சென்னையில் இன்று நடந்த தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்.!!

தமிழகம்

சென்னையில் இன்று நடந்த தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்.!!

தீர்மானம் : 1

கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் மறைவிற்கு இரங்கல்

தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர், ஓயாத சமூகநீதிப் போராளி, பகுத்தறிவுத் தலைமகன், சுயமரியாதைச் சுடர், அறிஞர் அண்ணாவின் அருமைத் தம்பி, தமிழ்நாட்டு மக்களின் சமூக, கல்வி, மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும், தமிழ் இன – மொழி எழுச்சிக்காகவும் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட தலைவர் கலைஞர் அவர்கள், 07.08.2018 அன்று நம்மையெல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்திப் பிரிந்து விட்டார்.

புதுயுகப் படைப்பாளி, கவிஞர், இலக்கிய ஆசான், திரைக்கதை – வசனகர்த்தா, கட்டுரையாளர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், மூத்த பத்திரிக்கையாசிரியர், சங்க இலக்கியங்களின் சாறுப் பிழிந்து சாமான்யருக்கும் கொண்டு சேர்த்த சாதனையாளர், விவேகமான நகைச்சுவையாளர், தர்க்கவியல் அடிப்படையிலான விவாதத்திறன் படைத்தவர் உள்ளிட்ட எண்ணற்ற பேராற்றலுக்குச் சொந்தக்காரர் தலைவர் கலைஞர். அவர் கொண்ட கொள்கைகள், கோட்பாடுகள், இலட்சியங்கள், தொலைநோக்குப் பார்வை மற்றும் அணுகுமுறைகள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலங்கரை விளக்கமாக என்றென்றும் வழிகாட்டிக்கொண்டு இருக்கும் என்பதை இந்தப் பொதுக்குழு பதிவு செய்து கொள்கிறது. ஓய்வறியாத் தலைவராக தனது 93 வயது வரையில் இந்த மாபெரும் இயக்கத்திற்காக அல்லும் பகலும் அயராமல் அரும்பாடுபட்ட தலைவர் கலைஞர் அவர்கள் வகுத்துத் தொகுத்துத் தந்திருக்கும் பாதையில், திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வெற்றி நடைபோடும் என்பதையும், அவர் விரும்பியபடி கழகத்தை அப்படி வீறுநடை போடச் செய்வதே நாம் ஒவ்வொருவரும் அவருக்குச் செலுத்திடும் அன்புக் காணிக்கை என்பதையும், தமிழ்ப் பெருமக்களுக்கு உறுதிபடத் தெரிவித்து; இந்தப் பொதுக்குழு கனத்த இதயத்துடனும், கண்ணீர்ப் பெருக்குடனும் தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

*தீர்மானம்: 2*

முன்னாள் பிரதமர் “பாரத ரத்னா” திரு. வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு இரங்கல்

தலைவர் கலைஞர் அவர்களின் பார்வையில் “வல்லவராகவும், நல்லவராகவும்”, மூன்றுமுறை இந்தியப் பிரதமராகவும், தலைவர் கலைஞர் அவர்கள் பெரிதும் விரும்பிச் சுட்டிக்காட்டிய தமிழக உரிமைகளைத் தவறாமல் நிலைநாட்டியவராகவும், இந்தியத் திருநாட்டை அடுத்த உயரத்திற்கு முன்னேற்றிட தங்க நாற்கர சாலை போன்ற வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்தவராகவும் திகழும் முன்னாள் பிரதமர் “பாரத ரத்னா” திரு.வாஜ்பாய் அவர்கள், கடந்த 16.08.2018 அன்று மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியினை, இந்தப் பொதுக்குழு மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்து, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

