துணிச்சலுடன் சங்கிலி பறிப்பு குற்றவாளியை மடக்கிப் பிடித்த M.தனலஷ்மி அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னை, காட்டுப்பாக்கம், விஜயலெட்சுமி நகர், எண்.1/2 என்ற முகவரியில் M.தனலஷ்மி, வ/50, க/பெ.மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 27.07.2019 அன்று இரவு 09.30 மணியளவில் கடைக்கு சென்று வீட்டுக்கு செல்ல இந்திராநகரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக TN 05 E 6288 பதிவெண் கொண்ட Splendor + இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தனலஷ்மியிடம் முகவரி கேட்பது போல நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்ப முயன்றவரை தனலஷ்மி பிடித்தபோது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனலஷ்மியின் கையில் வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார். எனினும், இரத்தக்காயத்தையும் பொருட்படுத்தாமல் கொள்ளையனை இறுக்கமாக பிடித்துக்கொண்டு அருகிலிருந்த பொதுமக்களின் உதவியுடன் சங்கிலி பறிப்பு குற்றவாளியை பிடித்து T-12 பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து பூந்தமல்லி போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து பிடிபட்ட நபரை கைது செய்து விசாரணை செய்ததில் பிடிபட்ட குற்றவாளியின் பெயர் சிவகுமார், வ/40, த/பெ.சுப்பிரமணியன், பரணிபுத்தூர், மாங்காடு என்பதும், அவரிடமிருந்து தங்கச்சங்கிலி மற்றும் மேற்படி இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற சங்கிலி பறிப்பு குற்றவாளியை துணிச்சலாக பிடித்த M.தனலஷ்மி அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் இன்று (30.07.2019) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்