இரசாயன உரங்களின் விலை உயர்வு;
விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசு
வைகோ கண்டனம்..!!
பருவ கால மாறுபாடு, போதிய மழையின்மை, வறட்சி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளில் சிக்கி வேளாண்மைத் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. விவசாயிகள் வேளாண்மைத் தொழிலைக் கைவிட்டு வெளியேறும் அளவுக்கு கடும் நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு பேரிடியாக விவசாயத்திற்குத் தேவையான இரசாயன உரங்களின் விலையேற்றம் விவசாயிகளை கடுமையாகப் பாதித்துள்ளது.
சம்பா நெல் நடவுப் பருவத்தில் பயிருக்கு மணிச்சத்தும், தழைச்சத்தும் கிடைக்க டி.ஏ.பி. உரம் (டை அமோனியம் பாஸ்பேட்) அடி உரமாக இடப்படும்.
2018 ஜனவரியில் 50 கிலோ எடை கொண்ட டி.ஏ.பி. உர மூட்டையின் சில்லரை விற்பனை விலை 1150 ரூபாயாக இருந்தது. எட்டு மாத காலத்தில் டி.ஏ.பி. உரம் 275 ரூபாய் அதிகரித்து, தற்போது 1425 ரூபாய் ஆகிவிட்டது.
காம்ப்ளக்ஸ் என்.பி.கே. உரத்தின் விலை ஜனவரி மாதம் 889 ரூபாயாக இருந்தது. தற்போது 1015 ரூபாயாக அதிகரித்துவிட்டது.
பொட்டாஷ் விலையும் 20 விழுக்காடு அளவுக்கு உயர்ந்து இருக்கிறது.
விவசாயத்திற்குத் தேவைப்படும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து என்ற மூன்று வகையான உரங்களில் முதல் இரண்டு வகை உரங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஷ் உரம் மட்டும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் உரங்களுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் மானியமாக இந்திய அரசு உர நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கி வருகிறது.
உரங்களின் விலையைக் கட்டுப்படுத்தி வந்த மத்திய அரசு, அவற்றின் விலைகளைத் தீர்மானிக்கும் உரிமையை உரம் உற்பத்தி நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டது. இதனால் உரம் தயாரிப்பு நிறுவனங்கள் விலையைத் தாறுமாறாக உயர்த்தி வருகின்றன.
உரம் தயாரிப்பில் மூலப் பொருளாக இருக்கும் பாஸ்பரிக் ஆசிட் விலை பன்னாட்டுச் சந்தையில் அதிகரித்து இருப்பதால்தான் டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களின் விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும் ஒரு காரணம் என்றெல்லாம் உர நிறுவனங்கள், விலை உயர்வை நியாயப்படுத்துகின்றன.
மத்திய பா.ஜ.க. அரசின் தவறானப் பொருளாதாரக் கொள்கைகளினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தேக்கம் அடைந்திருப்பதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக நோபல் பரிசுபெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோர் மோடி அரசின் முகத்திரையைக் கிழித்து, உண்மை நிலையைப் படம் பிடித்துக் காட்டி உள்ளனர்.
இந்நிலையில் இரசாயன உரங்களின் விலை பெட்ரோல், டீசல் விலையைப் போன்று அதிகரித்து வருவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரமே அழிந்துவிடும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணரவில்லை.
இந்தியப் பொதுத்துறை வங்கிகளில் பெரு முதலாளிகள் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுக்கொண்டு திருப்பிச் செலுத்தாமல், பா.ஜ.க. அரசின் உதவியோடு வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். இதனால் வங்கிகளின் வாராக் கடன் ரூபாய் 10 இலட்சம் கோடி அளவுக்கு உயர்ந்துவிட்டது என்பதை மத்திய நிதி அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார்.
வங்கிக் கொள்ளையர்களை தப்பவிட்டு வேடிக்கைப் பார்க்கும் மோடி அரசு, ஏழை எளிய விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.
மத்திய அரசு, விவசாயிகளின் மீது சுமைகளை ஏற்றாமல், டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலைகளை குறைத்து, கட்டுக்குள் வைத்து, வேளாண்மைத் தொழில் அழிந்துபோகாமல் பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.