நாட்டின் பன்முகத் தன்மையைக் காப்பாற்றுவதற்காக, பிரதமர் பதவியிலிருந்த போதும் அதற்கு முன்னரும் உணர்வுபூர்வமாகப் பாடுபட்ட திரு. வாஜ்பாய் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்களுடனும், தலைவர் கலைஞர் அவர்களுடனும் நெருங்கிய நட்பைப் போற்றிய தேசியத் தலைவர். வளமான கற்பனை செறிந்த கவிஞர், நிறைவான பாராளுமன்ற அனுபவம் கொண்டவர், மாற்றார் கருத்துகளை மதித்துப் போற்றும் மாண்புடையவர், ஆட்சியிலிருப்போர் மதச்சார்பற்ற இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும் என்ற பண்பட்ட எண்ணம் கொண்டவர், அண்டை நாடுகளுடன் நல்லுறவு வளர்த்தவர், கார்கில் கதாநாயகர், வெற்றிகரமாக பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி வல்லரசுகளைத் திரும்பிப் பார்க்க வைத்த பிரதமர் என்று பல்வேறு அருமை பெருமைகளுக்குச் சொந்தக்காரரான “பாரத ரத்னா” திரு. வாஜ்பாய் அவர்களின் மறைவு, நாட்டிற்கும், நாட்டின் பன்முகத்தன்மைக்கும் மிகப்பெரிய இழப்பு என்று இந்தப் பொதுக்குழு மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது.

*தீர்மானம்: 3*

மக்களவை முன்னாள் சபாநாயகர், சமூக சிந்தனையாளர் மற்றும் செயல்பாட்டாளர் திரு. சோம்நாத் சாட்டர்ஜி அவர்களின் மறைவிற்கு இரங்கல்

மக்களவை சபாநாயகராகவும், பத்துமுறை மக்களவை உறுப்பினராகவும் நாட்டுக்குப் பல முனைகளிலும் பயன்தரும் வகையில் பணியாற்றிய மிகச் சிறந்த பாராளுமன்றவாதியும், பொதுவுடைமைப் பேரியக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திரு. சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள் 13.08.2018 அன்று மறைவெய்தியதற்கு, இந்தப் பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றப் பொன்விழாவில் தலைவர் கலைஞர் அவர்களின் அழைப்பினை ஏற்று, ஆர்வமுடன் பங்கேற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர். மக்களவை சபாநாயகராக – குன்றி மணியளவும் நடுநிலை தவறாமல் செயல்பட்டு, அனைத்துக் கட்சி மக்களவை உறுப்பினர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். பாராளுமன்றத்தின் வளமான மரபுகளையும், அரசியல் சட்டத்தையும் நிலைநாட்டும் வகையில், மக்களவை உறுப்பினராகவும், சபாநாயகராகவும் செயல்பட்டு ஜனநாயக நெறிகளைப் பாதுகாத்தவர். அறிவியல் ரீதியான சமூக சிந்தனையாளர். உழைக்கும் அடித்தட்டு மக்களின் நலனுக்காவும் முன்னேற்றத்திற்காகவும் அயராது பாடுபட்ட தலைவர் திரு.சோம்நாத் சாட்டர்ஜி அவர்களின் மறைவு, பாராளு மன்றத்திற்கும், இடதுசாரி எண்ணங்களின் செழுமைக்கும், ஜனநாயகத்திற்கும் பேரிழப்பு என்று இந்தப் பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

*தீர்மானம்: 4*

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் திரு சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களின் மறைவுக்கு இரங்கல்.

தமிழ்நாட்டில் இருமுறை ஆளுநராகவும், பஞ்சாப் முதல்வராகவும், மத்திய அரசின் அமைச்சராகவும், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆளுநராகவும், மக்கள் பணியாற்றிய திரு. சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள், 14.01.2017 அன்று மறைவெய்திய சோக நிகழ்வுக்கு, இந்தப் பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

மாநில அரசுகளைக் கலைக்கும் அரசியல் சட்டப் பிரிவு 356-ன் கீழ், பிற்போக்கு சக்திகளின் சூழ்ச்சிக்கு இறையாகி, கொல்லைப்புற வழியாகக் கழக அரசைக் கலைக்க, முன்னாள் பிரதமர் சந்திரசேகர் அறிக்கை கோரிய போது, இந்திய அரசியல் சட்டநெறிகளைத் தூக்கிப் பிடித்திடும் வகையில், நேர்மைக்கும் நியாயத்திற்கும் பெயர் பெற்ற திரு. சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் கோரிய அறிக்கையைக் கொடுக்க மறுத்தவர். அறிக்கை தர மறுத்த காரணத்தால், பீஹார் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட போது, ஆளுநர் பதவியையே தூக்கி எறிந்தவர். அரசியல் சட்டப் பிரிவு 356-ஐத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கை உறுதிக்காக – குறிப்பாக, சட்டப்படியும், ஜனநாயக வழிகாட்டுதல்களின்படியும் நடந்து கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக தனது பதவியை இழந்தவர். 1991 பொதுத் தேர்தலில் கழகத்தை ஆதரித்துப் பரப்புரை செய்தவர். வாழ்நாள் முழுதும் அரசியல் பண்பாடு போற்றிய திரு. சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களின் மறைவினால், அரசியல் சட்டம் தனது நேர்மையான பாதுகாவலர்களில் ஒருவரை இழந்திருக்கிறது என்று இந்தப் பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

*தீர்மானம்: 5*

ஐ.நா. மன்றத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் திரு.கோஃபி அன்னான் மறைவுக்கு இரங்கல்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக இருந்தவரும், நோபல் பரிசு பெற்றவருமான திரு கோஃபி அன்னான் அவர்கள் 18.08.2018 அன்று மறைவெய்தியதற்கு, இந்தப் பொதுக்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

இரு முறை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி, உலக அமைதிக்காக ஆர்வத்துடன் பாடுபட்டவர் திரு கோஃபி அன்னான் அவர்கள். ஐக்கிய நாடுகள் சபை நிர்வாகக் கட்டமைப்பில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவரும், பல்வேறு அமைதிப் பேச்சு வார்த்தைகளில் அக்கறையுடன் பங்கேற்றவரும், ஐக்கிய நாடுகள் சபையின் “ஆயிரம் ஆண்டுகளுக்கான செயல் நோக்கம்” திரு கோஃபி அன்னான் அவர்களின் மறைவு ஐக்கிய நாடுகள் சபைக்கும், மனித உரிமைகளுக்கும், உலக அமைதிக்கும் பேரிழப்பாகும் என்று இந்தப் பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

*தீர்மானம் : 6*

தலைவர் கலைஞர் அவர்களின் மறைவுச் செய்தி கேட்ட ஆழ்ந்த சோகத்திலும், அதிர்ச்சியிலும் மறைவெய்தியோருக்கு இரங்கல்; அவர்தம் குடும்பத்தார்க்கு உதவிநிதி.

கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் காவேரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, அவரது உடல் நலம் படிப்படியாகப் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்தும் – தலைவர் கலைஞர் அவர்களின் இன்னுயிர் பிரிந்தது என்ற செய்தி கேட்டும், அதிர்ச்சியடைந்த கழக உடன்பிறப்புகள் 248 பேர் மறைவெய்தியிருக்கிறார்கள். வாழ்நாளில், தங்களின் உயிருக்குக்கும் மேலாக உயர்த்தி நேசித்த, தங்களின் குடும்பத் தலைவர் பாசமிகு கலைஞர் மறைந்து விட்டார் என்ற துயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மறைவெய்திய கழகத் தோழர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்தப் பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

கழகத் தலைவர் மறைவினையொட்டி உயிரிழந்த 248 அன்பு உடன்பிறப்புகளின் குடும்ப உதவிநிதியாக தலா 2 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 4 கோடியே 96 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவது என்று இந்தப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.

*தீர்மானம்: 7*

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானோருக்கு இரங்கல்.

சுற்றுப்புறச்சூழலுக்கும், மக்களின் சுகாதாரத்திற்கும் மிகவும் கேடு விளைவித்து ஆபத்தை ஏற்படுத்திடும் வகையில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தனியார் ஆலையை மூடக்கோரி, தூத்துக்குடி மக்கள் ஒருங்கிணைந்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நூறு நாட்களுக்கும் மேல் நடைபெற்ற அந்தப் போராட்டத்தைச் சீர்குலைத்திட, 22.05.2018 அன்று எவ்வித முன்னெச்சரிக்கையும் செய்யாமல், திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தி அப்பாவி மக்களில் 13 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டன. விதிகளுக்கு முரணாக, துப்பாக்கிச் சூட்டில் சிறப்புரகத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. அதிகார துஷ்பிரயோகத்தால் நடைபெற்ற மனிதாபிமானமற்ற, அராஜகமான அந்தத் துப்பாக்கிச் சூட்டில் மாண்ட 13 பேருக்கும் இந்தப் பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

*தீர்மானம்: 8*

கேரள மாநில கனமழை – பெருவெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோருக்கு இரங்கல்.

வரலாறு காணாத கன மழை மற்றும் பெரு வெள்ளம் சூழ்ந்து கேரள மக்களின் வாழ்வாதாரத்தையும், உயிரையும் கொடுமையான முறையில் பறித்திருக்கிறது. அதிதீவிரப் பேரிடரினால் அம்மாநிலத்தில் உள்கட்டமைப்பும், வீடுகளும், மிகப்பெரும் சேதாரத்திற்குள்ளாகி, மக்கள் இயல்பு நிலைமைக்குத் திரும்ப முடியாமல் தவித்துத் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களை எல்லா வகையிலும் நிலைகுலைய வைத்திருக்கும் இந்தப் பேரிடரால், பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். பெருமழை-வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்குண்டு 373 பேர் இறந்திருப்பதாகவும், இந்த எண்ணிக்கை 400-ஐத் தொடும் என்றும் வெளிவந்துள்ள துயரம் கப்பிய செய்தியை மிகுந்த வேதனையுடன் பதிவு செய்யும் இந்தப் பொதுக்குழு, பேரிடரில் சிக்கி உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அவர்தம் குடும்பத்தார்க்கு இதயபூர்வமான ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

*தீர்மானம்: 9*

பன்முக ஆளுமை – முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்குப் ‘பாரத ரத்னா’ விருது வழங்கி மத்திய அரசு பெருமைப்படுத்த வேண்டும்!

போட்டியிட்ட 13 முறையும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றும், இருமுறை சட்ட மேலவை உறுப்பினராக இருந்தும் மொத்தம் 60 ஆண்டுகள் உறுப்பினராக, தமிழகத்தில் இதுவரை யாரும் உருவாக்காத சரித்திரத்தைப் படைத்தவர் தலைவர் கலைஞர். பேரறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் பொதுப் பணித்துறை அமைச்சராகவும், பிறகு ஐந்து முறை, தமிழகத்தின் எந்த முதல்வரும் பதவி வகித்திடாத அளவுக்கு மொத்தம் 19 ஆண்டுகள் – நீண்ட காலம் தமிழ்நாடு முதலமைச்சராகவும் இருந்து அரும்பணி ஆற்றியவர் தலைவர் கலைஞர். தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் யாராலும் தவிர்த்திட இயலாத தலைவராகவும், திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளை, எள்ளளவும் குறைந்து விடாமல், இறுதி வரை இதயத்தில் ஏந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள இந்தியத் தமிழர்களுக்காக மட்டுமின்றி, உலகெங்கும் பரவியிருக்கும் தமிழினத்தின் உரிமைகளுக்காகவும், அவர்தம் உன்னதமான நலனுக்காகவும், ஆட்சி அதிகாரத்தையும் சீரிய செல்வாக்கையும் பயன்படுத்தி, சிறப்பான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

தலைவர் கலைஞர் அவர்கள் தலைசிறந்த நிர்வாகியாக – முதலமைச்சராக இருந்த போது உருவாக்கிய குடிசை மாற்று வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், நுகர்பொருள் வாணிபக் கழகம், நமக்கு நாமே – அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள், பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நாட்டுக்கே முற்போக்கான முன்னோடித் திட்டங்களாகும். விவசாயிகள் – நெசவாளர்கள் – மீனவர்கள் என்ற மும்முனை வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களைத் தந்தவர். தொழில் வளர்ச்சிக்கும், கணினிக் கல்விக்கும் அரும்பாடு பட்டவர் தலைவர் கலைஞர். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், தனிமனித வருவாய் உயர்வுக்கும் வித்திட்டவர். சாதி மத வேறுபாடுகளை ஒழித்துச் சமூக நல்லிணக்கம் காண ஓயாது உழைத்தவர். விளிம்பு நிலைப் பிரிவினரான அருந்ததியர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் ஆகியோரது நல்வாழ்விலும் – முன்னேற்றத்திலும் சீரிய கவனம் செலுத்தியவர். மாநிலத்தின் அனைத்துத் துறைகளிலும் நீடித்த நிலையான வளர்ச்சியிலும், முழுமையான முன்னேற்றத்திலும் ஈடுபாடு காட்டியவர் தலைவர் கலைஞர்.

பண்டித நேரு முதல் இந்தியத் திருநாட்டின் அனைத்துப் பிரதமர்களுடனும் நயத்தக்க நாகரிகமான நட்பையும், மாற்றுக் கருத்துகள் கொண்டிருந்தாலும் அரசியல் மேன்மையையும் பண்பாட்டையும் என்றென்றும் போற்றி வளர்த்த தலைவர் கலைஞருக்கு இணையான இன்னொரு தலைவர் இனிவரும் எந்த நூற்றாண்டிலும் கிடைப்பது அரிது என்று சொல்லுமளவுக்கு, அழிக்க முடியாத ஆழமான முத்திரை பதித்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

குடியரசுத் தலைவர்களை உருவாக்குவதிலும், மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைவதிலும், நாட்டின் பன்முகத் தன்மையைப் பேணிக் காப்பதிலும் முனைப்புடன் செயலாற்றியவர். ஆக்கப்பூர்வமானதும் வலிமையானதுமான மாற்று அணிகளை தேசிய அரசியலிலும், மாநில அரசியலிலும் உருவாக்குவதிலும், நாட்டின் ஒற்றுமையையும் – ஒருமைப்பாட்டையும் – இறையாண்மையையும் போற்றிக் காப்பதிலும் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

சட்டமன்றப் பொன்விழாவும் கண்டார், கழகத் தலைவராகவும் பொன்விழா கண்டார். சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சிலிருந்து, அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என்று அனைத்துப் பொறுப்புகளிலும் ஆற்றிய பேருரைகள் வரை அனைத்திலும் சட்டமன்றத்தின் மாண்புகளையும், மரபுகளையும் இம்மியளவும் வழுவாமல் பேணிக் காத்த தலைவர் கலைஞர் அவர்கள், மக்களாட்சித் தத்துவத்தின் மாபெரும் சிற்பியாக விளங்கி மன்றத்தில் விவாதங்களில் எப்போதும் தென்றல் தவழ்ந்திடவும், ஒளிபரவிடவும், வெப்பம் தவிர்க்கப்படவும் உறுதுணையாக விளங்கினார். முதலமைச்சராக இருந்தபோது எதிர்க் கட்சிகளையும், எதிர்க்கட்சி வரிசையில் வீற்றிருந்தபோது ஆளுங்கட்சியையும் அனுசரித்து அரவணைத்துச் சென்றவர் தலைவர் கலைஞர்.

தலைவர் கலைஞர் அவர்கள் அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைக் காப்பதிலும், ஜனநாயக மாண்புகளைப் போற்றுவதிலும், நாட்டு நலனை முன்னிலைப் படுத்துவதிலும் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். ஏழை எளியோர், பாட்டாளி வர்க்கத்தினர், நடுத்தரப்பிரிவினர், ஒடுக்கப்பட்டோர், உதாசீனப்படுத்தப்பட்டோர் மீதும், மகளிர் முன்னேற்றத்திலும் தனித்தன்மை வாய்ந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். 45 வயதிலேயே முதலமைச்சராகப் பொறுப்பேற்று நிர்வாகத்தில் விவேகம் – வேகம் காட்டியதுடன், முதிர்ந்த 82 வயதிலும் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்று பழுத்துக் கனிந்த முதிர்ச்சியான அனுபவத்தை மாநில நிர்வாகத்திற்குத் தந்தவர். நிர்வாகத்திற்கு உயிரையும், உணர்வையும் ஊட்டியவர் தலைவர் கலைஞர். தாய்மொழியான தமிழ் மொழியை முதன்மைப்படுத்துவதில் தணியாத ஊக்கம் கொண்டவர் தலைவர் கலைஞர்.

இணையிலா எழுத்தாளர் – ஏற்றமிகு பேச்சாளர் – நாடு போற்றும் நல்ல நிர்வாகி என்ற தனித்தன்மைகளின் தகுதிமிக்க தொகுப்பாகவும், நிறைவான மனித நேயம், நேர்த்தியான கண்ணோட்டம் போன்ற நற்குணங்கள் – ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளின் அரிய பெட்டகமாகவும், – அடி முதல் நுனி வரை வலிவும், பொலிவும் மிக்க கட்டமைப்பினை கழகத்திற்கு உருவாக்கித் தந்த செயலூக்கம் கொண்ட தலைவராகவும் விளங்கிய தலைவர் கலைஞர் அவர்களுக்கு, ‘பாரத ரத்னா’ விருது வழங்கி மத்திய அரசு பெருமைப்படுத்திட வேண்டும் என்பது தமிழகத்தில் வாழும் தமிழர்கள் மட்டுமல்லாது, உலகத் தமிழர்களின் ஒருமித்த விழைவாகும் என்பதால், மத்திய அரசு அதனை நிறைவேற்றித்தர வேண்டுமென இந்தப் பொதுக்குழு அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

*தனித் தீர்மானம்:*

அண்ணா வழியில் – கலைஞரின் பயணத்தைத் தொடர்ந்து

முன்னோக்கி நடத்திட அன்புத் தளபதியே வருக!

கழகத்தின் தலைவரே வருக! வருக!

“விளையும் பயிர் முளையிலேயே” – என்ற முதுமொழிக் கொப்ப, 1966-ல் “கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.” என்று, தனது சீரிளமையில் 13ஆவது வயதிலேயே, திராவிட முன்னேற்றக் கழகத்தில்
வாலிபத் துடிப்புடன் தீவிரமாகச் செயல்படத் தொடங்கிய
தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்ணா – கலைஞர் ஆகியோருக்குப் பிறகு, கழகச் சரித்திரத்தின் மூன்றாவது பாகத்தை எழுதி முன்னெடுத்துச் செல்லப் போகிறார் என்பதற்கான மின்னும் அடையாளமாகத் திகழ்ந்தார். தொடர்ந்து, 1974ல் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, பிறகு நிர்வாகக்குழு உறுப்பினர், இளைஞர் அணி அமைப்பாளர், செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என்று கழகத்தின் பல்வேறு பொறுப்புகளைப் படிப்படியாக வகித்து, தனது ஓயாத உழைப்பாலும் கொள்கை உறுதியாலும் வழிகாட்டும் ஒளிவிளக்காய் உருப்பெற்றிருக்கிறார்.

பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர் ஆகியோரின் அடியொற்றி நடையாய் நடந்து நற்றமிழர் யாவரும் ஒரு முகமாக உவந்து போற்ற, கழகப் பணியாற்றி, திராவிடப் பேரியக்கக் கொள்கைகளை, ஆக்கப்பூர்வமான அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, காலமும் – கலைஞரும் கனிந்து நமக்களித்திருக்கும் இலட்சியக் கொடை திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் என்பதையும்; தந்தை மகற்காற்றிய நன்றியினால், மகன் தந்தைக் காற்றும் பேருதவியாக, கண்ணயரா கடின உழைப்பின் மூலம் தகுதிகள் பல பெற்று, விட்ட இடத்தைத் தொட்டுத் துலங்கிடச் செய்து, கழகத்தை முற்போக்கு நோக்கில் எடுத்துச் செல்லும் முழுமையான ஆற்றலாளர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் என்பதையும்; இந்தப் பொதுக்குழு பெருமிதத்துடன் பதிவு செய்கிறது.

நெருக்கடி நிலையை எதிர்த்து 01.02.1976 அன்று கைதாகி ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஏறக்குறைய ஓராண்டுக் காலம் சிறைக் கொட்டடியில் கடும் சித்திரவதைக்குள்ளாகி “செத்தொழிந்தான் இவன்” என்று எறியப்பட்டிருந்தபோது, தீரன் சிட்டிபாபு தன்னுயிரை ஈந்து காப்பாற்றியதால் நம்மிடையே இன்று உயிரோடு நடமாடும் தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் – தமிழக மக்களின் நலனுக்காக – சமூகநீதியை நிலைநாட்டிட, 69 சதவீத இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும் என்று, 1994ல் அறிவிக்கப்பட்ட போராட்டம் உள்பட கழகம் அறிவித்த அனைத்து அறப்போராட்டங்களிலும் ஆர்வமுடன் பங்கேற்றுக் கைதானவர்; “மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை, எமை மாட்ட நினைத்திடும் சிறைச்சாலை” எனும் சிந்தையினர்.

தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆறு முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று 24 வருடங்களுக்கும் மேல் சட்டமன்ற ஜனநாயகப் பணியைத் திறம்பட ஆற்றி வரும் அவர், விரைவில் சட்டமன்றப் பணியில் வெள்ளி விழா காணவிருக்கிறார்.

“ஸ்டாலின் மிகவும் புத்திசாலி மற்றும் திறமையானவர்; தந்தையைப் போல் வெற்றி பெறுவார்” என்று பேரறிஞர் அண்ணாவின் அன்பான வாழ்த்தைப் பெற்றவர்.

5.03.2015 அன்று நடைபெற்ற கழகத் தலைமைச் செயற்குழுவில் “கழகத்தின் வருங்காலமே” என்று தலைவர் கலைஞர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்; “உழைப்பு, உழைப்பு, உழைப்பு” என்று தலைவர் கலைஞரால் உளமுருகச் சான்றிதழ் தரப்பட்டவர். “ஸ்டாலின் கழகத்திற்கு மட்டும் தளபதி அல்ல. வருங்காலத்தில் ஒட்டு மொத்த தமிழினத்தின் தளபதியாக வருவார்” என்று பாராட்டிய இனமானப் பேராசிரியர் அவர்கள் 3.02.2012 அன்று நடைபெற்ற பொதுக் குழுவில், “ஸ்டாலின்தான் எதிர்காலத்திலே இந்த கழகத்தைக் கட்டிக் காப்பாற்றுவார் என்று அடையாளம் காட்டுகிறோம்” என அன்புடன் சுட்டிக்காட்டப்பட்டவர்.

தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை மாநகர மேயராக, அமைச்சராக, தமிழகத்தின் துணை முதலமைச்சராகப் பொறுப்பு வகித்து, நிர்வாக ஏணியிலும் படிப்படியாக அளந்து அடியெடுத்து வைத்து ஆரவாரமின்றி, அமைதியாக மேலேறி, அருமையாகப் பக்குவப்பட்டிருப்பவர். “உங்களுக்காக நான்; உங்களால் நான்; உங்களில் ஒருவன்” என்ற இலட்சியத்துடனும், தகுதிகளால் வளர்ந்து தன்னடக்கத்துடனும் இருப்பவர்.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக புதிய தொழிற்சாலைகள், உட்கட்டமைப்புத் திட்டங்கள், தகவல் தொழில்நுட்பத் திட்டங்கள் உள்ளிட்டவற்றையும், பெரியார் நினைவு சமத்துவபுரங்களையும், கிராமப்புற வளர்ச்சிக்கான ‘நமக்கு நாமே’ திட்டத்தையும், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட மகளிர் மேம்பாட்டுத் திட்டங் களையும், உள்ளாட்சியில் நல்லாட்சிக்கான உயர்ந்த திட்டங்களையும் குறைவற நிறைவேற்றிய தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது அரசியல் நெடும் பயணத்தில் பொன் விழா கண்டவர்.

தமிழினத் தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர் ஆகியோரால் மனநிறைவுடன் அடையாளம் காட்டப்பட்டிருக்கும், தகுதிகள் பல பெற்று நிறைகுடமாகத் திகழும் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக, இந்த பொதுக் குழுவினால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்த நாள், கழகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள தோழர்கள் எல்லோருக்கும் “இன்ப நாளிதே; இதயம் பாடுதே” என்பதற்கு இணையானதாகும். இந்தநாள், கழக வரலாற்றின் மூன்றாம் பாகத்திற்கான முகவுரையாகும். இந்த முகவுரையின் மூலவர்களான கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் உளப்பூர்வமான நன்றிக்குரியவர்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *