உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் முதல் பெண்மணி..மலேசியச் சிறை இலாகாவின் முதல் பெண் துணை இயக்குநர் கௌசல்யா தேவி.!!

சென்னை

உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் முதல் பெண்மணி..மலேசியச் சிறை இலாகாவின் முதல் பெண் துணை இயக்குநர் கௌசல்யா தேவி.!!

மூர்க்கத் தனத்தில் மூச்சுவிடும் முரட்டுக் கைதிகளுக்கு மத்தியில் தோள் உயர்த்தி மிடுக்காய் வலம் வருபவர். வன்முறைகளில் சிகரம் பார்த்த கைதிகளுக்கு மத்தியில் துணிச்சலின் வடிவமாய் பவனி வருபவர். தூக்குத் தண்டனை கைதிகளின் துக்கத்திலும் ஒரு சகோதரியாய்ப் பயணிக்கின்றவர்.

அவர் தான் மலேசிய சிறை இலாகாவின் கைதிகள் நிர்வாகப் பிரிவின் துணை இயக்குநர் (Deputy Commissioner of Prisons, Head of Parole & Community Services, Prisons Department of Malaysia.) DCP கௌசல்யா தேவி சாது (Kausalya Devi Sathoo).

அந்தப் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் மலேசியப் பெண்மணியும் இவர்தான். கடந்த 27 ஆண்டுகளாக மலேசியச் சிறைச்சாலைகளின் முக்கியப் பதவிகளில் பொறுப்பு வகித்து வருகிறார்.

1964-ஆம் ஆண்டு பகாங், ரவுப் நகரில் பிறந்தவர். சின்ன வயதில் பள்ளியில் படிக்கும் போதே சீருடை அணிவதில் ஆர்வம் காட்டினார். நன்றாகப் படித்தார்.

பொதுவாகவே பெண்கள் இந்த மாதிரி கடினமான, சவால் மிக்கப் பணிகளில் ஈடுபடத் தயங்குவார்கள். ஆனால் கௌசல்யா தேவி சற்றும் தயங்கவில்லை.

சிறைக் கைதிகள் என்றாலே முரட்டு ஆசாமிகளின் மூர்க்கத் தனங்கள் தான் முதல் அடையாளமாகத் தெரிய வரும். அவர்களைக் கையாள்வதில் துணிச்சல் வேண்டும். அதிலும் ஒரு பெண்மணி முரட்டு ஆண்களைக் கையாள்வது என்பது சாதாரண விசயம் அல்ல. அதில் வெற்றி கண்டவர் சகோதரி கௌசல்யா தேவி.

அவர் விண்ணப்பம் செய்து கிடைத்த முதல் வேலை சிறைச்சாலை அதிகாரி வேலை தான்.

1988-ஆம் ஆண்டு மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் மனித மேம்பாட்டுத் துறையில் (Human Development) பட்டம் பெற்றார். 1993-ஆம் ஆண்டு மாஸ்டர் பட்டம் (Resource Management in the Faculty of Human Ecology) பெற்றார். பின்னர் மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தில் மனித வளத் துறையில் டாக்டர் பட்டமும் பெற்றார்.

சிறைச்சாலையில் வேலை செய்வதை உற்றார் உறவினர்கள் விரும்பவில்லை. இருந்தாலும் இவர் தேர்ந்து எடுத்த அந்தத் துறையில் முழு ஈடுபாடு காட்டினார். மற்றவர்களைப் பற்றி இவர் கவலைப் படவில்லை. இவருடைய தாயாரும் கணவரும் இவருக்கு ஆதரவு தந்து உற்சாகம் கொடுத்தார்கள்.

1990-ஆம் ஆண்டுகளில் மலேசியச் சிறைச்சாலைகளில் பெண் அதிகாரிகள் எண்மர் உயர்ப் பதவிகளில் நியமிக்கப் பட்டார்கள். அவர்களில் நிர்வாகப் பிரிவின் துணை இயக்குநர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி கௌசல்யா தேவி. 2007-ஆம் ஆண்டில் இருந்து அந்தப் பதவியில் இருக்கிறார்.

தவிர மலேசிய வரலாற்றில் இதுவரையில் இரு பெண்கள் மட்டுமே மலேசிய சிறை இலாகாவின் துணை இயக்குநர் பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கௌசல்யா தேவி.

சவால் மிக்க சேவையில் ஈடுபட்டு வரும் இவருக்கு மூன்று பிள்ளைகள். நம்முடைய வாழ்த்துகள். நலமாய் பயணிக்க வேண்டுகிறோம். இவரைப் பற்றிய முழுமையான கட்டுரை தமிழ் மலர் நாளிதழில் விரைவில் இடம் பெறும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

சான்றுகள்:

1. https://www.utusan.com.my/mega/rona/kausalya-seronok-di-penjara-1.201501

2. http://www.prison.gov.my/portal/page/portal/mobile/beritaterkini?fac_next_page=htdocs/beritaTerkini/ViewBerita.jsp?id=3211

3. https://www.facebook.com/jabatanpenjaramalaysia/videos/1571529049523808/?v=1571529049523808

இவரைப் பற்றிய காணொலி:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *