காஞ்சிபுரம் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்.!!

தமிழகம்

காஞ்சிபுரம் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்.!!

கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் அத்திவரதர் வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அங்குள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஜூலை 31-ந்தேதி வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், பின்னர் கடந்த 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்தார்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளா, மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து அத்திவரதரை தரிசித்தனர். அத்திவரதரை சயன கோலத்தில் 43 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கடைசி மற்றும் 47-வது நாளான நேற்று 3.50 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்தனர். தரிசனம் நடைபெற்ற 47 நாட்களில்

நேற்று வரை அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை அத்திவரதருக்கு பரிகார பூஜை நடைபெற்றது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சாம்பிராணி தைலம் உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் அத்திவரதர் சிலைக்கு பூசப்பட்டது.

நேற்று இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்பட்டது. குளத்தில் உள்ள அத்திவரதர் மண்டபத்தின் கீழ் உள்ள அறையில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டது. அதன்பிறகு குளத்தில் வழக்கம்போல் நீர் நிரப்பப்பட்டது.

முன்னதாக சுமார், 5 மணியளவில், அத்திவரதர்- உற்சவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் வசந்தமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் சயன கோலத்தில் வைக்கப்பட்டார். அனந்தசரஸ் குளத்தில் ஜலவாசம் செய்யும் அத்திவரதர், அடுத்த 40 ஆண்டுகளுக்கு பிறகு (2059-ம் ஆண்டு) மீண்டும் அருள்பாலிக்க வருவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *