காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலிலுள்ள அத்திவரதரின் திருவுருவ சிலை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீரிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளிப்பது வழக்கம். அதன்படி ஜூலை 1ம் தேதியிலிருந்து வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக அத்திவரதர் வைக்கப்பட்டிருந்தார்.
காஞ்சிபுரம் குளத்திலிருந்து எடுக்கப்படும் அத்திவரதர் மொத்தம் 48 நாட்கள் பக்தர்களுக்குத் தரிசனம் தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 24 நாட்கள் சயன திருக்கோலத்திலும் 24 நாட்கள் நின்ற திருக்கோலத்திலும் காட்சி தருவார் என அறிவிக்கப்பட்டிருந்ததது.
அத்திவரதரை நிரந்தரமாக தரிசனத்திற்கு வைக்க வேண்டும், கூடுதலாக 48 நாட்கள் தரிசனத்திற்கு வைக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துவரும் நிலையில், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17-ம் தேதி அத்திவரதரின் திருவுருவம் மீண்டும் அனந்தசரஸ் குளத்தின் நீருக்குள் வைக்கப்படும் என காஞ்சிபுரம் ஆட்சித் தலைவர் பொன்னைய்யா நேற்று அறிவித்தார்.
திருவுருவம் குளத்திற்குள் வைக்கப்படும்போது கோவிலின் அர்ச்சகர்கள், ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் கோவிலுக்குள் அனுமதியில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதாவுடன் சேர்ந்து அத்திவரதரை இன்று தரிசனம் செய்தார்.
வருகின்ற 16-ந் தேதி வரை மட்டும் அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால், நாட்கள் நெருங்க நெருங்க லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். வருகின்ற 17-ந் தேதி அன்று வேத மந்திரங்கள் முழங்க கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் உள்ளே மீண்டும் அத்திவரதர் வைக்கப்படுகிறார். என அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.