதன் பின்னணியில் மிளிரும் தலைவர் கலைஞரின் நினைவுகளை என்றும் போற்றி மகிழ்வோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *