நெகிழ வைத்த, செய்தியாளர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி!
—————————————-
விபத்தில் சிக்கி அண்மையில் மரணமடைந்த, இளம் பத்திரிகையாளர்கள் பிரசன்னா (News J) செந்தில்குமார் (Malaimurasu TV) இருவருக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் 30. 06.19 அன்று மாலை நடைபெற்றது.
நிற்ககூட இடம் இல்லாத அளவுக்கு பத்திரிகையாளர்கள் திரண்டிருந்தனர்.
மறைந்த இரண்டு செய்தியாளர்களின் குடும்பத்தினரும் வரவழைக்கப்பட்டு,
முன் வரிசையில். அமர வைக்கப்பட்டிருந்தனர்.
வருகை தந்த செய்தியாளர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்.
செந்தில்குமாரின் சகோதரர் ஜெய்சங்கர் வந்திருந்தார். ‘ஹெல்மட் ‘ அணிந்திருந்த நிலையிலும் சாலை விபத்தில் தன் தம்பி பலியான நிகழ்வை கனத்த இதயத்துடன் விவரித்தார்.
புறநகர் மற்றும் வெளியூர்களில் பணிபுரியும் செய்தியாளர்கள் குறைந்த சம்பளத்துடன் தொலைதூரம் தங்கள் சொந்த செலவில் அலைந்து திரிந்து செய்தி சேகரிக்கவேண்டிய சூழலை சுட்டிக்காட்டிப் பேசிய செய்தியாளர்கள் பலரும் செந்தில்குமாரின் உழைக்கும் திறனை வெகுவாக புகழ்ந்தனர்.
சென்னையில் நீண்டகாலம் பணியாற்றியவரான பிரசன்னா,எத்தகைய நண்பர்கள் கூட்டத்தை சம்பாதித்து வைத்திருந்தார் என்பதை அங்கு காண முடிந்தது. அவரை நெஞ்சில் நிறுத்தி பத்திரிகை உலக நண்பர்கள் பேசிய பேச்சு உணர்ச்சி பூர்வமாக இருந்தது. சொல்லப்போனால் அவர்களுடைய வாய் பேசவில்லை இதயங்கள் பேசின.
வீட்டிலிருந்து கிளம்பும்போதே நடப்பு செய்தித்தாள்களை ‘அக்கிளில்’ வைத்துக் கொண்டு வருவது, செய்தி சேகரிக்க செல்லும் முன்பு அச்செய்தி பற்றிய
முழு தகவல்களை திரட்டி தயார் நிலையில் இருப்பது,
நண்பர்களுக்கு தேவைப்படும் உதவியை உடனுக்குடன் செய்வது,
” கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல” தத்தளித்துக் கொண்டிருக்கும் புதிய செய்தியாளர்களுக்கு வலிய சென்று வழி காட்டுவது, “தற்பெருமை அறவே இல்லாத பண்பாளர்” போன்ற அவருடைய குணநலன்களை நண்பர்கள் போற்றிப் புகழ்ந்தனர்.
பத்திரிகைத் துறையை தாண்டி உழைக்கும் வர்க்கத்தின் மீதும் சமூகத்தின் மீதும் அவர் எத்தனை அக்கறை கொண்டிருந்தார் என்பதை அவருடன் நெருங்கிப் பழகிய இளம் செய்தியாளர்கள் தெரிவித்து கண்ணீர் வடித்தனர்.
ஒரு நண்பர் பேசும்போது வேதனையுடன் பிரசன்னாவுக்கு “ப்ராவிடண்ட் பண்ட்” பிடிக்கப்பட்டிருந்தால் அதன் மூலம் இரண்டு லட்சம் ரூபாயாவது வந்திருக்குமே என்றார், அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் இது. ஒவ்வொரு பத்திரிகை நிறுவனமும் குறைந்த பட்சம் தங்களிடம் வேலைபார்க்கும் ஊழியர்களுக்காக “பிராவிடண்ட் பண்ட்” ஆவது செலுத்துகிறார்களா? என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
பிரசன்னாவுடன் பழகிய நண்பர்கள் அனைவரும் மறக்காமல் குறிப்பிட்ட ஒரு விஷயம், கருத்தியல்ரீதியாக நண்பர்களுடன் வாதிட்டு நின்றாலும் அடுத்த கணமே அந்த எண்ண முரண்பாட்டை கைவிட்டு பரஸ்பரம் கைகோர்த்து,நட்புக்கு இலக்கணமாக பிரசன்னா செயல்பட்டதை நினைவுகூர்ந்தனர். இந்த” மனித மாண்பு” பத்திரிகை உலகை தாண்டி சமூக- அரசியல் தளங்களில் பயணிப்போரும் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டிய அரிய பண்பு என்று புகழாரம் சூட்டினர்.
பாரதி தமிழன் ஒருங்கிணைப்பில் நடந்த இக்கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரும் பத்திரிக்கையாளர்கள் இருவரின் திரு உருவப் படத்திற்கும் மலர் அஞ்சலி செலுத்தினர். கூட்டம் முடிந்ததும் இருவரின் குடும்பத்தினரோடு, சென்னை பத்திரிகையாளர் மன்றம் உள்பட பல்வேறு பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகள் கலந்து பேசினர்.
சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தமிழக அரசிடம் கேட்டுப் பெற வேண்டிய நிதி மற்றும் குடும்பத்திற்கான உதவிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், பணியில் இருக்கும் போது மரணிக்கும் பத்திரிக்கையாளர் குடும்பங்களுக்கு மத்திய அரசு வழங்கும் 5 லட்சம் உதவித் தொகையை பெரும் வழி முறை குறித்தும் ஆராயப்பட்டது.
-விஜயராகவன்.