சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு முன்னேற்பாட்டுப் பணிகள்  நீர்நிலைகள் மற்றும் குளங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து செய்தியாளர்கள் குழுவினர்களுக்கு சென்னை முழுவதும் சுற்றி காண்பித்த மாநகராட்சி அதிகாரிகள்.!!

சென்னை

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு முன்னேற்பாட்டுப் பணிகள்  நீர்நிலைகள் மற்றும் குளங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து துணை ஆணையாளர் (பணிகள்) .வி.சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் செய்தியாளர்களுடனான சுற்றுப்பயணம் இன்று மேற்கொள்ளப்பட்டது..!!

 

சென்னை டிசம்பர் 4

 

தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மேலும், நீர் தேக்கும் திறனை அதிகரிக்கும் வகையில் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குளங்களில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் புதிய குளங்கள் அமைத்தல் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் செய்தியாளர்களுடனான பயணம் இன்று (மேற்கொள்ளப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-127க்குட்பட்ட மேற்கு நடேசன் நகரில் உள்ள விருகம்பாக்கம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள், வார்டு-128க்குட்பட்ட வேம்புலியம்மன்  கோயில் தெருவில் உள்ள வக்ஃப் போர்டு குளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆழப்படுத்துதல் மற்றும் தூர்வாரும் பணிகள், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-151க்குட்பட்ட எஸ்.வி.எஸ். நகர் குளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள், கிண்டி-ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் உள்ள இரண்டு குளங்களில் அகலப்படுத்துதல் மற்றும் ஆழப்படுத்துதல் பணியினையும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4 குளங்கள் வேளச்சேரி-எம்.ஆர்.டி.எஸ். இரயில் நிலையம் அருகில் 6 வழிக் கால்வாய் உள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 புதிய குளங்கள்ஆகியவற்றினை  பார்வையிட்டனர்.

 இதனைத் தொடர்ந்து, துணை ஆணையாளர் (பணிகள்) அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது:

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க வந்துள்ள அனைவருக்கும் நன்றிகள்.  நீர்வளத்துறையின் பராமரிப்பில் இருந்த விருகம்பாக்கம் கால்வாய் பெருநகர சென்னை மாநகராட்சியிடம் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள ஒப்படைக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இந்தக் கால்வாயில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கால்வாய் 6.4 கி.மீ. நீளம் கொண்ட பெரிய கால்வாய்.  அன்னை சத்யா நகர், அரும்பாக்கம், சின்மயா நகர், நடேசன் நகர், எம்.எம்.டி.ஏ. காலனி உள்ளிட்ட பிரதான பகுதிகளை இந்தக் கால்வாய் கடந்து செல்கிறது. மழைக்காலங்களில் மழைநீர் இந்தக் கால்வாயில் இருந்து வெளியேறி வெள்ளப்பாதிப்பு ஏற்படுகிற நிலை இருந்து வந்தது.

இதனைத் தவிர்க்கும் பொருட்டு, விருகம்பாக்கம் கால்வாயில் தொடக்கப் பகுதி, கூவத்தில் சேருகின்ற முடிவுப் பகுதி, இடையில் உள்ள 28 குறுக்குப் பாலங்கள் என  30 முக்கியப் பகுதிகளை தேர்ந்தெடுத்து, அந்த இடங்களில் மிதக்கும் இயந்திரம் (Floating Machine) மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்கள் உள்ளிட்ட தேவைப்படும் இயந்திரங்களைப் பயன்படுத்தி மழைக்காலத்தை முன்னிட்டு, கடந்த 45 நாட்களாக தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப் பணிகளின் காரணமாக, தற்போது பெய்த 16 முதல் 17 செ.மீ. மழை பெய்தபோது, 6  மணி நேரத்திற்குள்ளாக மழைநீர் வடிந்துள்ளது.  இன்னும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் இந்தக் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மேம்பாட்டுப் பணிகளை ஐஐடி சென்னை  உடன் இணைந்து பாத்தோமெட்ரி (PATHO METRI) ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு அளவு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், பக்கச்சுவர்கள் விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய இடங்கள், குறுகலான உள்ள இடங்களை விரிவுப்படுத்துதல் உள்ளிட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த ஆய்வு டிசம்பர் இறுதியில் கிடைக்கப்பெற்றால், அந்த ஆய்வின் அடிப்படையில் ஜனவரி மாதம் முதல் இந்த கால்வாயில் தூர்வாருதல் மற்றும் விரிவாக்கப் பணிகள் மேற்கொண்டு வெள்ளப்பாதிப்பு ஏற்படாத வண்ணம் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது இந்தக் கால்வாயில் 1500 மெட்ரிக் டன் வண்டல்கள் அகற்றப்பட்டுள்ளது. மாண்மிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்களும் இந்த இடத்தினைப் பார்வையிட்டு, இந்தப் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்கள். அதனடிப்படையில் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு அடுத்த மழைக்காலத்திற்குள்ளாக இந்தப் பணிகள் முடிக்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.37.11 கோடி மதிப்பில் 41  நீர்நிலைகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் கொசஸ்தலையாறு, கூவம் மற்றும் அடையாறு ஆகிய 3 பெரிய ஆறுகளில் மழைநீரை வெளியேற்றி கடலில் சேர்க்க வேண்டும்.  பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 3,050 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த மழைநீர் வடிகால்கள் மூலமாக விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா உள்ளிட்ட 35 பெரிய கால்வாய்கள் மூலமாக மழைநீரானது கொசஸ்தலையாறு, கூவம் மற்றும் அடையாறு உள்ளிட்ட ஆறுகள் வழியாக கடலில் கலக்கும்.

மழைநீரை சேமிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீரைச் சேமிக்கும் வகையில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் புனரமைப்புப் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 41 இடங்களில் புதிதாக குளங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

  118 ஏக்கர் பரப்பளவிலான ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் புதிதாக 4 குளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்பாக 0.80 மி.க. அடி தண்ணீர் உள்ளே நிற்கும்.  இந்த நீர் பம்புகள் மூலம் வெளியேற்றப்பட்டு மழைநீர் வடிகால் வழியாக சென்று சாலைகளில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 2 மாதங்களில் இங்கு   4  குளங்கள் அமைக்கப்பட்ட நிலையில் 0.8 மி.க. அடி தண்ணீர் சேகரிக்கும் நிலையிலிருந்து 4.6 மி.க. அடி லிருந்து 5 மி.க. அடி வரை தண்ணீர் கொள்ளளவு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 5லிருந்து 6 மடங்கு நீரை சேமிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இதனால் இந்தப் பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டு, மழைநீரும் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

எஸ்.வி.எஸ். நகர் குளத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மூலமாக வளசரவாக்கம் பகுதிகளில் உள்ள மழைநீரை சேகரிக்கும்.  அதனருகில் உள்ள ஆவின் குளம் முகப்பேர் பகுதிகளில் உள்ள மழைநீரை சேகரிக்கும்.  புதிதாக அமைக்கப்பட்ட குளங்கள் அனைத்தும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மழைநீரை சேகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.   மேலும், பூங்காக்களில் மழைநீரினை சேமிக்கும் வகையில்  57  மழைநீர் உறிஞ்சும் பூங்காக்களும்  அமைக்கப்பட்டுள்ளது.

மழைநீர்த் தேக்கம் ஏற்படும் இடங்களை கண்டறிந்து அவ்விடங்களில் காலியாக உள்ள இடங்களில் மாநகராட்சியின் சார்பில் புதிய குளங்கள் அமைத்து, மழைநீரை சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  எனத் தெரிவித்தார்.

விருகம்பாக்கம் கால்வாய்

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணையின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் வீராங்கல் ஓடை ஆகிய நீர்நிலைகளை பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் பராமரிப்புப் பணிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.   இதில் விருகம்பாக்கம் கால்வாய் 6,700 மீ. நீளம் கொண்டது. இந்தக் கால்வாயின் குறுக்கே 28 மதகுகள் உள்ளன.  இதில் மாநகராட்சியின் சார்பில் 2,500 மீ. நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 1,500 மெட்ரிக்  டன் வண்டல்கள் அகற்றப்பட்டுள்ளது.

வஃக்போடு குளம்

கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-128க்குட்பட்ட வேம்புலியம்மன்  கோயில் தெருவில் உள்ள வஃகுபோடு குளத்தில் ஆழப்படுத்துதல் மற்றும் தூர்வாருதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வஃக்போடிற்கு சொந்தமான 3.50 ஏக்கர் நிலத்தில் சுமார் 3 ஏக்கரில் குளம் அமைந்துள்ளது.  இக்குளத்தில் உள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளது.  மேலும், குளத்தின் கொள்ளளவினை அதிகரித்து கூடுதல் தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் சுமார் 10 அடி ஆழமான குளத்தினை தற்போது தூர்வாரி 15 அடியாக ஆழப்படுத்தப்பட்டுள்ளது.  இக்குளமானது 12,000 ச.மீ. பரப்பளவில் 15 அடி ஆழத்துடன் 1.90 மில்லியன் கன அடி  கொள்ளளவு உடையதாக அமைக்கப்பட்டுள்ளது.

எஸ்.வி.எஸ். நகர் குளம்

வளசரவாக்கம் மண்டலம், வார்டு-151க்குட்பட்ட எஸ்.வி.எஸ். நகர் குளத்தில் புனரமைப்புப் பணிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆற்காடு சாலையில் எஸ்விஎஸ் நகர் பிரதான சாலையிலிருந்து, காமராஜர் சாலை வரை தண்ணீர் தடையின்றி செல்வதற்காக முற்றிலும் தூர்வாரப்பட்டுள்ளது.  தனியார் வசம் ஆக்கிரமிப்பில் இருந்த 4 ஏக்கர் பரப்பளவிலான எஸ்விஎஸ் நகர் குளம் அமைந்திருந்த பகுதியினை பெருநகர சென்னை மாநகராட்சியால் கையகப்படுத்தப்பட்டு, பருவமழைக்கு முன்பாக அதனை 3 ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு, தண்ணீர் தேக்கும் திறனை அதிகரித்து, குளம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் தடுக்கப்பட்டது. மேலும் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு 1,50 மில்லியன் கன அடி  கொள்ளளவு உடையதாக இருக்கும்.

எஸ்விஎஸ் நகர் பிரதான சாலையிலிருந்து ஆற்காடு சாலைக்கு மழைநீரை பம்ப் செய்ய ஒரு மோட்டார் பம்பு, குளத்தில் இருந்து அம்பேத்கர் நகர் சாலை மழைநீர் வடிகால் வரை நீரை வெளியேற்றுவதற்காக குளத்தில் ஒரு மோட்டார் பம்பு என 100 குதிரைத்  திறன் கொண்ட 2 மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டுள்ளது.  ரூ.5 கோடிக்கு மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு, இக்குளத்தினை அழகு படுத்துதல், தண்ணீர் நுழைவு மற்றும் வெளியேற்றும் கட்டமைப்புகள் உருவாக்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் ரேஸ் கிளப் வளாகத்தில் குளங்கள்

கிண்டி, ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் ஏற்கனவே உள்ள இரண்டு குளங்களில் அகலப்படுத்தி ஆழப்படுத்துதல் மற்றும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நீர் சேமிக்கும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அங்கு புதிதாக 4 குளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் ரேஸ் கிளப் வளாகத்தில் 14,070 கன மீட்டர் (அ) 0.50 மில்லியன் கன அடி கொள்ளளவு தண்ணீர் தேக்கம் கொண்ட ஏற்கனவே உள்ள 2 குளங்களில் அகலப்படுத்துதல் மற்றும் ஆழப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது 18,570 கனமீட்டர் (அ) 0.66 மில்லியன் கன அடி கொள்ளளவு தண்ணீர் தேக்கும் திறனுடன் புனரமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வளாகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கூடுதலாக 4 குளங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 1,10,800 கன மீட்டர் (அ) 3.91 மில்லியன் கன அடி கொள்ளளவு தண்ணீர் தேக்கும் திறனுடன் அமைக்கப்பட்டுள்ளது.  2 பழைய குளங்கள் மற்றும் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 4 குளங்கள் சேர்த்து 28,878 ச.மீ. பரப்பளவில், 1,29,390 சதுர கனமீட்டர் (அ) 4.57 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட மழைநீர் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்த நடவடிக்கைகளின் மூலம் கிண்டி, மடுவின்கரை, வேளச்சேரி மற்றும் ஐந்து பர்லாங் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெள்ளப் பாதிப்பிலிருந்து பயனடைவார்கள்.

வேளச்சேரி எம்.ஆர்.டிஎஸ் இரயில் நிலைம் அருகில் குளம்

வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ். இரயில் நிலையம் அருகில் 6 வழி கால்வாய் உள்ள இடத்தில் புதிதாக 2 குளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 குளங்களும் 3.5 ஏக்கர் நிலத்தில் 13,800 சதுர மீட்டர் பரப்பளவில் தோண்டப்பட்டு, சராசரியாக 3 மீட்டர் ஆழத்தில் 1.5 மில்லியன் கன அடி  தண்ணீரை மழைநீர் வடிகால்களிலிருந்து சேமிக்கும் திறன் கொண்டது.

இந்த நிகழ்வுகளின் போது, தெற்கு வட்டார துணை ஆணையாளர் எம்.பி.அமித், இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் (பொது) .எஸ்.ராஜேந்திரன், மேற்பார்வை பொறியாளர் (மழைநீர் வடிகால்) எஸ்.பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *