தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது.
விழாவிற்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழா மலரை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை ப.தனபால் பெற்றுக்கொண்டார்.
விழாவில், கலைஞர்களுக்கு ‘கலைமாமணி’ விருது, தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் அகில இந்திய விருதாளர்களுக்கு சான்றிதழ், காசோலை, பொற்கிழி, கேடயம் ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார். வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு அவர்கள் அமர்ந்த இடத்திலேயே
வயது முதிர்ந்த கலைஞர்கள் 20 பேருக்கு மேடையில் இருந்து கீழே இறங்கிச்சென்று விருதுகளையும், சான்றிதழ்களையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
எழுத்தாளர் பிரிவில் ‘கலைமாமணி’ விருது பெற்ற மணவை பொன் மாணிக்கம் எம்.ஜி.ஆர். பற்றி 2 நூல்களை எழுதியுள்ளார். தூர்தர்ஷனில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி கவிஞர் பாலரமணி, டாக்டர் அமுதகுமார், லதா ராஜேந்திரன் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பு கொடுத்ததற்காக ‘கலைமாமணி’ விருதுகளை பெற்றுள்ளனர்.
நடிகர்கள் பாண்டியராஜன், சரவணன், ஸ்ரீகாந்த், சசிகுமார், கார்த்தி, விஜய் ஆண்டனி, பிரசன்னா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பிராமையா, சூரி, பாண்டு, சிங்கமுத்து, இயக்குனர் ஹரி, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், நடிகைகள் வைஜெயந்தி மாலா, நளினி, குட்டி பத்மினி, காஞ்சனா, கானா பாலா, கானா உலகநாதன், பரவை முனியம்மா, பாடகர் வேல்முருகன் உள்பட திரையுலகை சேர்ந்த பலர் விருதை பெற்றனர். நடிகை பிரியாமணிக்கான விருதை அவருடைய தாயாரும், நடிகர் பிரபுதேவா விருதை அவருடைய தந்தையும் பெற்றுக்கொண்டனர். திருநங்கை சுதாவும் கலைமாமணி விருது பெற்றார். நடிகர் விஜய் சேதுபதி, பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் விழாவில் பங்கேற்கவில்லை.
விழாவில் அமைச்சர் க.பாண்டியராஜன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் தேவா ஆகியோர் ‘கலைமாமணி’ விருது பெற்றவர்களை வாழ்த்தி பேசினார்கள். நிறைவாக கலை பண்பாட்டுத்துறை கமிஷனர் (பொறுப்பு) க.பணீந்திர ரெட்டி நன்றி கூறினார். விழாவில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்பட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள், கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்