மு.க.அழகிரி சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் நடத்தும் அமைதி பேரணி மூலமாக, தன் பலத்தை நிரூபிக்கவும், ஸ்டாலினுக்கு எதிராக, அதிரடி வியூகம் அமைக்கவும், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, தன் ஆதரவாளர்களுடன், மதுரையில், இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைந்த, 16வது நாள் நிகழ்ச்சிகள், சென்னையில் நேற்று முன்தினம், அவரது கோபாலபுரம் வீட்டில் நடந்தன. அதில் பங்கேற்ற அழகிரி, மாலையில், மதுரை புறப்பட்டு சென்றார். அங்கு, நிருபர்களை சந்தித்த அழகிரி, ‘என்னை, தி.மு.க.,வில் சேர்த்துக் கொள்வதுபோல் தெரியவில்லை. என் மனக் குமுறலை, எப்போது கூற வேண்டும் என, அப்பா கூறுகிறாரோ, அப்போது, மக்களிடம் கூறுவேன். என் மனக்குமுறல், நேரம் வரும்போது வெளிப்படும்’ என்றார்.
தொடர்ந்து, நேற்று காலையில், விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் நடந்த, தன் ஆதரவாளர் இல்ல திருமண நிகழ்ச்சியில், அழகிரி பங்கேற்றார். அப்போது, நிருபர்களிடம் அவர் கூறுகையில், ”தி.மு.க.,விலிருந்து, என்னை வெளியேற்றி விட்டனர். நானாக, கட்சியிலிருந்து வெளியேறவில்லை,” என்றார்.
இந்நிலையில் இன்று காலை, மதுரை, டி.வி.எஸ். நகரில் உள்ள, தயா திருமண மண்டபத்தில், தன் ஆதரவாளர்களுடன், முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அதில், செப்., 5ம் தேதி, சென்னையில் நடக்கவுள்ள அமைதி பேரணியில், பலத்தை காட்டும் வகையில், கூட்டத்தை திரட்டுவது குறித்தும், தி.மு.க., பொதுக்குழுவில், ஸ்டாலினுக்கு எதிராக, போர்க்குரல் எழுப்புவது குறித்தும், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் ஆயிரக்கணக்கான அழகிரி ஆதரவாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்க்க படுகிறது.