நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.!!
உலக பிரசித்தி பெற்ற நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பசலிக்கா அந்தஸ்து பெற்ற பேராலயமாகவும், உலகப் புகழ்பெற்ற கிறிஸ்தவ தலமாகவும் விளங்குகிறது வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம். கீழை நாடுகளின் லூர்து என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டுப் பெருவிழா 10 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
அதன்படி, நிகழாண்டில் இவ்விழா வியாழக்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பர் 8-ஆம் தேதி மாதா பிறந்த நாளுடன் நிறைவடைகிறது. இவ்விழாவையொட்டி, புனித ஆரோக்கிய அன்னையின் உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஊர்வலம் நடைபெற்றது.
மாலை 5.40 மணிக்கு பேராலயத்திலிருந்து இறைப் புகழ்ச்சிப் பாடல்களுடன் மாதா திருத்தேர் பவனி வர நடைபெற்ற இந்த ஊர்வலம் கடற்கரை சாலை, ஆரியநாட்டுத் தெரு, கடைவீதி வழியாகச் சென்று பேராலயத்தை வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் எம்.தேவதாஸ் அம்புரோஸ் திருக்கொடியை புனிதம் செய்வித்தார். தொடர்ந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் மரியே வாழ்க என முழக்கமிட 6.30 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது.
தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா. பெஞ்சமின், நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், ஆலய நிர்வாகிகள் உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.